

சிவன் கோவில்கள் என்பவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூல முதல்வராகக் கொண்டுள்ள வழிபாட்டுத் தலங்களாகும். இந்தியாவில் இருக்கும் சிவன் கோவில்களில் பாதிக்கு மேற்பட்ட கோவில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் வடஇந்தியாவில் இருக்கும் சிவன் கோவில்கள் விட தென் இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் தான் சிவன் கோவில்கள் அதிகமாக உள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இவற்றில் சிறப்பு வாய்ந்த பல கோவில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் ஆகும். அதேபோல மற்ற பேரரசர்கள் காலத்திலும் கணிசமான அளவு சிவன் கோவில்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோவில்களில் சில சிவன் கோவில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா, இலங்கை, நேபாளம், கம்போடியா போன்ற பல உலக நாடுகளிலும் சிறப்பு வாய்ந்த, பழமையான சிவன் கோவில்கள்(Shiva Temples) அமைந்துள்ளன. சிவன் கோவில்களில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தேவாரம் பாடல்கள் படி புகழ் பெற்ற, பழமையான சிவன் கோவில்கள் 300க்கு அதிகமாக உள்ளன. இந்த கோவில்களுக்கான குறிப்புகள் தேவாரம் பாடல்களில் காணப்படுகின்றன. தேவாரப்பாடல் பெற்ற 276 சிவன் கோவில்களில், 266 சிவன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் 8 சிவாலயங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இந்த சிறப்பை வேறு எங்கும் காண முடியாது.
அதாவது, உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் முதல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் கோவில் வரை சுமார் 2382 கிமீ நீளத்திற்கு ஒரு அற்புதமான நேரான கோடு உள்ளது. இந்த கோட்டின் ஒரு ரகசியம் என்னவென்றால் இந்த நீண்ட ஒரே நேர்கோட்டில் எட்டு மிக முக்கியமான சிவாலயங்கள் அமைந்துள்ளன என்பது தான்.
இவை அனைத்தும் சுமார் 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளன என்றும் இது உண்மையில் தற்செயலானது அல்ல என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த எட்டு ஆலயங்களும் வெறும் கோவில்கள் மட்டுமல்ல இவை சைதன்யத்தை வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இணைக்கும் நேர்கோடுகள் என்று ஆன்மிக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த கோட்டில் இரண்டு புனிதமான ஜோதிர்லிங்கங்கள் கேதார்நாத் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ளன. இவை தவிர பஞ்சபூதங்களை விவரிக்கும் ஆறு முக்கியமான சிவாலயங்களும் உள்ளன. சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவில், காலேஸ்வரம் முக்தீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகும். சிருஷ்டியின் பஞ்ச தத்துவங்களையும் ஒரே நேர்கோட்டில் பிணைத்த இந்த சிவசக்தி கோடு இந்த எட்டு மகாதேவாலங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதால் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த ரகசியம் மறைந்துள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது.
தற்போது உள்ள நவீன யூகத்தில் உள்ளது போன்று எந்தவொரு புரிதலும் இல்லாத காலத்தில் நம் இந்தியர்கள், எம்பெருமான் சிவனுக்கு ஒரே நேர்க்கோட்டில், கோவில் எழுப்பி வழிபட்டு உள்ளனர் என்பது நம்மில் பலரும் அறிந்திடாத உண்மையே. இறைவன் மெய்ஞ்ஞான ரகசியங்களை முழுவதும் அறிந்துகொள்வதற்கு மனிதனுக்கு பல யுகங்கள் கூட போதாது என்பதில் இருந்தே அவனுடைய அளவற்ற ஆற்றலை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.