
லாலா லக்ஷ்மிசந்த் சாந்தாக்ரூஸில் வசித்தபோது ஒரு கனவு கண்டார். அதில் தாடியுடன் கூடிய ஒரு பெரியவர் தனது பக்தர்கள் புடைசூழ நின்று கொண்டிருப்பதைக் கண்டார். சில நாட்களுக்குப் பிறகு தாஸ்கணுவின் கீர்த்தனம் ஒன்றிற்கு சென்றார். அங்கே ஷீரடி பாபாவின் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தைப் பார்த்த லாலா லக்ஷ்மிசந்த் ஆச்சரியப்பட்டுப்போனார். தான் சில நாட்களுக்கு முன்பு கனவில் கண்ட பெரியவர் ஷீரடியிலுள்ள பாபா என்னும் மகான் என்பதைப் புரிந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் ஷீரடி செல்ல தீர்மானித்தார்.
பாபா தானே ஷீரடிக்கு தனது பக்தர்களை இழுக்கிறார்? லாலா மனதில் ஷீரடி போக வேண்டும் என்னும் எண்ணம் வலுப்பெற்றதால், பாபா அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார் என்றுதானே பொருள்? அதே நாள் இரவு 8 மணியளவில் லாலாவின் நண்பர் சங்கர் ராவ் அவர் வீட்டுக்கு வந்தார். தான் ஷீரடிக்குச் செல்ல இருப்பதாகவும் லாலாவிற்கு தன்னுடன் வருவதற்கு சம்மதமா என்றும் கேட்டார். லாலாவின் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா? நிச்சயம் வருவதாக சங்கரிடம் சொன்ன அவர், கையில் பயணத்திற்கு காசு இல்லாததால், தனது மாமாவிடமிருந்து 15 ரூபாயை கடன் வாங்கிக் கொண்டு சங்கருடன் ஷீரடிக்குப் புறப்பட்டார்.
அவர்கள் கோபர்கானிலிருந்து பயணித்து ஷீரடியை வந்து அடைந்து மசூதிக்குச் சென்று பாபாவை வணங்கினர். லக்ஷ்மிசந்த் பாபாவைக் கண்டதும் அகமகிழ்ந்துபோனார். அவர் நெஞ்சம் பக்தியால் நெகிழ்ந்தது. தான் போக வேண்டும் என்று நினைத்தவுடன் எப்படி பாபா தன்னுடைய ஷீரடி யாத்திரைக்கு வழி வகுத்துத் தந்திருக்கிறார் என்பதை உளமார உணர்ந்து உவகை அடைந்தார்.
நாசிக் ஜில்லாவைச் சேர்ந்த வணியில் ஸ்ரீ சப்தசிருங்கி தேவி கோயில் பூஜாரியாக காகாஜி வைத்யா என்பவர் இருந்தார். அவர் வாழ்க்கையில் தொடர்ந்து வந்த கஷ்டங்களாலும் கவலைகளாலும் மனம் துயருற்று தேவியைப் பிரார்த்தித்தபோது தேவி அவர் கனவில் தோன்றி, "நீ பாபாவிடம் செல். உனது மனம் அமைதியடையும்" என்றாள். காகாஜி தேவி குறிப்பிட்ட பாபா, சிவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து 'திரியம்பக்'கிற்குச் சென்றார். அப்படியும் அவர் மனது அமைதியடையாதபோது, தேவி திரும்பவும் அவர் கனவில் தோன்றி, "நான் குறிப்பிட்டடது ஷீரடியைச் சேர்ந்த ஸ்ரீ சாயி சமாரத்தை. நீ அங்கே செல்!" என்றாள். எப்படி ஷீரடிக்குப் போவது என்று ஒன்றும் புரியாமல் அவர் கவலையுடன் இருந்தபோது, ஷீரடியில் பாபா காகாஜியின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
ஷாமா என்று பாபாவால் பிரியமுடன் அழைக்கப்பட்ட மாதவ்ராவ் தேஷ்பாண்டேயின் குல தெய்வம் வணியிலுள்ள ஸ்ரீ சப்தசிருங்கி தேவி. ஷாமா இளம் வயதில் நோய்வாய்ப்பட்டபோது அவரது தாயார் அவரை தேவியின் சன்னிதிக்கு அழைத்து வருவதாக வேண்டிக் கொண்டாள். தாயாருக்கே ஒரு முறை ஸ்தனங்களில் ஏதோ சரும வியாதி ஏற்பட்டபோது ஒரு ஜோடி வெள்ளி ஸ்தனங்களை தேவிக்கு சமர்ப்பிப்பதாக பிரார்த்திக்கொண்டாள். தாயார் தனது மரணப் படுக்கையில் ஷாமாவை அருகில் அழைத்து இந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றும்படி சத்தியம் வாங்கிக்கொண்ட பின் உயிர் நீத்தாள். இருந்தாலும் முப்பது வருடங்கள் கடந்த பின்னரும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக இல்லை.
குலதெய்வத்திற்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக்கடனை நிறைவேற்றாததால்தான் தங்களுக்கு வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்கள் வருகிறதென்று ஷாமாவின் தம்பி ஒரு ஜோசியர் மூலமாக அறிந்து கொண்டார். அவர் ஷாமாவிடம் இதைப் பற்றி கலந்தாலோசித்தபோது ஷாமா, விரைந்து ஒரு ஜோடி வெள்ளி ஸ்தனங்களை தயார் செய்து பாபாவின் முன் வைத்து தன்னை இந்த நேர்த்திக்கடனிலிருந்து விடுவிக்கும்படி வேண்டிக் கொண்டார். ஏனென்றால் ஷாமாவைப் பொறுத்தவரை பாபாவே அவருக்கு குலதெய்வம்! ஸ்ரீ சப்தசிருங்கி தேவி! ஆனால், பாபா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஷாமாவிடம் உடனே அதை வணிக்குச் சென்று ஸ்ரீ சப்தசிருங்கி தேவிக்கு சமர்ப்பிக்கச் சொன்னார்.
ஷாமா வணிக்குச் சென்று அக்கோயில் பூஜாரியைச் சந்தித்து, தான் ஷீரடியிலிருந்து வருவதாகச் சொன்னதும் காகாஜி வைத்யா அவரை அப்படியே கட்டியணைத்துக் கொண்டார். ‘பாபாவைக் காண்போமா?’ என்று அவர் அவ்வளவு ஏங்கிப் போயிருந்தார். ஷாமாவின் வேண்டுதல்களை நிறைவேற்றிய பின் அவர்கள் ஷீரடிக்குப் புறப்பட்டனர். பாபாவை வெறுமனே தரிசித்தபோதே தனது மனதின் சலனங்கள் அடங்கி அமைதியாவதை உணர்ந்த காகாஜி மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.
'என்னே பாபாவின் மகிமை! என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. வெறும் தரிசனம் ஒன்றே எனது மன சஞ்சலத்தைத் தீர்த்து சாந்தி அளிக்கிறதே? இதுவல்லவோ தரிசன மகிமையென்பது?' என்று ஆனந்தப்பட்டார் காகாஜி. ஷாமாவுக்கும் தான் வணிக்கு விரைந்து அனுப்பப்பட்டதன் பொருள் இப்போதுதான் விளங்கியது. பக்தன் தன்னை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்துவிட்டு அவனது வருகைக்காகக் காத்திருக்கும் பகவானைப் பார்த்து மெய்சிலிர்த்து போய் இருவரும் பாபாவை பணிந்து வணங்கினர்.