
நாம் வாழும் உலகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கமாகும். அந்த தொடக்கத்தின் அழகான தருணம்தான் அதிகாலை. இந்த நேரத்தில் இயற்கை தனது அமைதியிலும், அழகிலும் உச்சக்கட்டத்தைக் காண்கிறது. ஆனால், இந்த நேரத்தில் மனிதர்கள் பெரும்பாலும் தூக்கத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இந்த அதிகாலை நேரத்தில் எழுவது, சாமான்ய செயலல்ல. அது உறங்கிக் கொண்டிருக்கும் உயிரின் சக்தியை எழுப்பும் ஆன்மிக திறவுகோல் எனலாம்.
அதிகாலை நேரத்தின் சக்தி: அதிகாலை, குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரம் (4 - 6), இது மூச்சும் மனமும் ஒரே நேரத்தில் தூய்மையாக இருக்கும் நேரம். உயிரின் சக்தி மிகத் தெளிவாகப் பரவும் நேரம் இது. சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும் இந்த நேரத்தில் வளமான ஆக்ஸிஜன் (oxygen) இயற்கையாகவே அதிகமாக இருக்கும். மூளை மிகத் தெளிவாகவும், செயல்பாடுகள் தீவிரமாகவும் இருக்கும். மனம் அமைதி அடைகிறது. உடலும் மனதும் செயலிழப்பின்றி, முழுசக்தியுடன் இருக்கத் தயாராகிறது.
ஆன்மிக விழிப்புணர்வு: உலகம் இன்னும் முழுவதுமாக விழித்திராத நேரம் இது என்பதால், சத்தம் குறைவாக இருக்கும். தியானம், ஜபம், பிரார்த்தனை, யோகா, நாடி சுத்தி போன்றவை இந்த நேரத்தில் செய்யும்போது அதன் பலன் பல மடங்கு அதிகம். ஏனென்றால், இந்த நேரத்தில் மனம் அதிக மையம் பெறும். அதிகாலை காற்று ஆக்ஸிஜனில் செறிந்திருக்கும். இந்நேரத்தில் மனித நரம்பியல் அமைப்பும், நவச்சக்கரங்களும் (Chakras) மிக நுட்பமாக வேலை செய்கின்றன.
அறிவியல் ஆதாரமும் உள்ளது: Melatonin என்ற ஹார்மோன் அதிகாலையில் சுரக்கிறது. இது தூக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், மனஅமைதிக்கும் முக்கியம். அதிகாலையில் எழுவோருக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கிறது. ‘Morning People’ எனப்படுபவர்களுக்கு நல்ல ஆரோக்கியம், மன உறுதி, செயல் திறன் ஆகியவை காணப்படுகிறது. வேதங்கள், யோக சாஸ்திரங்கள் மற்றும் ஆயுர்வேதம் ஆகியவை இந்த நேரத்தில் கல்வி கற்பது மற்றும் சிந்தனை செய்வது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறுகின்றன. மாணவர்களுக்கு படிப்பதற்கும் இதுவே சிறந்த நேரம்.
இயற்கையின் அழைப்பு: அதிகாலை என்பது சூரியன் உதிக்கும் நேரத்திற்கும் முன்னைய அமைதியான காலகட்டம். இயற்கையின் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு நகரும் அந்த மெல்லிய தருணத்தில், உலகமே ஒரு புதிய சுவாசத்தை எடுத்துக்கொள்கிறது. பறவைகளின் ஒலி மெதுவாக எழுகிறது. பறவைகள் கீச்சுக்குரலில், சூரிய உதயத்தின் வெப்பத்தில், மழைக்காற்றின் நறுமணத்தில் எல்லாம் உயிரின் சக்தி பதுங்கி இருக்கிறது. நாம் கண் விழித்தால் மட்டுமே அது நமக்குத் தெரிய வரும். வானம் கருமேகத்திலிருந்து மெல்ல நீலமாக மாறுகிறது. இந்நேரம், இயற்கையின் தூய தருணமாக இருக்கிறது. இயற்கையின் மெளனத்துடனே ஒத்திசைந்த மனநிலை, அதிகாலை எழுதலால் ஏற்படுகிறது. அது ஒருவரின் சிந்தனைகளை தெளிவாக்குகிறது, உணர்வுகளை சீரமைக்கிறது, தியானத்திற்கும், இறைவனோடு இணைவதற்கும் வழிவகுக்கிறது.
அதிகாலை நேரம் என்பது, இயற்கை நமக்குச் சொல்லும் மென்மையான ‘விழித்தெழு’ அழைப்பு! இவ்விதமாக, அதிகாலை எழுதல் என்பது ஒரு பழக்கமல்ல; இது ஆன்மிக எழுச்சிக்கான இயற்கையான ஒரு படிக்கட்டாகும். அதிகாலை எழுச்சி என்பது வெறும் ஒரு நேர கடைப்பிடிப்பு மட்டுல்ல, அது ஒரு வாழ்க்கை முறை, ஒரு உள் சக்தியின் வெளிப்பாடு. இந்த நேரத்தில் எழும் ஒவ்வொரு நபரும், தனது உடல், மனம், ஆன்மா மூன்றிலும் புதுமை ஏற்படுத்த முடியும். அதிகாலை நேரத்தின் அமைதியிலும் ஒளியிலும் மறைந்திருக்கும் அந்த சக்தியை உணர்ந்தால், உங்களது அந்த நாள் மட்டுமல்ல, வாழ்க்கையே மாற்றமடையும்.