
கோயம்புத்தூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் பேருந்து பின்புற சாலையில் அமைந்துள்ளது கொங்குநாட்டு திருக்கடையூர் திருக்கோயில். கோவை மாவட்டம், கோயில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் திருக்கோயில் தீர்க்காயுள் தரும் தலம் என்பதால் இதை, 'கொங்குநாட்டு திருக்கடையூர்' என்கின்றனர்.
சிவ பக்தனும் சிறுவனுமான மார்கண்டேயனுக்கு 16 வயதிலேயே ஆயுள் முடிய வேண்டும் என்பது விதி. இதனால் அவனது தந்தை மிகவும் வருந்தினார். தந்தையின் துன்பத்தை தாளாத மார்கண்டேயன் ஆயுள் நீட்டிப்பு வேண்டி, சிவபெருமானை வணங்கி வந்தான். ஆயுள் முடியும் நாளில் எமதர்மன் அவனது உயிரை எடுக்க வரவே, மார்கண்டேயன் திருக்கடையூர் சென்று அங்குள்ள சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டான். இருப்பினும், எமன் தனது பாசக் கயிற்றை வீசவே, அது சிவலிங்கத்தையும் சேர்த்து பிடிக்க, இதனால் கோபமடைந்த சிவபெருமான், 'என்னைச் சரணடைந்தவர் ஆயுள் நீட்டிப்பு பெறுவர்’ எனக் கூறி, எமனை எட்டி உதைத்தார்.
இதனால் எமதர்மன் சாதாரண மனிதனுக்கு ஒப்பாகி பூலோகத்தை அடைந்தான். மீண்டும் எம பதவி வேண்டி, ‘கௌசிகபுரி’ என்னும் தலம் சென்று அங்குள்ள நதியில் நீராடி சிவ பூஜை செய்ய எண்ணினான். சிவலிங்கமாக எண்ணி வழிபட கல், விபூதி, வில்வம், ருத்ராட்சம் என ஏதுவும் அங்கு அவனுக்குக் கிடைக்கவில்லை. அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து ஓரிடத்தில் குத்தினான். உள்ளிருந்து நுரை பொங்கி வந்தது. மணலுடன் நுரையை சேர்த்து லிங்கம் ஒன்றைப் படைத்து வழிபட்டான்.
அப்போது தோன்றிய விசுவாமித்திரர், ‘இந்த சிவ பூஜையால் உன்னுடைய சாபம் நீங்கிவிட்டது. நீ மீண்டும் எம பதவி பெற்றாய்' என்றார். அதோடு, எமதர்மன் விட்டுச் சென்ற சிவலிங்கத்தையும் அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் அங்கு கோயில் எழுப்பப்பட்டதாக வரலாறு. இந்தக் கோயில் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் சிவலிங்கம் இருப்பது சிறப்பு. மூலவர் மணல் நுரையால் செய்யப்பட்டதால் தயிர், நெய், பஞ்சாமிர்தம் போன்றவற்றை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது இல்லை.
இத்தலத்தில் ஆயுள் விருத்தி ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்றவை செய்யப்படுகின்றன. அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இதை செய்வது சிறப்பு. நாள்பட்ட நோய் தீரவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் சுவாமி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். திருமணத் தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விஷக் கடிக்கு நிவாரணமாக இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
‘முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பல் ஆவார்’ என்பது நியதி. எனினும் பூமிக்கு வந்த பின் மரணத்தைப் பற்றி நினைப்பதென்றால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், மரணமில்லா வாழ்வு ஏது? நாம் பூமிக்கு ஒரு யாத்திரைதான் வந்திருக்கிறோம். வாழும் காலத்தில் வசதி வாய்ப்புகளை அனுபவிக்க வேண்டும் என்பது மனிதர்களது ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றும் தலமாக காலகாலேஸ்வரர் திருத்தலம் போற்றப்படுகிறது.