

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று இரவு தூங்காமல் கண் விழித்து இறைவனை நினைத்து பரமபதத்தை விளையாடுவார்கள். கிராமங்களில் இந்த விளையாட்டு இன்றும் பிரபலமானது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபதம் விளையாடுவதற்கான ஆன்மிக காரணங்கள் உள்ளன. பரமபதம் என்பது திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தைக் குறிக்கும். பரமபத வாசலைத் தாண்டிச் செல்வது முக்திக்கு வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.
இந்த விளையாட்டு ஆன்மிக வாழ்க்கையின் பிரதிபலிப்பு. ஏணியின் மூலம் நற்செயல்களால் சொர்க்கம் அடைவதையும், பாம்பால் கீழே விழுவது பாவங்களின் விளைவுகளை உணர்த்துவதையும் குறிக்கிறது. ஏணிகள் நல்ல குணங்களையும், பாம்புகள் தீய குணங்களையும் குறிக்கின்றன. ஏணியில் ஏறுவது ஆன்மிக முன்னேற்றத்தையும், பாம்பால் கீழே இறங்குவது பாவங்களால் ஏற்படும் வீழ்ச்சியையும் உணர்த்துகிறது.
இந்த விளையாட்டு வைகுண்டம் செல்வதற்கான பாதையைக் குறிக்கிறது. இது பூலோக வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களையும், நல்ல மற்றும் கெட்ட செயல்களின் விளைவுகளையும் விளக்குகிறது. சொர்க்கத்தை அடைவதற்கான பாதையை நமக்கு நினைவூட்டுகிறது. அதாவது நல்ல செயல்களை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பதை நினைவூட்டுகிறது.
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்து பரமபதம் விளையாடுபவர்களுக்கு பகவானின் அருளால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் 'பரமபத வாசல்' எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த வாசலைத் தாண்டி செல்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பரமபதம் விளையாட்டு என்பது இந்த பரமபத வாசலைக் கடந்து வைகுண்டம் செல்லும் ஆன்மிகப் பயணத்தின் சுருக்கமான வடிவமாகும். வருடத்திற்கு ஒருமுறை வரும் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் இந்த பரமபதம் விளையாட்டை விளையாடுவார்கள். அந்த விளையாட்டை இரவு முழுவதும் கண் விழித்து விளையாடுவார்கள். பாம்பும் ஏணியும் மாறி மாறி நம் வாழ்க்கையை பதம் பார்க்கும். கஷ்ட நஷ்டங்கள் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதுதான் இந்த பரமபத விளையாட்டு.
இந்த விளையாட்டு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே விளையாடப்படுவது அல்ல. பகவானின் திருவிளையாடல்களைத் தெரிந்து கொள்ளவும், நமது பாவத்தினை போக்கிக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொண்டு பரமபதமாகிய மோட்சத்தினை அடைவதற்கு உரிய பக்திப் பாதையை காட்டும் விளையாட்டு இது.