
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியத்தில் கரந்தமலைத் தொடரின் மலை உச்சியில், அழகிய வனத்தின் மத்தியில் அமைந்துள்ளது திருமலைக்கேணி ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில். இவ்விடத்தில் வற்றாத சுனையொன்று உள்ளது. பொதுவாக, குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோயில்களில் சுவாமியை தரிசிக்க படியேறி செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கி சென்று தரிசனம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்தக் கோயிலை, 'கீழ் பழனி' என்றும் அழைக்கிறார்கள்.
இந்தக் கோயில் அமைந்த விதம் பற்றி ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர் ஒரு முருகன் கோயில் கட்ட விருப்பம் கொண்டார். ஒரு நாள் வேட்டைக்காக இந்த வனப்பகுதிக்கு வந்தபோது இங்கிருக்கும் சுனையில் நீர் பருகி சற்று கண் மூடி ஓய்வெடுத்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய முருகன், அந்த சுனைக்கு அருகிலேயே தனக்கு ஒரு கோயில் எழுப்பும்படி கூறினான். மன்னரும் அவ்வாறே அங்கு ஒரு கோயிலை எழுப்பினார்.
வனத்திற்கு நடுவில் அமைந்த இந்த மலைக்கோயிலில் காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமடைந்தது. பூஜைகளும் நின்று போயின. பிரதான மூலவர் சிலை பின்னமடைந்ததால், வேறொரு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், எவ்வளவு முயன்றும் பின்னமடைந்த சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே, அதன் மேல் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை அங்கு பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறாக, கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என்று இரண்டடுக்காக இந்தக் கோயில் அமைந்துள்ளது. 1979ல் கிருபானந்த வாரியார் சுவாமிகள் இந்தக் கோயிலை சீரமைக்கும் பணியை செய்தார்.
மேலடுக்கிலுள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கிலுள்ள ஆதி முருகன் மீதும் விழும்படியாக இந்த சன்னிதியை கட்டமைத்துள்ளனர். இதற்காக மேலேயுள்ள முருகன் பாதத்திற்கு கீழே ஒரு துளையும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் கருவறையில் முருகன், பாலகனாக அருள்புரிகிறார். இவரது வலக்கரத்தில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி தலையில் கிரீடத்துடன் காட்சியளிக்கிறார். இந்த பாலகன் முருகனுக்கு தினமும் ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. இங்கே வள்ளி, தெய்வானை முருகனுடன் இல்லை. ஆனால், முருகன் சன்னிதிக்கு இருபுறமும் இரு தீர்த்தங்கள் உள்ளன.
இதை வள்ளி, தெய்வானை தீர்த்தம் என்று சொல்கிறார்கள். அதிலும் வள்ளி தீர்த்தம் கிணறு வடிவத்தில் உள்ளது. மலையின் நடுவே உள்ள கிணறு என்பதால் இந்த இடம் 'மலைக்கேணி' என்று பெயர் பெற்றது என்று சொல்கிறார்கள். இந்தத் தீர்த்தங்களில் வள்ளியும் தெய்வானையும் தேனிக்கள் வடிவில் பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் ஏற்பட பக்தர்கள் இங்கேயுள்ள வள்ளி, தெய்வானை தீர்த்தங்களின் நீரை பக்தியோடு பருகுகிறார்கள்.
சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, ஐப்பசி கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தை கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களில் இக்கோயிலில் விழாக்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. இத்தலம் வந்து தினமும் இராஜ அலங்காரத்துடன் காட்சியருளும் இந்த பாலகன் முருகனை வழிபட்டால் பொறுப்பான தலைமைப் பதவிகள் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.