

திருநெல்வேலி உடையார்பட்டி அருகில் அருகன்குளம் என்ற கிராமத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒரு கோசாலையும் அமைந்துள்ளது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. இந்த இடத்தை தர்மபதி என்றும் அழைக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதிக் கரையில் அருகன்குளம் என்ற ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது. அருகன்குளம் கிராமத்தில் மாயாண்டி சித்தர் என்பவர் 1891 ஆம் ஆண்டு ஆனி மாதம் 18ம் தேதி அருகன்குளம் கிராமத்தில் பிறந்தார்.
சிறு வயது முதலே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். அந்த தாக்கத்தின் காரணமாக வல்லநாடு மலை சென்று அங்கு தியானத்தில் அமர்ந்தார். அதன் பின்னர் அவர் நீண்ட காலம் வீடு திரும்பவில்லை.
தியானத்தில் இருக்கும்போது அவர் கனவில் ராமர் தோன்றி ஜடாயூ ராமாயண காலத்தில் தாமிரபரணி நதிக்கரையில் திதி கொடுத்தபின் அங்கே அமர்ந்து ஓய்வு எடுத்த இடமாகும். அந்த இடத்தில் நான் எட்டெழுத்து பெருமளாக அவதரிக்க உள்ளேன். எனக்கு அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டவேண்டும் என்று கூறினார். அதன்படி மாயாண்டி சித்தர் அருகன் குளம் வந்து பெருமாளுக்கு கோவில் கட்டினார். ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிப்பதால் இந்த கோவிலுக்கு எட்டு எழுத்துபெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தக் கோவிலில் பெருமாள் ராமர் ஆகவும் மகாவிஷ்ணுவாகும் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்
இங்குள்ள கோசாலை மிகவும் பிரசித்தி பெற்றது. ஏனென்றால் இந்த கோசாலையில் கிருஷ்ணர் சிலையும் உள்ளது. கோசாலையில் இருபுறமும் பசுக்கள் நிரம்பி காணப்படுகிறது. அதன் நடுவே கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதியபடி காட்சி தருகிறார். மற்ற எல்லா இடங்களிலும் கோசலை தனியாக இருக்கும்.
ஆனால் இங்கு மட்டும் கோசாலையில் கோவிலும் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. சாஸ்திரப்படி பசு ஏழாவது தாயாக விளங்குகிறாள். பசுக்கள் மங்களகரமாக கருதப்படுகிறது. இவை அறம் பொருள் இன்பம் வீடு இவற்றை வழங்க வல்லது.
பசுக்களை தரிசித்து அதற்கு புல் தானமாக வழங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடம்பில் உள்ளதால் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
ரகு வம்சத்தில் திலீபன் சக்கரவர்த்தி பசுக்களை பராமரித்து வந்ததாக சான்று உள்ளது. பசுக்களை வளர்த்தால் ஆயுள்கூடும். இந்த கோசலை பூஜையில் பங்குபெற இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து ஆசிபெற்று செல்கிறார்கள். இந்த கோவிலில் மகாலட்சுமி திருமணி வெண் முத்து உள்ளது.
இங்கு வழிபடும் பக்தர்களுக்கு இந்த வெண்மணி முத்திரை நெற்றியில் இடுகிறார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். அதேபோன்று குழந்தை இல்லாதவர்களும் இந்த திருக்கோவிலில் வழிபட்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.
இந்த திருக்கோவிலில் புத்திர காமேஷ் யாகம் சிறப்பாக நடைபெறும். அந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பள்ளி கல்லூரி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற இந்த கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்படும். இங்குள்ள துலாபாரத்தில் பக்தர்கள் அவர்களுக்கு வேண்டிய பொருளை காணிக்கையாக வழங்குகிறார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படும். கிருஷ்ண ஜெயந்தியின்போது கிருஷ்ண கலய பிரசாதம் வழங்கப்படும். பக்தர்கள் அந்த கலயத்தை வீட்டுக்கு வாங்கிச் சென்று அதில் சிறிது தங்கம் வெள்ளி நாணயங்கள் போட்டு அதை பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள். வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது.
இந்தக் கோவில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் செயல்படும். திருநெல்வேலி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல மினி பஸ் ஆட்டோ வசதி உள்ளது. குழந்தை வரம் வேண்டியும், திருமணம் நடைபெறவும், இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.