பொங்கல், திருவாதிரை போன்ற பண்டிகை நாட்களில் நிச்சயம் நமது உணவுகளில் மொச்சைக்காய் எனப்படும் கொட்டை வகை சேர்க்கப்படுகிறது. மொச்சை பயறு, மொச்சைக்கொட்டை என அழைக்கப்படும் இது மார்கழி, தை மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும். பருவ கால காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதன் மணத்தை சிலர் விரும்புவதில்லை என்றாலும் இதன் ருசி பெரும்பாலானவர்களை ஈர்ப்பதாகும்.
ருசிக்காக மட்டுமின்றி, பல நோய்களை குணப்படுத்த நம்முடைய பாரம்பரிய உணவு முறையில் எடுத்துக்கொள்ளப்படும் முக்கியப் பொருளாகவும் இருக்கிறது மொச்சைக்காய். இதை உணவில் சேர்ப்பதால் மனச்சோர்வு, பர்கின்சன் நோய், உடல் சோர்வு, கர்ப்ப கால குறைபாடுகள் போன்றவற்றுக்கு தீர்வு தரும் என்கிறது மருத்துவ குறிப்புகள்.
இதன் முக்கிய ஊட்டச்சத்துக்களில் தியமின், வைட்டமின் கே, ஏ, சி மற்றும் பி6, செலினியம், இரும்புச்சத்து, நியாசின், ரிபோஃப்ளோவின், ஏகோலின், சோடியம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அடங்கும். இது மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதில் உள்ள எல் டோபாவானது சோர்வு அகற்றி மகிழ்ச்சி தரும் டோபமைனாக செயல்படுவதால் மனநிலையை மேம்படுத்துகிறது. இதனால் மனச்சோர்வு மற்றும் மனப்பிறழ்வு போன்ற பிரச்னைகளை எதிர்த்து பாதிப்பை குறைக்கிறது.
இதன் க்ளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. மேலும், இதிலுள்ள போலேட் கர்ப்ப கால ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எல் டோபா, பார்கின்சன் நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக, கர்ப்பிணிகள் இதை உட்கொள்ளும்போது இதிலுள்ள போலேட், கருச்சிதைவு, குறைந்த எடை சிசு, குறை பிரசவம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.
எனினும், அளவுக்கு அதிகமாக மொச்சை பயிறு சாப்பிடுவது குழந்தைக்கு இரத்த சோகையை ஏற்படுத்தும் எனவும் ஆய்வுகள் எச்சரிக்கிறது. எனவே, மருத்துவ ஆலோசனை நிச்சயம் தேவை.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் சீரான வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது. பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுத்து, புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.
மொச்சையின் ஊட்டச்சத்துக்கள் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகளைத் தருவதால் தாராளமாகக் கிடைக்கும் இந்தக் காலங்களில் இரண்டு நாளுக்கு ஒரு முறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மொச்சைக் குழம்பு, மொச்சை புளிக்குழம்பு, மொச்சைக்காய் சுண்டல் என பல விதங்களில் உணவில் சேர்த்தால் இதை வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
இதை அதிகம் எடுத்தால் வாயுத்தொல்லை ஏற்படும் என்ற கருத்தும் உள்ளது. ஆகவே, இதை சமைக்கும்போது இஞ்சி, பூண்டு சேர்ப்பதுடன் வேகவைத்த நீரை வடிகட்டி சமைப்பதும் வாயுவை அகற்றும். எதையும் அளவுடன் உண்டால் உடல் நலனுக்கு நன்மையே.