
ஸ்ரீஅன்னை என்று போற்றப்படும் மிர்ரா, பிரான்ஸ் நாட்டில் 1878ம் ஆண்டு பிறந்தவர். ஆன்மிகப் பற்று இவரை இளவயதிலேயே பற்றிக் கொண்டது. இறைதன்மை கொண்ட ஆன்மா வெளிப்படுத்தும் இறையம்சங்களை எல்லாம் உடலும் வெளிப்படுத்தத்தான் செய்கிறது என்பார் இவர். விளக்கை இரு கரங்களால் மூடினாலும், விரல் இடுக்குகள் வழியாக செவ்வரிகளாக ஒளி வெளியே சிந்துகிறதே அதுபோல.
ஆன்மிகத்தில் உயரிய பக்குவம் பெற அவர் தன்னுடைய முப்பத்தாறாவது வயதுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வயதில்தான் 1914ம் ஆண்டு அவர் பாண்டிச்சேரிக்கு வந்தார்; மகான் ஸ்ரீஅரவிந்தரை தரிசித்தார். தன் மனதில் ஆன்மிக உணர்வினைத் தோற்றுவித்த குரு இவரே என்பதையும், பாண்டிச்சேரியே தன் ஆன்மிக வாழ்விற்கு ஏற்ற இடம் என்பதையும் உணர்ந்து கொண்டார். 1919ம் ஆண்டு முதல் தன்னுடைய 41வது வயதில் இங்கே குடியேறினார். ஸ்ரீஅரவிந்தரின் கோட்பாடுகளை உள்ளார்ந்து ஏற்றுக் கொண்டு அவர் ஆசிரமத்தில் தங்கி ஆன்மிகப் பணியை மேற்கொண்டார்.
உயிரற்றப் பொருட்களை நேசியுங்கள் என்பார் அவர். ‘‘உங்களுடைய கை, கால் என்று உறுப்புகள் எப்படி உங்களுடனேயே ஐக்கியமாகி விடுகிறதோ, அதுபோலதான் நீங்கள் பயன்படுத்தும் புத்தகம், நாற்காலி, வாகனம் போன்றவையும். அவற்றை வெறும் ஜடப் பொருட்களாகக் கருதாதீர்கள். அசையாது கிடந்தாலும் அவற்றுக்கும் ஆன்மா உண்டு.
மூலைகள் மடிக்கப்பட்டும், சுருட்டப்பட்டும், வீசி எறியப்பட்டப் புத்தகத்தைச் சற்று உற்றுப் பாருங்கள் – அவை வருந்தி அழுவதை உணர்வீர்கள். ‘இத்தனை நாள் அறிவைப் புகட்டிய என்னை அலட்சியமாகத் தூக்கி எறிந்திருக்கிறாயே, இது முறையா?‘ என்று அது உங்களைப் பார்த்து கேட்கத்தான் செய்கிறது.
புத்தகம் என்றில்லை, நீங்கள் பயன்படுத்தும் மேசை, நாற்காலியில் ஏதேனும் ஒரு விளிம்பு உடைந்திருந்தால் உடனே அதை சரி செய்யுங்கள்; அதில் படிந்திருக்கும் அழுக்கை முறை வைத்துத் துடைத்து பளிச்சென்று மாற்றுங்கள். இதுபோன்ற ஏதேனும் ஒரு குறையுடன் அவை உங்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவர் மீது மனக்குறையை வைத்துக் கொண்டே உங்களால் அவருக்குப் பரிபூரணமாக சேவை செய்ய முடியுமா?‘‘
அன்பு செலுத்துதல், அஃறினைப் பொருட்களுக்கும் அவசியம் என்ற பரந்த நோக்கில் ஸ்ரீஅன்னையைத் தவிர வேறு யாரேனும் சிந்தித்திருப்பார்களா என்பது சந்தேகமே!
கடற்கரையை ஒட்டி ஒரு கிடங்கு இருந்தது. கடல் அலைகளால் அதன் சுற்றுச் சுவர் இடிபட்டு விழுந்து கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் சுவர் எழுப்பினாலும், அலைகளால் அது இடிந்து விழுந்து கொண்டேயிருந்தது. இதனாலேயே அந்தக் கிடங்கை யாரிடமும் விற்க முடியாமல் தவித்தார் அதன் உரிமையாளர். இறுதியில் அன்னை, தன் ஆசிரமப் பயன்பாட்டுக்காக வாங்கிக் கொள்ளச் சம்மதித்தபோது பெரிதும் மகிழ்ந்தார். ஆனால் அன்னையின் சீடர்கள் சுவர் இடிந்து விழும் ஆபத்தைச் சுட்டிக் காட்டி எச்சரித்தார்கள். ஆனால் அன்னை அதற்கு உடன்படாததால், புதிதாக சுவர் எழுப்பப்பட்டது. இப்போதும் கடலலைகளால் அது இடிந்து விழுந்தது.
அன்னை கடற்கரைக்கு வந்தார். ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். கடலுடன் பேசினார்!
‘‘இது என் பரப்பு. எனக்குச் சொந்தமான நிலம்,‘‘ என்றது கடல்.
‘‘இருக்கலாம். ஆனால் இப்போது இந்தக் கட்டடம் பொதுமக்கள் சேவைக்காக எனக்கு வேண்டும்,‘‘ என்றார் அன்னை. அப்போதே கடல் தன் அலைகளை உள்வாங்கிக் கொண்டது!
‘‘இப்போது சுவர் எழுப்புங்கள்,‘‘ என்றார் அன்னை. அவ்வாறு உருவான சுவரை இன்றுவரை கடலலைகள் பாசமாகத் தீண்டுகின்றனவே தவிர, ஆக்ரோஷமாக இடிக்கவேயில்லை.
உயிரற்றது எனக் கருதப்படும் பொருளுடனும் அன்னையால் உரையாட முடிந்தது என்பதற்கான் ஓர் உதாரணம் இச்சம்பவம்.
ஸ்ரீஅன்னையை ஒருமுறை நினைத்தவருக்கும் அவருடைய அருள் எளிதாகக் கிட்டும் என்பது அன்பர்களின் அனுபவம். ஸ்ரீஅன்னை மகாசமாதி அடைந்துவிட்டாலும், இன்றும் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் அவர் அரூபமாக ஆசி வழங்குவதை உணர முடிகிறது.
அவருடைய மகாசமாதியில் கை பதித்து வணங்கும்போது, உடலெங்கும் மெல்லிய அதிர்வு ஏற்படுவதை அனைவரும் உணரலாம். அதுவே அன்னையின் அருள் என்ற நிம்மதியும் கிட்டும்.