பாண்டுரங்கனின் பக்தரான ராமதேவ் மூடை தூக்கி பிழைத்து வந்தார். வறுமையில் வாடினாலும் பிறருக்கு உதவும் மனம் அவருக்கு இருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனுக்கு வேஷ்டி சாத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் சேமித்தார். அதில் ஒரு நூல் வேஷ்டியும் அங்க வஸ்திரம் மட்டுமே வாங்க முடிந்தது. அதை எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் நோக்கி புறப்பட்டார்.
காட்டு வழியில் பெரியவர் ஒருவரை சந்தித்தார். “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என பெரியவர் கேட்க, பண்டரிபுரம் என்றார் ராமதேவ். “அங்குதான் நானும் செல்கிறேன். பண்டரிபுரம் செல்லும் குறுக்குப் பாதை ஒன்று இருக்கிறது” என்றார் பெரியவர். ராமதேவ் அதற்கு சம்மதிக்க பேசிக்கொண்டே இருவரும் நடந்தனர். அதில் களைப்பே தெரியவில்லை. பண்டரிபுரத்திற்கு அருகில் ஓடும் சந்திரபாகா நதிக்கரையை அடைந்தனர்.
பண்டரிநாதனுக்காக இருந்த வேட்டியை ஒரு பையிலும், தான் உடுத்தும் வேட்டியை மற்றொரு பையிலுமாக வைத்திருந்தார் ராமதேவ். பைகளை கரையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். கூட வந்த பெரியவரும் ஆற்றுக்குள் இறங்கினார். தான் அணிந்திருந்த வேஷ்டியை அலசி காய வைத்த ராமதேவ், பெரியவரோ துணியைத் துவைக்க முடியாமல் சிரமப்பட்டதால் அவரது வேஷ்டியையும் ராமதேவ் துவைத்தார்.
ஏற்கெனவே கிழிந்திருந்த பெரியவரின் வேஷ்டி மேலும் கிழிந்தது. துண்டுடன் கரையேறிய பெரியவர், “என் வேட்டி காய்ந்து விட்டதா?” எனக் கேட்டார். “ஐயா நான் அடித்துத் துவைத்ததில் உங்களின் வேட்டி கிழிந்து விட்டது” என்றார். “உடுத்த வேஷ்டியில்லையே, என்ன செய்வேன்” எனக் கவலைப்பட்டார் பெரியவர்.
“கவலை வேண்டாம். பாண்டுரங்கனுக்காக நான் கொண்டு வந்த வேஷ்டியை நீங்கள் உடுத்திக்கொள்ளுங்கள்” என்றார் ராமதேவ். அதை உடுத்திக்கொள்ள மறுத்தார் அந்தப் பெரியவர்.
“ஐயா பாண்டுரங்கனுக்கு விலை உயர்ந்த ஆடைகளைக் கொடுக்க பல பக்தர்கள் காத்திருக்கின்றனர். முன்பு ஒரு முறை நூல் வேஷ்டி கொடுத்தபோது அதை சுவாமிக்கு அணிவிக்காமல் பட்டு வேஷ்டியைத்தான் பாண்டுரங்கனுக்கு அழகு. நூல் வேஷ்டியை யாருக்காவது தானம் கொடுங்கள்” என அர்ச்சகர்கள் மறுத்து விட்டனர். இப்போதும் நூல் வேஷ்டிதான் எடுத்து வந்துள்ளேன். அதை உங்களுக்குக் கொடுப்பதில் தவறு இல்லை. ஏழையின் சிரிப்பில்தானே பாண்டுரங்கன் இருக்கிறார்” என்றார் ராமதேவ். பெரியவரும் சம்மதிக்க வேஷ்டியை கட்டி விட்டதோடு அங்க வஸ்திரத்தையும் அவருக்கு அணிவித்தார்.
“ஆஹா, பார்ப்பதற்கு பாண்டுரங்கனை போலவே இருக்கிறீர்கள்” எனப் பாராட்ட பெரியவர் புன்னகைத்தார். இருவரும் நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு பண்டரிபுரம் கோயிலுக்குள் நுழைந்தனர். ராமதேவுக்கு பின்னாலே பெரியவர் வந்து கொண்டிருந்தார். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சன்னிதிக்கு அருகில் செல்லும்போது, கூட வந்த பெரியவரைக் காணவில்லை. ‘சுவாமியை தரிசித்து விட்டு தேடிப் பார்க்கலாம்’ என ராமதேவ் நடந்தார். கருவறையில் பாண்டுரங்கனை கண்டதும் வியப்பில் ஆழ்ந்தார். அவர் கொடுத்த நூல் வேஷ்டி அங்க வஸ்திரத்துடன் சுவாமி காட்சி அளித்தார். ‘பகவானே இவ்வளவு நேரமும் என்னுடன் உறவாடியது நீதானா?’ இந்த எளியவனின் ஆடையை மனமுவந்து ஏற்றுக் கொண்டதும் நீதானா? என்னே உனது கருணை என அழுதபடி நின்றார் ராமதேவ்.