

கர்ணன் – துரியோதனன்
மகாபாரதத்தில் வரும் கர்ணன் மற்றும் துரியோதனின் நட்பு மிகச் சிறந்த நட்புகளில் எப்போதும் உயரிய இடத்தில் உள்ளது. உண்மையான நட்புக்கு எடுத்துக்காட்டாகவும், நட்பின் மேன்மையை உணர்த்தும் வகையில் உதாரணமாகவும் இவர்களின் நட்பு உள்ளது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே நடைபெற்ற ஒரு போட்டியின்போது, கர்ணன் அதில் பங்குபெற முயலும்போது அவமானப்படுத்தப்படுகிறான். கர்ணனின் அவமானத்தை துடைக்க, உடனடியாக துரியோதனன் அவரை அங்க தேசத்து அரசனாக்கும் போது இந்த நட்பு தொடங்குகிறது.
போர் நடைபெறும் வேளையில் கர்ணன் தன் உடன்பிறந்த சகோதரர்களுக்கு எதிராகத்தான் போர் புரிய போகிறோம் என்று தெரிந்தும் தயாராக இருந்தான். தன் தாய் குந்தியும், கடவுளான ஶ்ரீ கிருஷ்ணர் எடுத்துக்கூறியும் கர்ணன் தன் நட்பை விட்டுக் கொடுப்பதாய் இல்லை. ஒருவேளை கர்ணன்தான் பாண்டவரில் மூத்தவன் என்று தெரிந்தால், துரியோதனன் ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுத்து இருப்பான். தன் பலம் குறையும்படி கர்ணன் பல சாபங்கள் பெற்றதை அறிந்தும், அவன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தான் துரியோதனன். எப்போதும் உறுதியான, எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காத நட்பு இவர்கள் எடுத்துக்காட்டு.
ஶ்ரீ கிருஷ்ணர் – திரவுபதி
ஶ்ரீ கிருஷ்ணர் மீது திரவுபதிக்கு அதீத அன்பு உண்டு, அவரின் உடன்பிறந்த தங்கை சுபத்திராவை விட தனக்குதான் அதிக உரிமை இருக்கிறது என்று வாதாடுவாள். கிருஷ்ணரும் தன் தங்கையைவிட திரவுபதிக்கு அதிக மதிப்பளித்தார். ஒருமுறை கிருஷ்ணருக்கு கையில் காயம் பட்டபோது எதையும் யோசிக்காமல் தன் சேலையில் ஒரு பகுதியை கிழித்து கட்டு போட்டுவிட்டாள். இதுவே ரக்ஷா பந்தன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் திரவுபதியை சகி (தோழி) என்றும் அழைப்பார். பாண்டவர்கள் உள்பட, தன்னை சுற்றியுள்ள அனைவரும் கைவிட்ட போது திரவுபதி, கிருஷ்ணா என்று அபயக்குரல் எழுப்பினாள், இது நட்பின் அதீத நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தியது. திரவுபதியை மாபெரும் இக்கட்டிலிருந்து அந்த நண்பர் காப்பாற்றினார். ஆபத்தில் உதவுபவன்தான் உற்ற நண்பன் அதற்கு எடுத்துக்காட்டாக இவர்கள் இருந்தனர்.
ஶ்ரீ கிருஷ்ணர் - அர்ஜூனன்
பாண்டவர்கள் அனைவரும் தன் மைத்துனர்கள் என்றாலும் அதில் கிருஷ்ணருக்கு பிடித்தது என்னவோ, அர்ஜூனனைதான், இருவருக்கும் இடையில் இருக்கும் பரஸ்பர நட்பு உறுதியானது. அதே நேரத்தில் அர்ஜூனன், பக்தி கலந்த நட்பை பேணி வந்தான். கண்ணனின் பேச்சுக்கு எந்த ஒரு மறுப்பும் அவனிடம் கிடையாது. அதீத நம்பிக்கையும் அவர்மேல் இருந்தது. அர்ஜூனன் தன்னை எப்போதும் அதிகமாக நம்புகிறான் என்பதை உணர்ந்த கிருஷ்ணர், தேரோட்டியாக இருந்து மகாபாரதப் போரில் அவனை காத்து ரட்சித்தார்.
உலகிற்கே முழுமையான ஒரே வாழ்க்கைப்பாடமாக விளங்கும் கீதையை அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தார். நட்பின் உறுதியை அதிகமாக்க தன் சொந்த சகோதரியையும் அர்ஜூனனுக்கு திருமணம் செய்து வைத்தார். முழுமையாக ஒருவரை நம்புவதற்கும், இன்பம் துன்பம் எதிலும் விட்டுக் கொடுக்காத நட்பிற்கும் இவர்கள் உதாரணம்.
ஶ்ரீ கிருஷ்ணர் – சுதாமா
கிருஷ்ணரின் குருகுல நண்பனாக இருந்தவர் சுதாமா. அவரும் அவரது குடும்பமும் ஒருவேளை உணவுக்கு வழிவியின்றி வறுமையில் வாடி வந்தனர். சுதாமாவின் மனைவி கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்குமாறு வற்புறுத்தி வந்தாள். கிருஷ்ணரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்த பின்னர், சுதாமாவின் மனைவி வீட்டிலிருந்த ஒரு பிடி அவலை ஒரு துணியில் கட்டி கிருஷ்ணருக்காக கொடுத்தாள்.
சுதாமா அரண்மனை வாயிலை பார்த்ததும் மலைத்துப்போய், தன் கிழிந்த உடையை பார்த்து உள்ளே விடுவார்களா என்று நிற்கிறார். சுதமாவை பார்த்த கிருஷ்ணர் மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்று மனைவிகளிடன் அறிமுகப்படுத்தி மகிழ்கிறார். கிருஷ்ணரின் உயர்ந்த நிலையை கண்ட அவர், தன்னுடைய அவல் பொட்டலத்தை மறைத்து வைக்க முயற்சிக்க, கிருஷ்ணரோ அதை பிடுங்கி தன் வாயில் இட்டு மெல்லத் தொடங்கிறார். அத்துடன் சுதாமாவின் பஞ்சக் கோலம் தீர்ந்தது.
அவர் எந்த உதவியையும் கிருஷ்ணரிடம் கேட்காமல் வருத்தத்துடன் வீடு திரும்புகிறார். ஆனால், அவர் வீடோ மாடமாளிகையாக மாறி இருந்தது, வீட்டில் செல்வமும் தானியமும் நிறைத்திருந்தது. அவரின் மனைவியும் மக்களும் நல்ல உடையில் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர். அனைத்தும் கண்ணன் செயல், நண்பர்களின் நிலை அறிந்து கேட்காமல் உதவவேண்டும், வறுமையுள்ள நண்பருக்கும் உரிய மரியாதை தந்து கௌரவிக்க வேண்டும் என்பதையே ஶ்ரீ கிருஷ்ணர் உணர்த்துகிறார்.