பிரதோஷங்களில் சனி பிரதோஷம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் ஏற்றுக்கொண்டதும் அதற்குப் பின்பு ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி தினமாகும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனமாடி தேவர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அருள் செய்த காலம்தான் பிரதோஷ காலமாகும்.
ஆலகால விஷத்தை உண்டு கண்டத்தில் நிறுத்தி நீலகண்டன் ஆகி தேவர்களையும் உலக உயிர்களையும் சிவபெருமான் காத்த தினம் சனிக்கிழமை. இதனால்தான் சனி பிரதோஷம் சனி மகாபிரதோஷம் எனக் கூறப்படுகிறது. அதனால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு மகாபிரதோஷம் என்ற பெயரும் உண்டு. நாளை (28.12.2024) சனி மகா பிரதோஷ தினம்.
இந்த சனி பிரதோஷ நாளில் அனைத்து தெய்வங்களும் சிவ சன்னிதியில் சிவபெருமானை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் எனவும், அந்த நாளில் நாம் சிவாலயங்களுக்குச் சென்று வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் ஐதீகம். சனி பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால் ஒரு ஆண்டு முழுவதும் பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மலை சாத்தி நெய் விளக்கேற்றி பச்சரிசி வெல்லம் நிவேதனம் செய்து பூஜை செய்யலாம். பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்த பிரதோஷம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேகம் நீர் விழும் கோமுகி தீர்த்த தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலமிடமாக, இடவலமாக மேற்கொள்ளப்படும் பிரதோஷ முறையே பிரதோஷ பிரதட்சணம் எனப்படுகிறது.
வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபட வீட்டில் சுபிட்சம் உண்டாக முன் ஜன்ம பாவங்களில் இருந்து விடுபட சனி பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவாலயம் சென்று நெய் விளக்கேற்றி நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் வில்வமாலை சாத்தி வழிபாடு செய்துவிட்டு அன்றைய தினம் உப்பு, காரம், புளிப்பு இல்லாத உணவைக் கொண்டு விரதத்தை முடித்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.
சனி பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் உண்டாகும். இன்றைய தினத்தில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.
சனி பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தைக் காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சன்னிதிகள் திரையிடப்பட்டிருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம். நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு இடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவபெருமானை தரிசிப்பது சிறப்பு தரும். பிரதோஷ நேரத்தில் ‘நமசிவாய’ மந்திரம் ஜபிப்பதால் நமது முன்னோர்கள் ஏழு தலைமுறைகள் செய்த பஞ்சமா பாதகங்கள் யாவும் அழிந்து விடும் எனப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது விசேஷமான ஒன்றாகும். பால், நெய், தேன், சந்தனம், தயிர், நல்லெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். ஒவ்வொரு பொருளுக்கும் நம் குறை தீர்க்கும் சக்தி உண்டு. சிவபெருமானுக்கு தயிர், அபிஷேகம் செய்தால் குழந்தைப் பேறு கிட்டும். சந்தன அபிஷேகம் செய்தால் அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் பெருகும். கடன் தொல்லைகள் தீர வேண்டுமானால் அரிசி மாவு அபிஷேகம் செய்ய வேண்டும். ஆரோக்கியம் காக்க பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
வேலை வாய்ப்பு அமைய சிவனுக்கு விபூதி அபிஷேகம் செய்ய வேண்டும். சர்க்கரை அபிஷேகம் செய்தால் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அழிக்கும் தன்மை கிடைக்கும். குடும்ப நலன் காக்க இளநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். மரண பயம் நீங்க எலுமிச்சை சாறால் அபிஷேகம் செய்ய வேண்டும். சகல ஐஸ்வரியமும் கிடைக்க பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். வாழ்வில் முக்தி கிட்ட நெய் அபிஷேகம் செய்ய வேண்டும்.
‘ஓம் நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கூறி வழிபட, சனிக்கிழமை பிரதோஷம் ஏழரைச் சனி, ஜன்ம சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமச்சனி என அனைத்து சனி தோஷங்களையும் போக்கி, வாழ்க்கையை நிம்மதியாக ஆயுள், ஆரோக்கியம், அளவிலா செல்வம் என அனைத்தையும் தந்து சிறப்புற்று வாழ வைக்கும். சனி பிரதோஷ நாளில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபட்டு பேரருள் பெறுவோம்.