தெய்வீக மணம் கமழும் கோயில் நைவேத்தியங்கள் - அறியப்படாத சுவாரஸ்ய தகவல்கள்!

temple-prasadam
temple-prasadam
Updated on

வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, தயிர் சாதம், கேசரி பாத், சகாரா பாத், ஜீரா , பாயாசம்,மோளா, ஹோரா, கதம்பச் சோறு,பகாளாபாத், பருப்பு வடை, பானகம், அப்பம், ஜிலேபி,மனோகரம் படி, ஹோலி படி, கபயாபடி, வடபடி , மாவு தோசை, நெய் தோசை, வெல்ல தோசை, தேன் தோளம்

இவையெல்லாம் என்ன என்கிறீர்களா? திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் படைக்கப்படும் 25 நைவேத்தியங்கள்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நைவேத்தியத்தில், மகாபாரதப் போரில் ஏற்பட்ட காயங்களை உணர்த்தும் விதமாக மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. மாறாக, நெய் அதிகம் சேர்க்கப்பட்ட சர்க்கரைப் பொங்கல் மிகவும் பிரசித்தி பெற்ற நைவேத்தியமாகும், இது 2 கிலோ அரிசிக்கு 1.4 கிலோ முந்திரி மற்றும் 700 கிராம் நெய் விகிதத்தில் தயாரிக்கப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் கோயிலில் தினமும் அர்த்தஜாம பூஜையின்போது படைக்கப்படும் சிறப்புப் பிரசாதம் முனையதரையன் பொங்கல் ஆகும். இது பேச்சுவழக்கில் 'முனியோதரன் பொங்கல்' என்று அழைக்கப்படுகிறது. இப்பிரசாதம் மிகுந்த சுவையும், நெய் வாசனையும் மிக்கது. இந்த பொங்கலுக்கு ஐந்து, மூன்று, இரண்டு என்று ஒரு பெயர் உண்டு. காரணம் அரிசி ஐந்து பங்கு பாசிப்பருப்பு மூன்று பங்கு வெண்ணெய் உருக்கிய நெய் இரண்டு பங்கு அதையும் சுவாமி முன்னால் காட்டி சேர்க்கிறார்கள். இந்தப் பொங்கல் கோயிலுக்குள் சாப்பிடும் போது அலாதி ருசியாக இருக்கும்.கோயிலை விட்டு வெளியே வந்து சாப்பிட்டால் சுவை குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொங்கலைப் பெற முன்கூட்டியே பணம் கட்டி சொல்லி வைக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
சாட்டிலைட்டையே வியக்க வைத்த மீனாட்சி அம்மன் கோவில்: பாண்டியர்களின் விண்வெளி அறிவியல்!
temple-prasadam

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சுவாமிக்கு நைவேத்தியமாக, புளியோதரை படைக்கப்படுகிறது. அதன் தனித்துவமான சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் அது மிகவும் புகழ்பெற்றது. இந்த புளியோதரை சாதாரண புளியோதரையிலிருந்து மாறுபட்டு, நல்லெண்ணெய், வறுத்த பொடிகள் மற்றும் புளித்தண்ணீர் ஆகியவற்றின் சரியான கலவையுடன், மிகவும் ருசியாக இருக்கும். புளியோதரை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்பெஷல் பொடிதான் இதன் சுவைக்கு முக்கிய காரணம். இதில் எள்ளு வறுத்துச் சேர்க்கப்படுகிறது, இது புளியோதரைக்கு ஒரு தனித்த சுவையைத் தருகிறது.

செங்கல்பட்டில் இருக்கும் சிங்கபெருமாள் கோயிலில் அங்குள்ள நரசிம்மருக்கு படைக்கப்படும் மிகவும் பிரபலமான தோசை சுவை மிகுந்தது காரணம் அதன் மீது தூவப்படும் மிளகாய்த்தூளும், அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள ஏராளமான இதர மசாலாப் பொருட்களும்தான் அதைத் தனித்துவமாக்குகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதங்களில் பிரசித்தி பெற்றது அரவணை பாயசம் ஆகும். இத்துடன் ஐயப்பனுக்கு மேலும் 3 வகையான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. அதிகாலையில் சுவாமிக்கு பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. முதற்கால உஷத் பூஜை காலை 7.30 மணிக்கு நடைபெறும். இதில் தேங்காய் துருவலை பலமுறை இடித்து அதில் இருந்து பெறப்பட்ட பாலை சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் பாயசத்தை சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுவது வழக்கம்.இதனை இடித்துப்பிழிந்த பாயசம் என்கிறார்கள்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு தினமும் காலையில் வெண்பொங்கலுடன் காஞ்சிபுரம் சுவையான இட்லியும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய சுவையான இட்லி . பெருமாளுக்கு இரண்டு இட்லிகளை நைவேத்தியமாக படைக்கின்றனர். அதில் ஒன்றை கைங்கர்யம் செய்கின்றவர்களுக்கும், மற்றொன்று கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுகிறது.

சிதம்பரத்தில் நடராஜர் கோயிலில் சம்பா சாதம் நிவேதனம் செய்வது மிகவும் விசேஷம். சுத்தமான நெய்யில் மிளகு, சீரகம் வறுத்து, சாதத்தில் கலந்து சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில்,மொச்சை, பாசிப்பருப்பு, உளுந்து, துவரை மற்றும் காணம் ஆகிய ஐந்து வகையான பருப்புகளை குருணை போல் உடைத்து வேகவைத்து, அதனுடன் வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் 'கும்மாயம்' எனும் பிரசாதத்தை நைவேத்தியமாக படைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
செல்வம் பெருக... விபத்துக்கள் தவிர்க்க... மகா சக்தி வாய்ந்த பைரவர் வழிபாடு!
temple-prasadam

மதுரை அழகர் கோவிலில் மார்கழி மாதம் கூடாரவல்லி வைபவத்தன்று அக்காரவடிசல் எனும் நைவேத்தியத்தை படைக்கின்றனர். இது பாலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை வேகவைத்து, வெல்லம் மற்றும் அதிக நெய்யில் செய்யப்படும் பாரம்பரிய கோவில் பிரசாதம் ஆகும். இது சர்க்கரைப் பொங்கலைவிட மிகவும் கிரீமியாகவும், நெய்யின் வாசனையுடனும், குங்குமப்பூ சுவையுடன் இருக்கும்.

திருத்தணி முருகப்பெருமானுக்கு தினமும் சுவையான அப்பம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. திருவாரூர் தியாகராஜருக்கு தினமும் அர்த்த ஜாம பூஜையின்போது நெய் முருக்கு தயார் செய்து நைவேத்தியமாக படைக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com