காரைக்கால் அம்மையார் தலையால் நடந்ததன் மர்மம்: சம்பந்தரின் தயக்கமும், சிவனின் கேள்வியும்!

karaikalammaiyar, Sri Natarajar
karaikalammaiyar, Sri Natarajar
Published on

றைவனை நினைத்து உருகி, போற்றிப் பாடியவர்கள் ஏராளம். சிவபெருமானை வணங்கி தேவாரப் பதிகங்களைப் பாடியவர்களில் திருஞானசம்பந்தரும் ஒருவர். அப்படியிருக்க, சம்பந்தரின் கனவில் இறைவன் தோன்றி, ‘நம்மைப் பாட மறந்தனையோ?’ எனக் கேட்டார். ஏன் இப்படிக் கேட்டார்? இந்த சம்பவம் எங்கே நிகழ்ந்தது? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

திருவண்ணாமலையில் தங்கி இறைவனை வணங்கிப் போற்றிய சம்பந்தர், அங்கிருந்து திருவோத்தூர், காஞ்சி, திருமாற்பேறு, திருவல்லம் என ஒவ்வொரு தலங்களாக தரிசித்து, திருவாலங்காடு வருகை தந்தார். காரைக்கால் அம்மையார் தமது தலையினால் நடந்த தலமாகிய திருவாலங்காட்டினை, காலால் மிதித்து நடக்க அச்சம் கொண்டு அருகிலிருந்த பழையனூர் என்னும் ஊரில் தங்கினார்.

அவர் ஏன் திருவாலங்காட்டிற்கு நடந்து செல்லத் தயங்கினார்? காரைக்கால் அம்மையார் ஏன் தலையால் நடந்து சென்றார்? இவற்றிற்கான விடையைத் தெரிந்து கொண்டால், சம்பந்தர் பழையனூரில் தங்கிய இரவு என்ன நடந்தது? ஏன் நடந்தது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். தனதத்தர் என்ற வணிகரின் மகளாகப் பிறந்து வளர்ந்த புனிதவதியாரை, தக்க வயதில் பரமதத்தர் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

இதையும் படியுங்கள்:
சிவன் பார்வதிக்கு கொடுத்த இந்த 5 வாக்குறுதிகள் தான் உலகத்தையே தாங்கி நிக்குது!
karaikalammaiyar, Sri Natarajar

ஒரு சமயம் வியாபார நிமித்தம் பரமதத்தரைக் காண வந்த சிலர், இரண்டு மாம்பழங்களை அவருக்குக் கொடுக்கின்றனர். இரண்டு பழங்களையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் பரமதத்தர். சிறிது நேரத்தில் சிவனடியார் ஒருவர் பசியுடன் அவரது வீட்டிற்கு வரவே, அவருக்கு உணவு பரிமாறி, கூடவே தனது கணவர் கொடுத்தனுப்பிய மாம்பழங்களில் ஒன்றையும் பரிமாறுகிறார் புனிதவதியார். சிவனடியாரும் மனமும் வயிறும் நிரம்பி மகிழ்வுடன் செல்கிறார்.

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த பரமதத்தர், தான் கொடுத்தனுப்பிய மாம்பழத்தையும் உணவோடு பரிமாறச் சொல்கிறார். கலக்கத்துடன் பரிமாறுகிறார் புனிதவதியார். மாம்பழம் மிகவும் சுவையாக இருக்கவே, இன்னொரு மாம்பழத்தையும் கொண்டு வரச் சொல்கிறார் பரமதத்தர். தான் பயந்தது போலவே ஆனதை எண்ணித் தவிக்கிறார் புனிதவதியார்.

உடனே எல்லாம்வல்ல இறைவனை வேண்டி நின்று, ‘கயிலாய நாதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கைகளை ஏந்திப் பிரார்த்திக்கிறார். உடனே அவரது கைகளில் புதிதாக ஒரு மாம்பழம் தோன்றியது. இறைவனுக்கு நன்றி சொல்லி, கணவனுக்கு அந்தப் பழத்தை பரிமாறுகிறார். மாம்பழத்தின் ருசியில் மாற்றம் இருப்பதைக் கண்டறிந்து கேட்கிறார் பரமதத்தர். கணவரிடம் பொய் சொல்ல விரும்பாத புனிதவதியார் நடந்ததை விளக்குகிறார்.

பரமதத்தருக்கு அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கண் முன்னால் மீண்டும் மாங்கனியை வரவழைத்துக் காட்டச் சொல்கிறார். ‘ஈசனே, மகேஸ்வரா! மறுபடியும் கனியைத் தந்து அருள்புரியுங்கள். இல்லையெனில் கணவர் என்னை சந்தேகிப்பார்’ என்று கலங்கி நின்றார் புனிதவதியார். அதையடுத்து, மறுபடியும் அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. அதைக் கண்டு பரமதத்தர் பயந்து ஒதுங்கினார்.

இதையும் படியுங்கள்:
பத்மாவதி தாயாரின் காதல் கதை: அவர் திருமலையானை மணந்தது எப்படி?
karaikalammaiyar, Sri Natarajar

கடவுளின் அருள் நிறைந்த புனிதவதியாருடன் இல்லறம் நடத்துவது பாவம் என்று பயந்து, வேறு ஊருக்குச் சென்று வாணிபம் செய்து, செல்வந்தராகி, வேறொரு பெண்ணை மணக்கிறார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு புனிதவதி என்றே பெயர் சூட்டி வளர்க்கிறார்.

பரமதத்தர் பாண்டிய தேசத்தில் இருப்பதை அறிந்து, புனிதவதியாரையும் அழைத்துக்கொண்டு வருகின்றனர் உறவினர்கள். அவர்களிடம் பரமதத்தர் உண்மையான காரணத்தை எடுத்துச் சொல்கிறார். கடவுளின் அன்பைப் பெற்ற புனிதவதியாரைக் கண்டு உறவினர்களும் அஞ்சுகின்றனர். அவரிடம் சகஜமாகப் பழகுவதைத் தவிர்க்கின்றனர்.

‘தனது கணவரும் உறவினர்களும் பயந்து விலகும் இந்த சரீரம் எனக்கு வேண்டாம். உமது கணங்களைப் போல் பேய் வடிவம் தாரும் அம்பலவாணரே’ என தியானிக்கிறார் புனிதவதியார். இறைவனும் அருள்புரிய, தேவர்கள் பூமாரி பொழிய, அழகிழந்து, உருவம் சுருங்கி வெறும் எலும்புக்கூடாக மாறுகிறார் புனிதவதியார்.

தனது வேண்டுதலை ஏற்று அருள்புரிந்த இறைவனைக் காண கயிலாயம் புறப்பட்டார் புனிதவதியார். கயிலாய மலையை அடைந்ததும், இறைவன் உறையும் தலத்தை காலால் மிதிப்பது தகுமோ என்று கைகளை ஊன்றி, தலைகீழாக மலை ஏறினார். இதை உணர்ந்த இறைவன் காட்சி தந்து, ‘அம்மையே! வேண்டுவன கேள்’ என்கிறார். ‘உலகைக் காக்கும் பரம்பொருளே, அம்மையே என்று விளித்ததால், காரைக்கால் அம்மையார் எனப் பெயர் பெற்றார் புனிதவதியார்.

இதையும் படியுங்கள்:
பிறந்த மாதத்தின் ரகசியம்: உங்கள் குணாதிசயம் எந்தக் கடவுளைப் போல் இருக்கும்?
karaikalammaiyar, Sri Natarajar

இறைவன் காட்சி தந்ததால் நெகிழ்ந்து, மனம் உருகிய காரைக்கால் அம்மையார், ‘பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும். நான் மகிழ்ந்து பாடி நீ ஆடும்போது, உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும்’ என்று வேண்டுகிறார். அதையடுத்து இறைவனும் திருவாலங்காட்டிற்கு அவரை வரச் சொல்கிறார். காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு தலத்தை அடைந்து, அங்கும் காலால் நடக்காமல் தலைகீழாக நடந்து கோயிலை வந்தடைகிறார்.

‘கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு…’

என்ற மூத்த திருப்பதிகத்தை அம்மையார் பாட, இடது காலைத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடினார் சிவபெருமான். (தலைக்கு மேலே காலைத் தூக்கி ஆடுவது ஊர்த்துவ தாண்டவம் என அழைக்கப்படுகிறது) அம்மையார் மகிழ்வுடன் பதிகங்கள் பாடி அங்கேயே முக்தி அடைகிறார். காரைக்கால் அம்மையார் இப்போதும் இக்கோயிலில் இறைவனின் தூக்கிய திருவடியின் கீழ் அமர்ந்து, இடையறாது இறைவனைக் கண்டு சிவானுபவத்தை அனுபவிப்பதாக நம்பப்படுகிறது. சிவபெருமானின் பஞ்ச சபைகளில் திருவாலங்காடு ரத்தின சபை என்று அழைக்கப்படுகிறது. மற்ற நான்கு சபைகளை விட ரத்தின சபைதான் ஆதியானது என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
குழந்தை கிருஷ்ணரின் குறும்புகள்! மனதைக் கொள்ளைகொள்ளும் லீலைகள்!
karaikalammaiyar, Sri Natarajar

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாலங்காட்டில்தான் திருஞானசம்பந்தர் தனது கால்கள் படக்கூடாது என்று தயங்கி பழையனூரில் தங்குகிறார். அன்று இரவு சம்பந்தரின் கனவில் பிறையும் சடையும் மானும் மழுவும் தாங்கித் தோன்றிய இறைவன், ‘ஞானப்பால் அருந்திய பிள்ளாய்! நம்மைப் பாட மறந்தனையோ?’ என்று ஊர்த்துவ நடனக் கோலத்தைக் காட்டி வினவினார்.

திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்த சம்பந்தர் உடனே,

‘துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனை நட்பாய்…’

எனத் தொடங்கும் பதிகத்தை சத்தமாகப் பாடினார். அருகில் தூங்கிக் கொண்டிருந்த அடியவர்கள் எல்லாம் அந்த சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தனர். சற்று நேரத்தில் பொழுது புலர்ந்ததும், அடியார்கள் பின்தொடர பதிகம் பாடியவாறு திருவாலங்காட்டில் அருள்புரியும் ஆலங்காட்டு அப்பனை தரிசித்தார் சம்பந்தர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com