அசுரர்களை நடுங்கச் செய்த நவராத்திரி போர்: மகிஷாசுரமர்தினி தோற்ற வரலாறு!

Sri Mahishasuramardini Mythological History
Sri Mahishasuramardini
Published on

தேவர்கள், ரிஷிகள், மானிடர்கள் முதலானோரை கொடுமைப்படுத்திய பல அசுரர்களை இறைவனும் இறைவியும் அவ்வப்போது பல அவதாரங்கள் எடுத்து அழித்து அனைவரையும் காப்பது வழக்கம். இப்படித்தான் ஒரு சமயம் எருமைத் தலையையும் மனித உடலையும் கொண்ட மகிஷாசுரன் என்ற அசுரன் ஆண்களால் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்று அனைவரையும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அன்னை பார்வதி தேவி மகிஷாசுரமர்தினியாக அவதாரம் செய்து மகிஷாசுரனை வதம் செய்தார்.

அரக்கர்களின் ராஜாவாகத் திகழ்ந்தவன் ரம்பன். பிரம்மதேவனின் அருள் அவனுக்கு இருந்ததால் தேவர்கள் முதலானோரை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். ஒரு நாள் ரம்பன் அழகான ஒரு பெண்ணைக் கண்டு அவள் மேல் ஆசை கொண்டான். எருமை உருவம் கொண்ட மகிஷினி என்ற அந்தப் பெண்ணை ரம்பன் ஆண் எருமையாக மாறி மணந்து கொண்டான். ஆனால், விலங்காக இருக்கும்போதே ரம்பன் மற்றொரு எருமை தாக்கி மாண்டு போனான்.

இதையும் படியுங்கள்:
நெய் vs எண்ணெய்: எது சிறந்தது?தீபத்தில் மறைந்திருக்கும் ஆன்மிக ரகசியம்!
Sri Mahishasuramardini Mythological History

கர்ப்பமாக இருந்த மகிஷினி தனது கணவன் இறந்துபோன பிறகு தானும் இறந்துவிட முடிவு செய்து நெருப்பில் குதித்துத் தன்னை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தாள். அப்போது நெருப்பிலிருந்து ஒரு மனிதனின் உடலும் எருமைத் தலை உடைய அரக்கன் மகிஷாசுரன் மகனாக எழுந்து வந்து அசுர குலத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்றான். இவனுடைய குலகுரு சுக்கிராச்சாரியார். மகிஷாசுரன் ஆண்ட ராஜ்ஜியத்தின் பெயர் மகிசா ராஜ்ஜியமாகும். தேவி மகாத்மியம் என்ற புராண நூலில் மகிஷாசுரனின் கதை இப்படிக் கூறப்பட்டுள்ளது.

மகிஷாசுரன் தனது சக்தியை அதிகரித்துக்கொள்ள பிரம்ம தேவனை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் செய்தான். தவத்திற்கு மெச்சிய பிரம்ம தேவன் அவன் முன்பு தோன்றி, ‘வேண்டும் வரம் யாது?’ என்று கேட்க, அதற்கு மகிஷாசுரன் இவ்வுலக ஆண்கள் யாராலும் தன்னை அழிக்க முடியாத வரம் கேட்டுப் பெற்றான். இதைத் தொடர்ந்து இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும் முனிவர்களையும் அவன் கொடுமைபடுத்தத் தொடங்கினான். இந்திரன் முதலானோரின் வேண்டுதலுக்கு இணங்க, பார்வதி தேவி துர்கையாக அவதரித்தாள்.

இதையும் படியுங்கள்:
பெருமாள் கோயில்களில் நவகிரக சன்னதி இல்லாதது ஏன்? பலருக்குத் தெரியாத ரகசியம்!
Sri Mahishasuramardini Mythological History

மது கைடபர், மகிஷாசுரன், தூம்ரலோசனன், ரண்ட முண்டன், சும்ப நிசும்பர், ரக்தபீஜன் என பல அசுரர்களும் மூவுலகத்தையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கினர். அசுரர்களை அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என முப்பத்து முக்கோடி தேவர்களும் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். மும்மூர்த்திகளும் தங்களின் சக்தியைக் கொண்டு ஒரு புதிய சக்தியைப் படைத்தனர். மகேஸ்வரி, கௌமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலப்பல அவதாரங்களை எடுத்த அன்னை பார்வதி தேவி துர்கையாக அவதாரம் செய்தாள். அனைத்து தேவர்களின் ஒட்டுமொத்த வடிவமே துர்கை அவதாரமாகும்.

அழகிய பெண் வடிவம் தாங்கி பூலோகத்திற்கு வந்த அன்னை, துர்கா தேவியைப் பார்த்ததும் சண்டன் முண்டன் என்ற இரண்டு அரக்கர்களும் தங்கள் அரசனுக்கு ஏற்றவள் இவளே என முடிவு செய்து தங்கள் அரசனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். துர்கா தேவியும் அப்போது அவர்களிடம், “என்னை யார் போரில் வெல்லுகிறார்களோ அவர்களை நான் மணப்பேன்” என்றார். அந்த அரக்கர்களும் துர்கா தேவி யாரென்று தெரியாமல் நகைத்துப் பேசினர். துர்கா தேவியோ, “சபதம் செய்து விட்டேன். நீ உன் அரசனிடம் சென்று நான் சொன்னதைச் சொல்” என்றார்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி வழிபாடு: கோடீஸ்வர யோகம் தரும் அற்புத ஸ்தோத்திரம்!
Sri Mahishasuramardini Mythological History

துர்கா தேவி சொன்னதை அவர்கள் சும்பன், நிசும்பன் இருவரிடமும் சென்று தெரிவித்தார்கள். அவர்களும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினார்கள். தன்னை எதிர்த்துப் போரிட வந்த அனைவரையும் துவம்சம் செய்தாள் துர்கா தேவி. இத்தகைய அசுரர்களில் ரக்தபீஜன் என்ற அசுரன் விநோதமான வரத்தைப் பெற்றவன். அவன் உடலிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திலிருந்தும் மீண்டும் ஒரு ரக்தபீஜன் தோன்றத் தொடங்கினான். அப்படித் தோன்றிய அசுரனும் ரக்தபீஜனுக்கு இணையான ஆற்றலைப் பெற்றிருந்தான். துர்கா தேவி சாமுண்டி என்ற காளியை வாயை அகலமாகத் திறந்து ரக்தபீஜனின் உடலிலிருந்து விழும் இரத்தத் துளிகளை குடிக்க ஆணையிட, அவளும் அப்படியே செய்தாள். ரக்தபீஜன் உடலிலிருந்து இரத்தம் முழுவதும் வெளியேற பின்னர் அவன் மாண்டு போனான்.

மும்மூர்த்திகளின் சக்தியோடும் அவர்கள் அளித்த ஆயுதங்களோடும் அசுரர்களோடு ஒன்பது நாட்கள் போரிட்டு இறுதியில் மகிஷாசுரனை வதம் செய்தாள் துர்கா தேவி. அன்னை பார்வதி தேவி துர்கா தேவியாக அவதரித்து மகிஷாசுரனை வதம் செய்து மகிஷாசுரமர்தினி என்ற பெயரையும் பெற்றாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com