
நாம் ராசி பலன் பார்க்கும்பொழுது ஒவ்வொரு ராசிக்கும் உள்ள வடிவங்களைப் பார்ப்போம். அப்பொழுது, ‘அது ஏன் இந்த வடிவத்தில் உள்ளது. அதன் அர்த்தம் என்ன?’ என்று விவரம் புரியாமல் வேடிக்கையாகப் பார்ப்போம். அதைப் பற்றிய விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மிதுன் என்றால் இரண்டு என்று பொருள். மிதுன வீதி என்பது சூரிய வீதிகளில் ஒன்றாகும். மிதுன ராசியானது ஆண், பெண் ஆகிய இரு மனித உருவங்களை கொண்டதாகும். ஆணின் கையில் கதை என்ற ஆயுதமும், பெண்ணின் கையில் வீணையும் இருக்கும். இவ்விருவரும் சதா இன்பமாக இருப்பதாக ஐதீகம்.
கிரீடம் என்றால் புழு என்று பொருள். கடகம், விருச்சிகம் ஆகிய இரு ராசிகளும் ‘கீட ராசிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. கடகம் நண்டு வடிவம் கொண்டதாகவும், விருச்சிகம் தேள் வடிவம் கொண்டதாகவும் இருக்கிறது. இவ்விரண்டும் புழு இனத்தைச் சேர்ந்ததாகும்.
தனுசு, மகரம் ஆகிய இரு ராசிகளும் இரண்டும் கெட்டான் இனத்தைச் சேர்ந்தது ஆகும். தனுசு ராசியானது மனிதனும் மிருகமும் கலந்த வடிவம் கொண்டதாகும். அதாவது, இடுப்புக்குக் கீழ் குதிரை உருவமும் இடுப்புக்கு மேல் மனித உருவமும் கொண்டது. இந்த மனிதனின் கையில் தனுசு இருக்கும்.
மகரம் என்றால் சுறா மீன் எனப் பொருள். மகர ராசியானது மான் என்ற உருவம் பாதியும், மீன் என்ற உருவம் மீதியும் கொண்டதாகும். இடுப்புக்கு மேல் மான் வடிவம் இருக்கும். இடுப்புக்கு கீழ் மீன் வடிவம் இருக்கும்.
கன்னி ராசியானது கன்னியின் வடிவம் கொண்டதாகும். ஒரு விளக்கை தனது கையில் ஏந்தி தண்ணீரில் ஓடத்தில் ஏறி இருக்கின்ற பெண்ணின் வடிவம் கொண்டது. ஒரு கையில் கதிர் குலையும், மறுகையில் அக்னியும் கொண்ட கன்னியின் வடிவமே கன்னி ராசி என்று சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
துலாம் என்ற ராசியானது கடைத்தெருவில் விற்ககூடிய பொருட்களை தராசில் நிறுத்தித் தரும் மனித உருவம் கொண்டதாகும்.
கும்பம் என்ற ராசியானது நீரில்லாத வெறும் குடத்தை தனது தோளில் தூக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு ஆணின் வடிவம் கொண்டதாகும்.
மீனம் என்ற ராசியானது ஒன்றின் வாலில் மற்றொன்றின் தலை படும்படி மாறி இருக்கின்ற இரண்டு மீன்களின் வடிவம் கொண்டதாகும்.
மேஷம் என்றால் ஆடு, ரிஷபம் என்றால் காளை, சிம்மம் என்றால் சிங்கம். வானத்தில் உள்ள மேகமானது சில நேரங்களில் யானை போலவும், சில நேரங்களில் காளை போலவும், இன்னும் வெவ்வேறு வடிவங்களிலும் காட்சியளிக்கின்றன அல்லவா! அது போல்தான் இதுவும்.
ஒரு ராசி என்பது நட்சத்திரக் கூட்டங்களின் ஒரு தொகுதி என்பதாகும். ஒவ்வொரு ராசியும் வானத்தில் இங்கே சொல்லப்பட்டுள்ள வடிவங்களில்தான் அமைந்துள்ளது என்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு ராசிக்கும் இந்த வடிவங்களை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.