
உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் அருளும் ஏழு திருத்தலங்களே, ‘சப்தவிடங்க தலங்கள்’ எனப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள ஏழு சப்தவிடங்க தலங்களும் அவற்றில் அருளும் ஈசனின் திருநடனங்கள் குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. திருவாரூர் வீதிவிடங்கர் (அஜபா நடனம்): கும்பகோணத்திலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாரூர். இங்குள்ள இறைவன் வீதிவிடங்கர் என அழைக்கப்படுகிறார். இறைவி கமலாம்பாள். இங்கு இறைவன் ஆடியது ஆஜபா நடனம். உயிரின் இயக்கமான மூச்சுக்காற்று உள்ளும் புறமும் சென்று வருவது போன்ற உன்னதத்தை உணர்த்துவது இந்த நடனம். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, வேலை வாய்ப்பு கிடைக்க, பிள்ளை வரம் வேண்டி மக்கள் இத்தல சிவபெருமானை வழிபடுகிறார்கள்.
2. உன்மத்த நடனம் (திருநள்ளாறு): கும்பகோணத்திலிருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ளது திருநள்ளாறு பிராணேஸ்வரி உடனாய தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தில் ஈசன், ‘நகர விடங்கர்’ என அழைக்கப்படுகிறார். இது சிவபெருமான் உன்மத்த நடனம் ஆடிய திருத்தலம். பித்தனை போன்று ஆடும் நடனம் இது. சனி தோஷம் நீக்கும் திருத்தலமாக இது திகழ்கிறது.
3. தரங்க நடனம் (திருநாகைக்காரோணம்): கும்பகோணத்திலிருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ளது நாகை. இத்தல இறைவன் காயாரோகணேஸ்வரர், இறைவி நீலாயதாட்சி. இங்கு ஈசன், ‘சுந்தர விடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய நடனம் ‘தரங்க நடனம்’ எனப்படுகிறது. கடல் அலைகள் எழும்புவது போல் ஆடுவது இந்த நடன முறையாகும். இங்கு உறையும் ஈசனை வழிபட முக்தி கிட்டும் என்பது ஐதீகம்.
4. குக்குட நடனம் (திருக்காறாயில்): கும்பகோணத்திலிருந்து 54 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். இறைவன் கண்ணாயிரநாதர், இறைவி கயிலாய நாயகி ஆவார். பிரம்மனுக்கு 1000 கண்களை ஈசன் அருளிய திருத்தலம். இங்குள்ள ஈசன் ‘ஆதிவிடங்கர்’ எனப்படுகிறார். இவர் ஆடிய நடனம் குக்குட நடனம் எனப்படுகிறது. கோழியைப் போல் அசைந்து ஆடும் நடனம் இது. கண் சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும் திருத்தலம் இது.
5. பிருங்க நடனம் (திருக்குவளை): கும்பகோணத்திலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ளது பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இறைவன் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர். இறைவி வண்டமர் பூங்குழலம்மை. இத்தல ஈசன், ‘அவனி விடங்கர்’ எனப்படுகிறார். இவர் ஆடியது பிருங்க நடனம் எனப்படுகிறது. வண்டு குடைந்து செல்வதைப் போன்றது இந்த நடனம். நவகிரக தோஷங்களைப் போக்கும் திருத்தலமாக இது திகழ்கிறது.
6. கமல நடனம் (திருவாய்மூர்): கும்பகோணத்திலிருந்து 76 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். இறைவன் வாய்மூர்நாதர். இறைவி பாலிலும் நன்மொழியம்மை. பிரம்மன் மற்றும் சூரியனின் சாபம் தீர்த்த திருத்தலம் இது. இத்தல ஈசன் ‘நீலவிடங்கர்’ எனப்படுகிறார். இவர் ஆடிய நடனம் கமல நடனமாகும். தாமரை மலர் அசைவது போன்றது இந்த நடனம். திருமணத்தடை நீக்கும் திருத்தலமாக இது திகழ்கிறது.
7. அம்சபாத நடனம் (திருமறைக்காடு): கும்பகோணத்திலிருந்து 106 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இறைவன் மறைக்காட்டுநாதர், வேதாரண்யேஸ்வரர். இறைவி யாழினும் இனிய மொழியாள். கதவைத் திறந்தும், மூடியும் காட்டிய திருத்தலம். இத்தல ஈசன், ‘புவனவிடங்கர்’ எனப்படுகிறார். இவர் ஆடிய நடனம் அம்சபாத நடனம். அன்னப்பறவை அடியெடுத்து வைப்பது போன்ற நடனம் இது. இங்குள்ள மணிகர்ணிகை தீரத்தம் மற்றும் ஆதிசேது கடல் தீர்த்தத்தில் நீராட, முன்வினை சாபங்கள் விலகி, புண்ணியம் சேரும். மன அமைதி, தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு தரும் திருத்தலம் இது.