

நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட ரமணர் கோவில். இங்கு பெருமாள் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணப் பெருமாள் சீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். புராண காலத்தில் வில்வாரண்ய க்ஷேத்திரம் என்று பூஜிக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாள் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் மோகனா அவதாரத்தில் காட்சி தந்ததால் மோகனூர் என்ற பெயர் வழங்கப்பட்டது. இங்கு நவக்கிரகங்கள் மேற்கூரையில் மரச் சிற்பமாக இருக்கின்றன. மோகனூர் கோவில் அந்தந்த கிரகங்களுக்குரிய மரங்களால் செதுக்கப்பட்டுள்ளது.
சூரியன் _எருக்குமரம், சந்திரன்_பலாசுமரம், செவ்வாய் _ கருங்காலிமரம், புநன்_நாயுருவி, வியாழன்_ஆலமரம், சுக்கிரன்_அத்திமரம் சனி. வன்னிமரம், ராகு_ அருகம்புல்மரம், கேது_வெற்றிலைக் கொடியாகும். இக்கோவில் உத்சவர் விசேஷமானவர். பொதுவாக உத்சவர் மார்பில் லக்ஷ்மி இருப்பார். இங்கு பெருமாள் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும் அதன் மத்தியில் மகாலக்ஷ்மியின் ரேகை உள்ளது.
தல வரலாறு
இங்கு வசித்த பக்தர் ஒருவர் வெங்கடாஜலபதி மீது அதீத பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால் திருப்பதி செல்ல முடியவில்லை. மனம் வருந்தி காவிரியில் மூழ்கி உயிர் துறக்க அங்கு சென்ற போது புற்றிலிருந்து ஒரு நாகத்தைக் கண்ட அவர் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு வீடு திரும்பினார்.
அவரது கனவில் பாம்பு தோன்றி தான் புற்றுக்குள் திருமால் வடிவில் இருப்பதாகக் கூறினார். மறுநாள் பக்தர் புற்றை உடைக்க உள்ளே பெருமாள் சிலை இருந்தது அந்த இடத்திலேயே சீதேவி பூதேவி சமேதராக மணக் கோலத்தில் பிரதிஷ்டை செய்தார். இவருக்கு கல்யாண பிரசன்ன வெங்கட ரமணர் என்ற பெயர் ஏற்பட்டது.
திருச்செங்கேடு தலத்தில் ஈசனும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சி தருவது போல் இங்கு கிருஷ்ணனும் ருக்மிணி யும் இணைந்து சம்மோகன அபூர்வ கோலத்தில் இணைந்திருக்கும் கோலத்திற்கு கோபால சுந்தரி என்று பெயர்.
இக்கோவில் மகாமண்டபத்தில் வலதுபுறம் ருக்மிணியும் கிரீஷ்ணரும் இணைந்த அர்த்தநாரி கோலம் சன்னதி அமைந்துள்ளது. இதில் வலதுபுறம் ஆண் உருவமும், இடதுபுறம் பெண் உருவமும் சங்கு சக்கரம், அங்குசம், தாமரை மலர், வில், மலரம்புகள், புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களுடன் சம்மோகன கிருஷ்ணர் தோற்றம் அளிக்கிறார்
பீதாம்பரம் தரித்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் கருணை பொங்கும் விழிகளோடு அருள்தரும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வமான கோலத்தைக்காண செல்வ வளம் பெருகும். இத்திருக்கோலத்தைத் தரிசித்தால் குபேர வாழ்வு வாழலாம். சிவபெருமான் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தைத் தரிசித்த தலமாகும்.
இக்கோவிலில் இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் ஆண்டு இறுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து இத்தலத்தில் பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை புரட்டாசி மற்றும் மாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து மூன்று தினங்களிலும் ஆதவன் தன் ஒளிக்கதிர்களால் பெருமாளை ஆராதிப்பது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் நிகழ்வாகும்.
நவராத்திரி விழாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருமலையில் ஒருநாள் என்ற சிறப்பான வைபவம் நடைபெறுகிறது. அன்று திருப்பதியில் அதிகாலை சுப்ரபாத சேவையிலிருந்து இரவு ஏகாந்த சேவைவரை நடப்பதைப் போன்று இத்தலத்திலும் சிறப்பாக நடைபெறுகின்றது.
குழந்தைபாக்கியம், கல்வி செல்வம், திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வழிபடுகிறார்கள். சத்யநாராயணா பூஜையில் மட்டை தேங்காய் உரித்து வழிபடுகின்றனர். இல்லற வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிப்பவர்கள் இங்குள்ள சம்மோகன கிருஷ்ணனை பூஜித்து நெய் தீபம் ஏற்ற தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.
இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம், உங்கள் குடும்பத்தில் உள்ள திருமணத் தடைகள் நீங்கி, தம்பதியிடையே ஒற்றுமை பலப்பட்டு, செல்வ வளமும் கல்வி மேம்பாடும் அடையும் மிகச் சரியான வழிபாட்டு முறைகளையும் நேரத்தையும் நீங்கள் கண்டறிவீர்கள்.