
‘திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். திதி என்பது பஞ்சாங்கத்தில் உள்ள ஒரு முக்கிய பகுதியாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தொலைவைக் குறிக்கும் அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும்போது திதி ஆரம்பிக்கும். பின்பு சந்திரன் சிறிது சிறிதாக வளர்ந்து ‘சுக்ல பட்சம்’ எனப்படும் வளர்பிறை திதிகளாக மாறும்.
கால ரூபிணியாக விளங்கும் நித்யா தேவியரை அந்தந்த குறிப்பிட்ட நாட்களில் (திதிகளில்) வணங்கி பூஜிக்க சிறந்த பலனைப் பெறலாம். ஒவ்வொரு திதிக்கும் அதன் சிறப்புப் பலன்கள் உண்டு. திதி தேவதைகளை மறவாமல் வழிபட, நம்முடைய வறுமை நீங்கும். அனைத்து சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். ஒவ்வொரு திதிக்கும் அதன் அதி தேவதைகள் உண்டு. அந்தந்த திதிகளில் அந்தந்த அதி தேவதைகளை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
அமாவாசைக்குப் பிறகு வரும் 15 திதிகள் வளர்பிறை (சுக்ல பட்சம்) என்றும், பௌர்ணமிக்குப் பிறகு வரும் 15 திதிகள் தேய்பிறை (கிருஷ்ண பட்சம்) என்றும் அழைக்கப்படும். தர்ம சாஸ்திரப்படி தினமும் காலையில் பஞ்சாங்கத்தை பார்த்து அன்றைய திதியை சொல்வதால் செல்வம் கிடைக்கும்.
வாரத்தை (கிழமையை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தை சொல்வதால் பாவம் விலகும். யோகத்தை சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தை சொல்வதால் காரியம் நிறைவேறும். இப்படி பஞ்ச அங்கங்களையும் சொல்லிவிட்டு அதன் பின்பு ஸ்நானம் செய்து நம்முடைய நித்திய கர்மாக்களை அனுசரிப்பது வாழ்வில் நலனைத் தரும்.
திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம். அவரவர் பிறந்த திதியை தெரிந்து கொண்டு அதற்குரிய வழிபாடுகளை மேற்கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். பிறந்த திதிக்குரிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் சிறப்பான பலன் கிடைக்கும். ஒவ்வொரு திதியும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு உரியதாக கருதப்படுகிறது.
திதி நித்யா தேவி: லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை 'ஸ்ரீ வித்யை' எனப்படும். அந்த தேவியின் அமிர்த கலைகள் 15 பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று 15 நித்யா தேவிகளாக லலிதா பரமேஸ்வரியை சுற்றி வீற்றிருந்து அருள்வதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு திதிக்கும் அதிபதியாக ஒரு தேவதை இருப்பதாக ஐதீகம். இந்த தேவதைகளைத்தான் 'திதி நித்யா தேவி' என்கிறோம். இந்த 15 நித்யா தேவிகளுக்கும் மகா நித்யாவாக அம்பிகையே திகழ்கிறாள். அந்த தேவதைகளுக்கு உரிய மந்திரத்தை கூறி தேவதையை வழிபட, தடைகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
வளர்பிறை திதிக்குரிய தெய்வங்கள்: பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மன், துவிதியை - பிரம்மன், திரிதியை - சிவபெருமான் மற்றும் கௌரி அம்மன், சதுர்த்தி -விநாயகர் மற்றும் எமதர்மன், பஞ்சமி - திரிபுரசுந்தரி, சஷ்டி - செவ்வாய் பகவான், சப்தமி - இந்திரன் மற்றும் ரிஷிகள், அஷ்டமி - கால பைரவர், நவமி - சரஸ்வதி, தசமி - வீரபத்திரர், ஏகாதசி - மகாவிஷ்ணு மற்றும் ருத்ரன், துவாதசி - பெருமாள், திரயோதசி - மன்மதன், சதுர்த்தசி - காளி, பௌர்ணமி – லலிதாம்பிகை.
தேய்பிறை திதிக்குரிய தெய்வங்கள்: பிரதமை - துர்கை, துவிதியை - வாயு பகவான், திரிதியை - அக்னி, சதுர்த்தி - விநாயகர் மற்றும் எமதர்மன், பஞ்சமி - நாக தேவதை, சஷ்டி - முருகப்பெருமான், சப்தமி - சூரிய தேவன், அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்கை, நவமி -சரஸ்வதி, தசமி - துர்கை மற்றும் எமதர்மன், ஏகாதசி - சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணு, துவாதசி - சுக்கிரன், திரயோதசி - நந்தி, சதுர்த்தசி - ருத்ரன், அமாவாசை - காளி மற்றும் பித்ருக்கள்.