
கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள மங்களா தேவி ஆலயம் பல சிறப்புகள் பெற்றது. இந்தக் கோயில் மங்களூருவின் ரயில் நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், போலரா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் தாயாரான மங்களா தேவியின் பெயராலேயே இந்த ஊர் மங்களூர் என்று அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியக் கோயில் கட்டிடக் கலையின் தலைசிறந்த படைப்புக்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஆலயத்தின் சிறப்புகள்: இந்தக் கோயில் கேரள பாணியில் மரக் கட்டமைப்புகள், சாய்வான கூரைகள், சிற்பங்கள் போன்றவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவின் மையப் புள்ளியாக இந்தக் கோயில் உள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். திருமணமாகாத பெண்களுக்கான சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் இங்குண்டு. கன்னிப்பெண்கள் மங்கள பார்வதி விரதம் இருந்து அம்மனை வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் ஆகும் என்கிற நம்பிக்கை உள்ளது. அம்பிகையின் குங்குமப் பிரசாதத்தை 21 நாட்கள் தொடர்ந்து அணிந்து வர நல்ல பலன்கள் கிட்டும்.
இக்கோயில் கருவறையில் மங்களா தேவியின் சிலை அமர்ந்த நிலையில் காட்சி தருகிறது. அம்பாள் திருச்சிலை நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மங்களா தேவி அம்மன் காலை நேரங்களில் லிங்க வடிவத்திலும் பிற சமயங்களில் அம்பாள் வடிவத்திலும் காட்சி தருகிறார். இங்கு நாகராஜனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. மக்கள் அம்பிகைக்கு இளநீர் நிவேதனம் செய்து தங்களது சர்ப்ப தோஷத்தை நீக்கிக் கொள்கிறார்கள்.
பரசுராமர் எழுப்பிய ஆலயம்: தற்போது மங்களா தேவி கோயில் அமைந்துள்ள இடம், அன்னை மங்களா தேவி அந்தகாசுரன் என்கிற அரக்கனை வென்ற இடமாக நம்பப்படுகிறது. சத்திரியர்களை வென்று, தீமையை அழித்து கடலில் இருந்து நிலத்தை மீட்டெடுக்கவும் வெற்றியின் சின்னமாக ஒரு கோயிலை எழுப்பவும் பகவான் மகாவிஷ்ணு அவதாரம் எடுப்பார் என்று தேவி அறிவித்தார்.
அதன்படி, மகாவிஷ்ணுவின்ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரமெடுத்த பகவான், சத்திரிய மன்னர்களை அழித்த பிறகு தவம் செய்ய ஒரு இடத்தைத் தேடினார். சிவபெருமானிடம் தனக்குத் தவம் செய்ய ஒரு நல்ல இடத்தைத் தேடித் தரும்படி கூறி பிரார்த்தனை செய்தார். கடலில் இருந்த நிலத்தை மீட்டெடுக்கும்படி சிவபெருமான் பரசுராமருக்கு அறிவுறுத்தினார். அதன்படி பரசுராமர் தனது கோடரியை கடலில் எறிந்தார். அதைத் தொடர்ந்து கடல் பின்வாங்கி ஒரு புதிய நிலப்பகுதியை வெளிப்படுத்தியது. அது ‘பரசுராம சிருஷ்டி’ என்று அறியப்பட்டது. அதுதான் இன்றைய மங்களூர் என்று புராணம் கூறுகிறது.
அம்பிகையின் கட்டளைப்படி பரசுராமர் அந்த இடத்தில் ஒரு புனிதக் கோயிலை கட்டினார். அதில் சிவனையும் சக்தியையும் குறிக்கும் ஒரு லிங்கத்தையும் அம்மனை கௌரவிக்கும் வகையில் ஒரு புனித பாத்திரத்தையும் நிறுவினார். எனவே, இன்றும் இக்கோயில் மங்களா தேவி என்ற பெயருடன் விளங்குகிறது.
பிரம்மாண்டமான ஆலயம்: பல நூற்றாண்டுகளாக இந்தக் கோயில் தாவரங்களால் மூடப்பட்டு சீர்குலைந்துபோனது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் குந்தவர்மன் மங்களூரை தலைநகராகக் கொண்டு துலு நாட்டை ஆண்டு வந்தார். அவர் அலுபா வம்சத்தைச் சேர்ந்தவர். நேபாளத்திலிருந்து மச்சேந்திரநாதர், கோரகநாதர் என்ற இரண்டு முனிவர்கள் மங்களூரை அடைந்தார்கள். மன்னர் குந்தவர்மன் அவர்களை சந்தித்து உரிய மரியாதையை வழங்கினார். அவரது பணிவான உபசரிப்பில் மகிழ்ந்த முனிவர்கள், ‘மங்களூர் ஒரு புனித இடம், கடந்த காலத்தில் துறவிகள் மற்றும் முனிவர்களால் மிகவும் விரும்பப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பகுதி’ என்று தெரிவித்தனர். அத்தலத்தில் பரசுராமர் மங்களா தேவி ஆலயத்தை கட்டினார் என்றும் அவர்கள் கூறினர்.
முனிவர்கள் மன்னர் குந்தவர்மனை அழைத்துச் சென்று கோயில் இருந்த இடத்தில் தோண்டச் சொன்னார்கள். அந்த அகழ்வாராய்ச்சியில், மங்களா தேவியை குறிக்கும் லிங்கமும் தாரா பத்திரமும் கண்டெடுக்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின்படி மங்களா தேவிக்கு மன்னர் ஒரு பிரம்மாண்டமான ஆலயத்தை கட்டினார். அதில் நாகராஜாவிற்கான ஒரு சன்னிதியையும் நிறுவினர். இக்கோயில் மங்களூருவின் மிகவும் புகழ் பெற்ற கோயிலாகும்.