
பிரதோஷ காலத்தில் விரதம் இருப்பது, பூஜை செய்வது போன்றவற்றை சிலர் தவறாது செய்து வருவதைக் காண்கிறோம். அவ்வாறு செய்து வருவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
கணவனை இழந்த பெண் ஒருவர் இருள் சூழ்ந்த காட்டில் அவரது குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு குழந்தை அங்கு அழுது கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவர், குழந்தையை தூக்குவதற்கு யாரும் வரவில்லை என்பதை அறிந்தவுடன், ‘அந்தக் குழந்தையை தான் எப்படி எடுத்து வளர்க்க முடியும்? இந்த ஒரு குழந்தையை வளர்ப்பதற்கே தன்னால் இயலவில்லை. அதனுடன் சேர்த்து இன்னொரு குழந்தையா?’ என்று யோசித்தாள். ஆனால், அழும் அந்தக் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு செல்வதற்கும் அந்தத் தாய்க்கு மனம் இடம் தரவில்லை.
அப்பொழுது அங்கு வந்த ஒரு முனிவர், ‘அழுது கொண்டு இருக்கும் அந்தக் குழந்தை ஒரு அரச குமாரன் என்றும், அவனது தந்தை விதர்ப்ப நாட்டு மன்னன் சத்யரதனை, பக்கத்து நாட்டு மன்னன் போரில் தோற்கடித்து அவனைக் கொன்று, நாட்டையும் கைப்பற்றிக்கொண்டான்’ என்று தெரிவித்தார். மேலும், அவனது மனைவி இந்த இளம் குழந்தையை எடுத்துக்கொண்டு கானகம் வழியாக செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் எடுக்க ஆற்றில் இறங்கினாள். அப்பொழுது ஒரு முதலை அவளை விழுங்கி விட்டது. அவளது குழந்தைதான் இது. இதனை நீ எடுத்து முறைப்படி வளர்த்து வா என்று ஆணையிட்டார்.
முனிவரின் வாக்கை தட்டத் முடியாமல் அந்தப் பெண் அக்குழந்தையையும் எடுத்துச் சென்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் 'ஏகசக்கரபுரம்' என்னும் ஊரில் தங்கி வளர்த்து வந்தார்.
அப்படி வளர்த்து வரும் வேளையில் ஒரு நாள் சாண்டில்யர் என்னும் முனிவரை தரிசித்தார். அப்பொழுது அரசனுக்கு பிறந்த இக்குழந்தைக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று வினவினாள்.
அதற்கு முனிவர், ‘இவனின் தந்தை முற்பிறப்பில் பாண்டிய மன்னனாய் இருந்ததாகவும், திடீரென்று போர் ஏற்பட தான் செய்து கொண்டிருந்த பிரதோஷ பூஜையை பாதியில் கைவிட்டு சிவ தோஷத்திற்கு ஆளாகி அடுத்த பிறவியிலும் துர்மரணம் அடைந்தார். அந்த சிவ தோஷமே குடும்பத்திற்கு வசதி குறைவை கொடுத்தது என்றும் கூறினார்.
சர்வேஸ்வரரான பரமேஸ்வரனை பிரதோஷ சமயத்தில் பூஜிப்பதே ஸர்வ மங்களத்தை கொடுக்கும் என்றும் முறைப்படி அந்த பூஜையை அனுஷ்டிக்கும் முறைகளையும் கூறி அருளினார் சாண்டில்ய முனிவர்.
அதையடுத்து, முனிவரின் வாக்குப்படி அக்குழந்தைகள் இருவரும் முறைப்படி பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து வந்தனர். பத்தாம் நாள் இரு குழந்தைகளும் நீராட ஆற்றிற்கு சென்றபொழுது அந்தப் பெண்ணின் குழந்தைக்கு ஒரு புதையல் கிடைத்தது. அதை அவன் தனது தாயிடம் சேர்ப்பிக்க, அதை இருவரும் பகிர்ந்து எடுத்துக் கொள்ளும்படி கூறினார் அந்தத் தாய். ஆனால், அரச குமாரனுக்கு அதை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லை.
சில நாட்கள் கழித்து ராஜகுமாரன் காட்டிற்கு செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு கந்தர்வ குமாரியை சந்தித்து, அவள் மேல் ஆசை கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். கந்தர்வ குமாரி தனது தந்தையிடம் அவளது எண்ணத்தை வெளியிட்டாள்.
அவளது தந்தை கந்தர்வராஜன் சர்வேஸ்வரரான பரமேஸ்வரன் குடி கொண்ட மகா கைலாசம் சென்று நந்திதேவர் அனுமதி பெற்று, ஈசனை தரிசித்து அவரிடம் நடந்ததை தெரிவித்தான்.
இதைக் கேட்ட உமாபதி, உனது பெண்ணை விரும்புகிறவன் மகா சிவ பக்தன். விதிவசத்தால் தனது நாட்டை இழந்து விட்டான். அவனுக்கு உனது குமாரியை திருமணம் செய்து கொடுத்து இழந்த அவனது நாட்டையும் மீட்டுக் கொடு’ என ஆணையிட்டார்.
சர்வேஸ்வரன் சிவபெருமான் கட்டளையை ஏற்று கந்தர்வராஜன் தனது குமாரியை தர்ம குப்தனுக்கு ஓர் நல்ல தினத்தில் திருமணம் செய்து கொடுத்து, அவனது நாட்டையும் மீட்டுக் கொடுத்தான்.
தர்ம குப்தனும் தனது உடன்பிறவா சகோதரன் மேல் கொண்ட அன்பால் அவனையும் மந்திரியாக நியமித்து, தனது வளர்ப்பு தாயிடமும் அளவில்லா அன்பு கொண்டு சிறந்த முறையில் ஆட்சியும், சிவபூஜையும் செய்து நற்பெயர் பெற்றான் என்பது கதை.
தினமும் மாலை நாலரை முதல் ஆறு மணி வரை பிரதோஷ நேரமாகும். இது தின பிரதோஷம் எனப்படும். சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரக்ஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனிலும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள் என்பது நம்பிக்கை. தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால் பிரதோஷ வழிபாட்டை செய்பவர்கள் எந்தவித குறையும் இன்றி முறைப்படி அதனைச் செய்து, எண்ணியதை எண்ணியாங்கு பெறுவோமாக!