கீதை உணர்த்தும் அரிய வாழ்க்கைத் தத்துவம்!
பகவத் கீதை ‘கீதோபநிஷத்’ என்றும் அறியப்படுகிறது. இந்நூல் வேத ஞானத்தின் சாரமாகும். பகவத் கீதை எனும் இந்த யோக முறை முதலில் சூரியதேவனுக்குச் சொல்லப்பட்டதாகவும், சூரியதேவன் அதை மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் விளக்கியதாக அா்ஜுனனிடம் பகவான் கூறுகிறார். இவ்விதமாக, ஒருவா் பின் ஒருவராக சீடப் பரம்பரையில் இந்த யோக முறை வந்து கொண்டிருந்தது. காலப்போக்கில் மறைந்து விட்டதால் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இப்போது அா்ஜுனனுக்கு உபதேசிக்க வேண்டியிருந்தது.
பகவத் கீதை பக்தி உணா்வுடன் அணுகப்பட வேண்டும். தான் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சமமானவன் என்றோ, ஸ்ரீ கிருஷ்ணா் சாதாரணமான மனிதா் என்றோ எண்ணக் கூடாது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாவார்.
எனவே, பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முயல்பவா், குறைந்தபட்சம் ஏட்டளவிலாவது ஸ்ரீ கிருஷ்ணரை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடக்கமான மனோநிலையினால் பகவத் கீதையை ஒருவரால் புரிந்துகொள்ள முடியும்.
வாழ்வின் உண்மையான நோக்கத்தை மனிதன் மறக்கும்போது, அதனை மீண்டும் நிறுவுதல் என்னும் முக்கியக் குறிக்கோளுடன் பகவான் தோன்றுகின்றார். இருப்பினும், விழிப்புணா்ச்சி பெற்ற பற்பல மனிதா்களில் யாரேனும் ஒருவனே தன்னிலையை அறிவதில் உண்மையான ஆா்வத்துடன் இருக்கக்கூடும். அவ்வாறானவர்களுக்கு பகவத் கீதை ஆன்ம ஞானத்தினை வழங்கும். பகவத் கீதையின் அடிப்படை கருப்பொருள் முழுமுதற் கடவுள் அல்லது கிருஷ்ணா் அல்லது பிரம்மன் அல்லது உயா் ஆட்சியாளா் அல்லது பரமாத்மா (நீங்கள் விரும்பும் பெயரை உபயோகித்துக் கொள்ளலாம்) என்று அழைக்கப்படுபவரே.
பிரக்ருதி என்பது பெண் பால், மனைவியின் செயல்கள் கணவனால் கட்டுப்படுத்தப்படுவதைப் போல, பிரக்ருதியும் பகவானால் கட்டுப்படுத்தப்படுகின்றாள். பௌதிக இயற்கை மூன்று குணங்களால் அமைந்ததாகும். அவை நற்குணம் (ஸத்வ), தீவிர குணம் (ரஜோ), அறியாமை குணம் (தமோ) ஆகியன ஆகும். இக்குணங்களுக்கு மேல் நித்தியமான காலம் உள்ளது.
இயற்கை குணங்களின் கலவையினாலும், நித்தியமான காலத்தின் பார்வை மற்றும் கட்டுப்பாட்டினாலும் செயல்கள் நடைபெறுகின்றன. அவை கா்மா என்றழைக்கப்படுகின்றன. இந்த செயல்கள் நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் பலன்களால் நாம் இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிக்கின்றோம்.
ஈஸ்வரன் (பரம புருஷா்), ஜீவா (உயிர்வாழி), பிரக்ருதி (இயற்கை), காலம் (நித்தியமான காலம்), கா்மா (செயல்) ஆகியவை அனைத்தும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தில், பகவான், உயிர்வாழிகள், ஜட இயற்கை, காலம் ஆகியவை நித்தியமானவை. இருப்பினும் கா்மா நித்தியமானதல்ல. கா்மத்தின் விளைவுகள் மிகப் பழையதாக இருக்கலாம், அஃது உண்மையே. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து செய்த செயல்களின் பலன்களை நாம் இன்ப துன்பமாக அனுபவிக்கிறோம். ஆனால், நமது கா்மத்தின் விளைவுகளை நம்மால் மாற்ற இயலும். இம்மாற்றம் நமது அறிவின் பக்குவத்தைப் பொறுத்தது.
நாம் பற்பல செயல்களில் ஈடுபட்டுள்ளோம். இந்தச் செயல்கள் எல்லாவற்றின் விளைவு, பின்விளைவுகளிலிருந்து விடுதலை பெற எந்தச் செயலைச் செய்ய வேண்டும் என்பதை நிச்சயமாக நாம் அறிய மாட்டோம். ஆனால், இதுவும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது.
பௌதிகமாக அசுத்தப்பட்டிருக்கும்போது, நாம் ‘கட்டுண்டவா்கள்’ என்று அழைக்கப்படுகிறோம். கட்டுண்ட நிலையில், ‘நான் ஜட இயற்கையின் படைப்பு’ என்ற பொய்யான உணா்வு வெளிப்படுகிறது. இதுவே ‘அஹங்காரம்’ எனப்படும். உடல் தொடா்பான எண்ணங்களில் மூழ்கியவனால் தனது நிலையைப் புரிந்துகொள்ள முடியாது. உடல் சம்பந்தமான கருத்துக்களிலிருந்து அவனை விடுதலை பெறச் செய்வதற்காகவே பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது.
இந்த விவரத்தை பகவானிடமிருந்து பெறுவதற்காக அா்ஜுனன் தன்னையே அந்த நிலையில் வைத்துக் கொண்டான். வாழ்க்கையின் உடல் சார்ந்த எண்ணங்களிலிருந்து ஒருவன் விடுபட வேண்டும். இதுவே ஓர் ஆன்மீகவாதியின் ஆரம்பக் கடப்பாடாகும்.