
தீபாவளி (Diwali) என்ற சொல் தமிழில் இருந்து வந்தது இல்லை. தீபாவளி என்பது சமஸ்கிருத சொல் என்று கூறப்படுகிறது. மேலும், தீபாவளி என்பதற்கு தமிழில் ‛விளக்குகளின் வரிசை' என்று பொருள்படும். அதோடு, இருளை நீக்கி ஒளி தருவது, தீமை அழிந்து நன்மை பிறப்பது, அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பது உள்ளிட்டவற்றையும் தீபாவளி குறிக்கிறது. நம் நாட்டில் தீபாவளி என்பது இந்து, சமண, சீக்கியர்களின் முக்கியப் பண்டிகையாக உள்ளது. அதேபோல், மற்றவர்களும் கலாசார ரீதியாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை கி.பி. 15ம் நூற்றாண்டிலிருந்துதான் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முதன் முதலாகக் கொண்டாடியவர் நரகாசுரன் மைந்தன் பகதத்தன்.
கடுமையான போருக்குப் பிறகு தசமி அன்று ராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்திக்குத் திரும்ப ராம - லட்சுமணருக்கு சரியாக 21 நாட்கள் ஆனது. ராமர், சீதை, லட்சுமணன் அயோத்திக்கு திரும்பும் நாளில், அவர்களை வரவேற்க அயோத்தி முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விஜயதசமிக்கு சரியாக 21 நாட்களுக்குப் பிறகு தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு காரணம் இதுதானாம்!
கி.பி. 1117ம் ஆண்டு வாழ்ந்த திருபுவன சாளுக்கிய மன்னன் ‘சாத்யாயர்’என்ற அறிஞருக்கு ஆண்டு தோறும் தீபாவளி நாளில் பரிசுகளை வழங்கினார் என்று கன்னடக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. தென் இந்தியாவில் தீபாவளி பற்றிய முதல் குறிப்பு இதுதான்.
வட மாநிலங்களில் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆனால், குஜராத்தில் தீபாவளி பண்டிகை 20 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. தீபாவளி சமயத்தில் இனிப்பு சாப்பிடுவது விசேஷமானது. அத்துடன் சிறிது உப்பையும் சேர்த்து சாப்பிடுவார்கள். இந்நாளில் உப்பு விற்பனை அதிகமாக இருக்கும். குஜராத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் பூலோக வாழ்வை நீத்து, வைகுண்டம் சென்ற நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
ஆந்திரா மாநிலத்தில் காலை நேரத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் கிடையாது. பகலில் விருந்து உண்டு இரவில் தீபமேற்றி வீட்டை அலங்கரிப்பர். கர்நாடகாவில் தீபாவளி அன்று ‘திவா’ எனும் அகல் மண் விளக்குகளை விதவிதமாக வாங்கி வீட்டில் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ராஜஸ்தானில் தீபாவளி அன்று பூனைகளுக்கு வழிபாடும் படையலும் உண்டு. அவர்கள் பூனையை மகாலட்சுமி வடிவத்தில் பார்க்கிறார்கள். ராஜஸ்தானியருக்கு அமாவாசை என்றால் மாதம் முடிந்ததாகப் பொருள். மறுநாள் புது மாதம் தொடங்கி விடும். தீபாவளியுடன் ஆண்டு முடிந்து விடும். மறுநாள் அடுத்த ஆண்டு ஆரம்பித்து விடுமாம்.
மத்திய பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் தீபாவளிக்கு மறுநாள் கோவர்தன பூஜை நடைபெறும். அப்போது காளை மாடுகளை மோதவிட்டு விளையாடி மகிழ்வார்கள். பீகாரில் தீபாவளி அன்று ஆண்கள் கூடை நிறைய நெற்கதிர்களும், புல்லும் எடுத்துக் கொண்டு கிராமத்தை வலம் வருவார்கள்.
மகாராஷ்டிராவில் தீபாவளி அன்று கடற்கரை பகுதிகளில் சிறு சிறு மணல் கோட்டைகள் கட்டி கொண்டாடுகிறார்கள். இது மராட்டிய மன்னர் வீர சிவாஜி தீபாவளி அன்று தனது எதிரிகளின் கோட்டைகளை கைப்பற்றியதன் நினைவாக கடைப்பிடிக்கப்படுகிறது.
நேபாளத்தில் தீபாவளி, திஹார் (Tihar) என்று அழைக்கப்படுகிறது. இது 5 நாள் பண்டிகை ஆகும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விலங்குகள் மற்றும் கடவுள்களை வழிபடுகின்றனர்.
இலங்கையில் தீபாவளியை சீதை விடுதலை பெற்ற நாளாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு மகாலட்சுமி பூஜை செய்கிறார்கள். விக்கிரமாதித்தன் தீபாவளி தினத்திற்கு மறுநாள்தான் தனது விக்ரம சகாப்தம் தொடங்கினான்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் அரசு சிறப்பு தபால் தலை வெளியிடுவது வழக்கம். ஆனால், முதன் முதலாக அமெரிக்கா அங்கு வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்காக 2016ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி தீபாவளி சிறப்பு தபால் தலையை வெளியிட்டது. தங்க நிறத்தில் ஒரு விளக்கு எரிவதைப் போன்ற படத்துடன் அந்த தபால் தலை வெளிவந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2018ம் ஆண்டு ஐ.நா சபையின் தபால் நிர்வாகம் சார்பில் முதன் முதலாக தபால் தலை வெளியிட்டது. இந்த தபால் தலையில் ‘ஹேப்பி தீபாவளி’ என்ற வாசகம் இடம்பெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2021ம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பிரிட்டன் அரசு வெளியிட்டது. இந்த நாணயத்தின் ஒருபுறம் மகாத்மா காந்தி பொன் மொழியும், மறுபுறம் தேசிய மலராக தாமரையும் இடம் பெற்றது.