எண்ணம், செயல், சொல் மூன்றையும் தூய்மையாக்கும் ஒரே தாய் மந்திரம்!

Chidambaram Sri Gayatri Devi Temple
Chidambaram Sri Gayatri Devi Temple
Published on

ந்திரங்களில் தலைசிறந்தது காயத்ரி மந்திரம். காயத்ரி தேவி சூரியனுக்கு சக்தி தருபவள். காயத்ரிக்கு உருவம் தந்தவர் விஸ்வாமித்திர முனிவர். இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது தோன்றிய உருவத்தை காயத்ரியாக வடிவமைத்தார். ஐந்து முகங்களோடும் ஆயுதம் ஏந்திய பத்து கரங்களோடும் தாமரை மலரில் அமர்ந்து காட்சி தருபவள் காயத்ரி தேவி.

தன்னை விடாது ஜபிப்பவரைக் காப்பவள் காயத்ரி. தினமும் மனதை ஒருமுகப்படுத்தி வேறு எந்த சிந்தனையும் இன்றி ஜபிப்பவரை காயத்ரி தேவி காத்தருள்வாள். 24 அட்சரங்களைக் கொண்ட காயத்ரி மந்திரம் ஜபிப்பவரின் பூர்வ ஜன்ம பாவங்களை அகற்றும் வல்லமை கொண்டது. இதனால் ஜபிப்பவருக்கு சக்தியும் வைராக்கியமும் பெருகும். தேடி வரும் ஆபத்துக்கள் விலகும். எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி தேவிக்கென சிதம்பரம் நகரில் ஒரு தனிக்கோயில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் முன்பு வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா?
Chidambaram Sri Gayatri Devi Temple

மன்னர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய தல யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் ஒரு அந்தணரைச் சந்தித்தார். அவர் காயத்ரி மந்திரத்தால் தான் பெற்ற புண்ணியத்தை மன்னனுக்குக் கூற, மன்னர் தோஷம் நீங்கப் பெற்று மகிழ்ச்சி அடைந்தார். தனது தோஷத்தை நிவர்த்தி செய்த அந்தணருக்கு பெரும் பொருளைக் கொடுக்க, அதை வாங்க மறுத்த அந்தணர் மன்னரிடம், காயத்ரி தேவிக்கு கோயில் ஒன்றை அமைக்கும்படி வேண்டிக் கொண்டார்.

அதன் அடிப்படையில் மன்னர் சிதம்பரத்தில் காயத்ரி தேவியை மூலவராகக் கொண்டு ஒரு கோயில் அமைத்தார் என்பது புராண வரலாறு. இக்கோயிலில் மூலவர் காயத்ரி தேவி மேற்கு திசை நோக்கி ஐந்து முகங்களோடும் ஆயுதம் ஏந்திய பத்து கரங்களோடும் தாமரை மலரில் அமர்ந்து காட்சி தருகிறாள்.

இந்த தேவி காலையில் காயத்ரி, மதியம் சாவித்ரி, மாலையில் சரஸ்வதியாக அருள்பாலிப்பதாக ஐதீகம். காயத்ரி தேவி மூன்று தேவியர்களின் அம்சமாகத் திகழ்கிறாள். காலை வேளையில் சூரியனை நோக்கி நின்று முகத்திற்கு நேராக இரு கைகளையும் கூப்பி நின்று காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதிய வேளையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராகக் கூப்பி காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு திசை நோக்கி அமர்ந்து நாபிக்கு அருகில் கைகளை கூப்பி காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் அதிகம் அறியப்படாத ரகசியங்களைக் கொண்ட 6 தனித்துவமான கோயில்கள்!
Chidambaram Sri Gayatri Devi Temple

காயத்ரி மந்திரத்தை மனதை முழுமையாக ஒருமுகப்படுத்தி வேறு எந்த சிந்தனையும் இன்றி தொடர்ந்து 108 முறை உச்சரித்தால் முழு பலனும் கிடைக்கும்.

‘ஓம் பூர் புவ சுவஹ
தத் சவிதர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந பிரசோதயாத்’

‘பூலோகம், இடைலோகம் எனப்படும் புவர்லோகம், சுவர்க்கலோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைத்து அனைத்திலும் மூலாதாரமாய் நிறைந்து உயிர்கள் அனைத்தும் உடல், ஆன்ம, தெய்வீக நிலையில் சிறந்த வாழ்க்கையினை வாழ வழிவகுத்த போற்றுதலுக்குரிய தெய்வீக பேரொளியினை நாம் தியானிப்போமாக. அந்த மேலான தெய்வீகப் பேரொளி நம் அறிவிற்கு ஒளியூட்டட்டும்’ இதுவே காயத்ரி மந்திரத்தின் பொருளாகும்.

இதையும் படியுங்கள்:
ஆலயத்துக்குச் சென்றால் சற்று நேரம் அமர்ந்து விட்டு வர வேண்டியதன் ரகசியம் தெரியுமா?
Chidambaram Sri Gayatri Devi Temple

மனிதர்கள் எண்ணம், செயல், சொல் ஆகிய மூன்றிலும் தூய்மையை கடைபிடித்து காயத்ரி தேவியை வழிபட்டு காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால் கர்ம வினைகள் யாவும் அகலும் என்பதே காயத்ரி மந்திரத்தின் தத்துவமாகும்.

‘ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்’

காயத்ரி மந்திரத்தின் பதினொரு சொற்களை வலது கையில் பதினொரு இடங்களைத் தொட்டு ஜபிக்க வேண்டும். சுண்டுவிரலின் அடிப்பகுதி, நடுப்பகுதி, நுனிப்பகுதி பின்பு மோதிர விரலின் நுனிப்பகுதி நடுவிரலின் நடுப்பகுதி ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நடுப்பகுதி மற்றும் கீழ்க் கணுப்பகுதி இதைத் தொடர்ந்து ஆள்காட்டி விரலின் கீழ்க்கணுப்பகுதி நடுவிரலின் கீழ்க்கணுப்பகுதி கடைசியாக மோதிர விரலின் கீழ்க்கணுப்பகுதி என மொத்தம் பதினொரு இடங்களில் தொட்டு காயத்ரி மந்திரத்தின் பதினொரு சொற்களைச் சரியாக உச்சரித்து ஜபிக்க வேண்டும். காயத்ரி மந்திரத்தை உள்ளத் தூய்மையோடும் ஒழுக்க நெறியோடும் ஜபித்தால் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com