கிருஷ்ண ஜெயந்தி: தமிழகத்தில் தவறவிடக்கூடாத 4 பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில்கள்!

ஆன்மீக அதிர்வுகளும் வரலாற்று சிறப்புமிக்க இந்த அற்புத தலங்களை தரிசித்து அருள் பெறுங்கள்.
கிருஷ்ணர் கோவில்கள் - Krishna Jayanthi temples
ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் திருவல்லிக்கேணி - கிருஷ்ணர் கோவில்கள்
Updated on

கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று இந்தியாவில் தரிசிக்கவேண்டிய மிகவும் புகழ்பெற்ற மற்றும் ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த கிருஷ்ணர் கோவில்கள் நிறைய உள்ளன. கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) அன்று மக்கள் பெருந்திரளாகச் சென்று தரிசிக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிருஷ்ணர் கோவில்கள் சிலவற்றைக் காணலாம்.

ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் திருவல்லிக்கேணி:

தமிழகத்தில் கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களுக்கு மிகவும் புகழ்பெற்ற பழமையான வைணவத்தலம் இது. மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக (பார்த்தசாரதியாக) இருந்த கிருஷ்ணரின் வடிவில் இறைவன் இங்கு வீற்றிருக்கிறார். இங்கு கிருஷ்ணர் மீசையுடன் காட்சி அளிப்பது இந்தியாவின் மற்ற கோவில்களில் காணமுடியாத தனிச்சிறப்பாகும்.

சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங் களுக்கு மிக முக்கியத் தலமாக இது விளங்குகிறது. அன்றைய தினம் விடியற்காலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இத்தலத்தில் ஸ்ரீஜெயந்தி விழா அன்று இரவு மூலஸ்தானத்தில் இருந்து குட்டி கண்ணன் சர்வ அலங்காரத்துடன் கைத்தலத்தில் எழுந்தருளி, சங்குப்பால் அமுது செய்யும் தனித்துவமான வைபவம் நடைபெறும். நள்ளிரவில் பார்த்தசாரதி பெருமாளுக்கும் கண்ணனுக்கும் விசேஷத் திருமஞ்சனமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். விழாவின் மறுநாள் காலையில் கண்ணன் சேஷ வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதன்பின் புகழ்பெற்ற உறியடி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.

108 திவ்ய தேசங்களில் 61வது தலமான இக்கோவில் வரலாற்று சிறப்புமிக்க வைணவ திருத்தலமாகும். இங்கு பெருமாள் தன் மனைவி ருக்மணி, தம்பி சாத்யகி, சகோதரன் பலராமன் மற்றும் மைந்தர்கள் பிரத்யும்னன், அனிருத்தன் ஆகியோருடன் குடும்பத்தோடு அருள்புரிகிறார்.

கிருஷ்ணர் கோவில்கள் - Krishna Jayanthi temples
ராஜகோபால சவாமி கோவில் மன்னார்குடி - கிருஷ்ணர் கோவில்கள்

ராஜகோபால சவாமி கோவில் மன்னார்குடி (திருவாரூர்):

'தட்சிண துவாரகை' என்று ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் இத்தலத்தில் மூலவர் ராஜமன்னார், கையில் செங்கோலுடன், தலையில் சுருள் முடியுடன் மாடு மேய்க்கும் சிறுவனாக, பவ்யமான எழிலோடு காட்சியளிக்கிறார். இத்தலத்தின் மூலவர் ராஜகோபாலசுவாமி கண்ணனின் வடிவமாகப் போற்றப்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சிறப்புகள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!
கிருஷ்ணர் கோவில்கள் - Krishna Jayanthi temples

இங்கு கோகுலாஷ்டமி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குருவாயூருக்கு அடுத்தபடியாக ஸ்ரீ கிருஷ்ணர் கோலோச்சும் தட்சிண துவாரகை இது என்று அழைக்கப்படுகிறது. மூலவர் வாசுதேவப் பெருமாள், உற்சவர் ராஜகோபாலர் வெண்கலத் திருமேனியால் ஆனவர்.

கோகுலாஷ்டமி அன்று இங்கு பச்சிளம் குழந்தை வடிவிலான சந்தான கோபாலனைக் கைகளில் ஏந்தி பிரார்த்திக்கும் விசேஷ வழிபாடு நடைபெறும். இதனால் மழலை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கிருஷ்ணர் கோவில்கள் - Krishna Jayanthi temples,
ஸ்ரீ காளிங்கநர்த்தனர் திருக்கோவில், ஊத்துக்காடு - கிருஷ்ணர் கோவில்கள்

ஸ்ரீ காளிங்கநர்த்தனர் திருக்கோவில், ஊத்துக்காடு (கும்பகோணம்):

புகழ்பெற்ற கிருஷ்ண பக்தரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் வாழ்ந்து, கண்ணனைப் பாடிப் பரவிய தலம் இதுவாகும். இங்கு காளிங்கன் என்ற நாகத்தின் தலை மீது நடனமாடும் கிருஷ்ணரின் ஐம்பொன் சிலை உள்ளது. கண்ணனின் இடது கால் கட்டை விரல் மட்டுமே பாம்பின் தலை மீது படிந்திருக்கும்படி இந்தச் சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது வியக்கத்தக்கதாகும்.

குழந்தைகள் இசை, நாட்டியம் போன்ற கலைகளில் சிறந்து விளங்க கோகுலாஷ்டமி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து மக்கள் சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்.

கிருஷ்ணர் கோவில்கள் - Krishna Jayanthi temples,
பாண்டவ தூதப் பெருமாள் கோவில் காஞ்சிபுரம் - கிருஷ்ணர் கோவில்கள்

பாண்டவ தூதப் பெருமாள் கோவில் காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் திருப்பாடகத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் கோவில் ஜென்மாஷ்டமி அன்று தரிசிக்க வேண்டிய மிக முக்கியமான 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மகாபாரதக் கதையில் துரியோதனின் அவைக்கு பாண்டவர்களின் தூதனாக கிருஷ்ணர் சென்ற நிகழ்வை விவரிக்கும் தலமிது. இங்குள்ள கருவறையில் சுமார் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமர்ந்த கோலத்தில் கிருஷ்ண பரமாத்மா காட்சி அளிக்கிறார்.

கிருஷ்ணர் மனித வடிவில் தூது சென்றதைக் குறிக்கும் வகையில் நான்கு கரங்களுக்கு பதிலாக இங்கு இரண்டு கரங்களுடன் மட்டுமே காட்சி அளிப்பது தனி சிறப்பாகும். இக்கோவிலின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும் ஒன்று. அன்றைய தினம் பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனமும் புல்லாங்குழல் அலங்காரம் செய்யப்பட்டு கண்கவர் எழிலுடன் காட்சி தருவார்.

இதையும் படியுங்கள்:
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்: அபூர்வ சம்மோகன கிருஷ்ணர் ரகசியம்!
கிருஷ்ணர் கோவில்கள் - Krishna Jayanthi temples
logo
Kalki Online
kalkionline.com