அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எப்போது? - சித்திரைத் திருவிழா 2026 முக்கிய அறிவிப்பு!

மதுரை சித்திரைத் திருவிழா மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தேதி குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Madurai chithirai thiruvila
Madurai chithirai thiruvila
Updated on

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் கோவில்((Arulmigu Meenakshi Sundaraswarar Temple, Madurai), இந்தியாவின் தமிழ்நாடு, மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலாகும்.

இந்தக் கோவில், சிவனை மீனாட்சியின் கணவராகவும், விஷ்ணுவை அவளுடைய சகோதரராகவும் சித்தரிப்பதன் மூலம், இந்து மதத்தின் சைவ மற்றும் வைணவ மரபுகளுக்கு இடையே ஒரு இணக்கமான, பாதுகாப்பு உறவைக் குறிக்கிறது. இத்தலத்தில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற செப்டம்பர் மாதம் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, மட்டும் சித்திரையிலும் ஒரு தீபாவளி வரும். ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள் மதுரை மக்கள்.

அதாவது, சித்திரை மாதம் என்றாலே, ஒரு பக்கம் விடுமுறை, கொளுத்தும் வெயில், சித்திரா பௌர்ணமி என்று பல இருந்தாலும், அனைவரின் நினைவுக்கும் வருவது மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும்தான்! சித்திரை திருவிழா நடைபெறும் ஒரு மாதத்திற்கு முன்பே, எல்லா ஏற்பாடுகளும் களைகட்டும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆகியவை, விசேஷமான நிகழ்வுகளாகும்.

இதையும் படியுங்கள்:
மதுரை சித்திரை திருவிழா பற்றி சொல்லப்படாத வரலாறு!
Madurai chithirai thiruvila

அந்த வகையில் மதுரையில் நடக்கும் பல திருவிழாக்கள் மற்றும் உற்சவங்களில் சித்திரைத் திருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரை திருவிழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும்.

உள்ளூரில் இருந்து மட்டுமின்றி வெளியூர், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கான கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதாவது ஆண்டுதோறும் சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. வருடந்தோறும் இந்த கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் குறைந்ததில்லை.

அந்த வகையில் 2026-ம் ஆண்டிற்கான மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 19-ல் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 26-ம்தேதி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. ஏப்ரல் 28-ல் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 29-ம்தேதி திருத்தேரோட்டமும், கள்ளழகர் திருக்கோலத்தில் தங்க பல்லக்கு மதுரைக்கு புறப்பாடும், ஏப்ரல் 30ம்தேதி கள்ளழகர் எதிர் சேவையும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் முக்கிய வைபவம் மே 1-ம்தேதி நடைபெறுகிறது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமானது, சித்ரா பௌர்ணமியன்று, பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் வந்து வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." முழக்கத்துடன், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இந்த அபூர்வ காட்சியை தரிசனம் செய்வார்கள்.

இந்த நிகழ்வின் புராண பின்னணி என்னவென்றால், மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குத் தாமதமாக வருகிறார். அதற்குள் மீனாட்சியின் திருமணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கையைக் காணாமலே வீடு திரும்புவதாக ஐதீகம்.

இந்த நிகழ்ச்சியே திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும்போது, கருட வாகனத்தில் காட்சியளிப்பார். கள்ளழகர் மீது நீர் தெளித்து பக்தர்கள் வரவேற்கிறார்கள். சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலை நடக்கும் இந்த நிகழ்வு மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கியப் பகுதியாகும்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’ என பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
சித்திரை கொடி பறக்குது... மதுரை சித்திரை திருவிழா 2025 அட்டவணை இதோ!
Madurai chithirai thiruvila

மதுரையில் ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள், திருவிழாக்கள் நடந்தாலும், அதிக நாட்கள் நடைபெறும் உற்சவம் மதுரை சித்திரைத் திருவிழாவாகும். அந்த வகையில், இந்த விழா மதுரை மக்களின் கலாச்சார மற்றும் ஆன்மீக வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com