
ஆடி மாதத்தின் சிறப்புகள் ஒன்றல்ல, இரண்டல்ல, பல உண்டு. அம்மனுக்கும், முருகப் பெருமானுக்கும், குருக்களுக்கும், பித்ருக்களுக்கும், பெண்களுக்கும், பக்தர்களுக்கும், அனைத்து நதிகளுக்கும் உகந்த மாதம்.
ஆடி மாதம் முதல் நாள்
புதிதாக திருமணமான தம்பதிகளை, பெண் வீட்டினர் அழைத்து உபசரிப்பது, வெள்ளி தம்ளரில் பாயாசம் கொடுப்பது மற்றும் விருந்தோம்பல் செய்து பரிசுகள் அளிக்கும் நாள்.
ஆடிச் செவ்வாய் ஆடி வெள்ளிக் கிழமைகள்
பக்தர்கள் அம்மனை வழிபடுவது, தீ மிதிப்பது, கூழ் காய்ச்சி ஊற்றுவது, அம்மன் பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லும் நாட்கள்.
ஆடிப் பூரம்
அம்மனை நன்கு அலங்கரித்து, கைகள் நிறைய கலர் கலரானா கண்ணாடி வளையல்களை அணிவித்து, வளைகாப்பு விழா நடத்தி, சிறப்பாக பூஜை செய்யும் நாள்.
ஆடி அமாவாஸ்யை
பித்ருக்களை மனதார நினைத்து, பூஜை, தர்ப்பணம் போன்றவைகளைச் செய்து, தானமளிக்கும் நாள்.
ஆடிக் கிருத்திகை
முருகப் பெருமானுக்கு உகந்த நன்னாள். பக்தர்கள் விரதமிருந்து, முருகப்பெருமானை வழிபடும் நாள்.
ஆடி பதினெட்டு
விதவிதமான கலந்த சாதங்களைத் தயாரித்து, நதிக்கரை, மொட்டைமாடி ஆகிய இடங்களில் குடும்பத்தினர், நண்பர்களுடன் அரட்டை அடித்தவாறு குதூகலமாக இருக்கும் நாள்.
ஆடியில் வரும் ஸ்ரீவரலட்சுமி விரதம்
ஸ்ரீவர மகா லட்சுமியை அலங்கரித்து,"வரலட்சுமி ராவே மா இண்டிகி " என்று அன்புடன் வீட்டுக்கு அழைத்து பூஜை செய்யும் நாள்.
ஆடித் தபஸு
அம்மன் ஊசிமுனையில் அமர்ந்து, சிவபெருமானை நினைத்து கடுமையான தபஸை மேற்கொண்ட நாள்.
சங்கரன் கோவில் ஆடித்தபஸு விபரங்கள்
ஆடித்தபஸு, ஆடி மாத உத்திராட நட்சத்திரத்தில் வருவதாகும். சங்கரன் கோவிலில், ஆடித் தபஸு விழா விமரிசையாக நடைபெறும். அரியும், சிவனும் ஒன்று என்பதை கோமதி அம்மனுக்கு உணர்த்தும் வகையில், சங்கர நாராயணராக சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்வே ஆடித் தபஸாகும். ஆடித் தபஸு உற்சவம் சங்கரன் கோவிலில், 12 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும்.
அம்மன் ஊசிமுனையில் தபஸிருந்ததின் பின்னணி
சங்கன்-பதுமன் என்கிற இரு நாகர்கள், தங்களுடைய இஷ்ட தெய்வங்களாகிய திருமால், சிவபெருமான் இருவரில் யார் பெரியவர்? எனத் தங்களுக்குள்ளேயே வாக்குவாதம் செய்தனர். ஒரு முடிவிற்கும் வரமுடியாததால், அம்மனிடம் சென்று கேட்க, அம்மனோ சிவபெருமானிடம் விளக்கம் கேட்டார். அப்போது சிவபெருமான், "பூலோகத்திலிருக்கும் புன்னைவனம் சென்று அம்மன் தவமிருந்தால், அம்மனின் சந்தேகம் தீர்க்கப்படுமென" கூறினார்.
அம்மன், உடனே பூலோகம் சென்று ஊசி முனையில் தபஸிருக்க ஆரம்பித்தாள். அந்த புன்னை வனமிருந்த இடமே சங்கரன் கோவிலாகும். அம்மனின் கடுமையான தபஸினைக் கண்ட சிவபெருமான், அம்மன், சங்கன் மற்றும் பதுமனுக்கு சங்கர நாராயணராக காட்சி அளித்து, "ஹரியும், சிவனும் ஒன்றே" என உணர்த்தினார்.
உபரி தகவல்கள்
அம்மன், ஊசி முனையிலமர்ந்து செய்த முதல் தபஸ் "ஆடித்தபஸ்". அம்மன், சிவபெருமானின் சுயரூப தரிசனம் வேண்டி செய்த இரண்டாவது தபஸ், ஐப்பசி திருக்கல்யாண விழா.
அம்மன் வீற்றிருக்கும் சந்நிதிக்கு முன்பாக தரையில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. இதைப் பிரதிஷ்டை செய்தவர் திருவாவடுதுறை ஆதீனம் பத்தாவது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் ஆவார். இந்த சக்கரத்தின் மீதமர்ந்து, கண்களை மூடி, கரங்களைக் கூப்பி, கோமதி அம்மனை பிரார்த்தனை செய்தால் எண்ணிய காரியங்கள் சித்தி பெறும்.
ராகு- கேது தோஷம், காலாசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவைகளை நீக்கும் புனிதத் தலம். சந்நிதியின் பிராகார வாயு மூலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புற்றுமண் பிரசாதம் சகல தோஷங்களையும் நீக்க வல்லது.
அமர்க்களமான பண்டிகைகளைத் தன்னுள்ளே கொண்டு அனைவரையும் மகிழ வைக்க வரும் சிறப்பான ஆடி மாதத்தினை வணங்கி வரவேற்போம்.