அர்ஜூணனின் தேர் கொடியில் அனுமன் அமர்ந்தது எப்படி?

Hanuman
Hanuman
Published on

ராமாயணமும், மகாபாரதமும் இரு வேறு காவியங்கள். இதில் ராமாயணம் மகாவிஷ்ணுவின் ராம அவதாரம் பற்றியும், மகாபாரதம் கிருஷ்ண அவதாரம் பற்றியதாகும். ஆனால் இரண்டு காவியங்களிலும் இடம் பெறும் ஒரே கதாபாத்திரம் ராம பக்தன் அனுமன். மகாபாரதத்தில் பல இடங்களில் அனுமன் வருவதை பார்த்திருப்போம்.

கதையில் மட்டுமல்ல பாரதப் போரில் அர்ஜூணனின் தேர்க்கொடியில் அனுமன் இருப்பார். பொதுவாக போரில் பயன்படுத்தப்படும் தேர்க் கொடியில் அவர்கள் சார்ந்த நாட்டின் முத்திரை சின்னமே இடம்பெற்றிருக்கும். ஆனால் பஞ்ச பாண்டவர்களில் வேறு யாருடைய கொடியிலும் இல்லாமல் அர்ஜூனனின் தேர் கொடியில் மட்டும் அனுமன் இருப்பார். இதற்கு காரணம்...

அர்ஜூனனுக்கு வந்த சந்தேகம் :

வில் வித்தையில் சிறந்தவர்களாக மகாபாரதத்தில் அர்ஜூணனை சொல்வதை போல், ராமாயணத்தில் ராமரை சொல்வார்கள். அர்ஜூணனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. "ராமரை சிறந்த வில் வித்தை வீரர் என்கிறார்கள். அப்படியானால் அவர் ஏன் தனது வில்லை பயன்படுத்தி அம்புகளைக் கொண்டே சேது பாலத்தை கட்டவில்லை? தெய்வ அம்சமான அவருக்கு எதற்காக வானரங்களின் உதவி தேவைப்பட்டது?". இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தான்.

அனுமனிடம் சவால் விட்ட அர்ஜூனன் :

இதை யோசித்த படியே பாசுபதாஸ்திரத்தை பெறுவதற்காக சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு நதிக்கரையில், சாதாரண வானர உருவத்தில் அமர்ந்து ராம நாமம் ஜபித்துக் கொண்டிருந்தார் அனுமன். அவரிடம் சென்று, "ஏய் வானரமே...உங்களுடைய ராமன் உண்மையிலேயே சிறந்த வில்லாளி என்றால் வில்லிலேயே பாலம் கட்டி இருக்கலாமே? எதற்காக உன்னை போன்ற வானரங்களிடம் உதவி கேட்டார்? " என அலட்சியமாக கேட்டான்.

அர்ஜூணனின் ஆணவத்தை அடக்க எண்ணிய அனுமன், "அம்புகளால் அமைக்கப்படும் சரப்பாலம் என் ஒருவனுடைய பாரத்தையே தாங்காது. அப்படி இருக்கையில் ஒட்டு மொத்த வானரங்களின் பாரத்தையும் எப்படி தாங்கும்?" என்றார். அதற்கு அர்ஜூனனோ, "ஏன் தாங்காது...நீ மட்டுமல்ல உன்னை போல் எத்தனை வானரங்கள் நின்றாலும் தாங்கும் படியான உறுதியான பாலத்தை இந்த நதியின் குறுக்கே நான் கட்டுகிறேன்," என்றான்.

இதையும் படியுங்கள்:
சூடுபடுத்தும் உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் இருக்க டிப்ஸ்!
Hanuman

ராம நாம மகிமை :

தனது காண்டீபத்தின் சக்தியின் மீதிருந்த அபார நம்பிக்கையின் காரணமாக, பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிரை விடுகிறேன் என்றான் அர்ஜூணன். பதிலுக்கு அனுமனும், நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும் உனக்கு அடிமையாக உன்னுடைய தேர்க் கொடியில் இருக்கிறேன் என்றார். அர்ஜூணன் அம்புகளால் பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரமாக அமர்ந்து ராம நாமம் ஜபிக்க துவங்கினார்.

அர்ஜூணன் பாலத்தை கட்டி முடித்ததும், அதில் ஏறி சோதனை செய்ய காலை எடுத்து அனுமன் வைத்ததும், பாலம் சரிந்து விழுந்தது. அனுமன், தான் வெற்றி பெற்றதை எண்ணி துள்ளி குதிக்க துவங்கினார். இதனை பார்த்து அவமானத்தால் வெட்கத்தால் தலைகுனிந்தான் அர்ஜூணன். அவன் அருகில் வந்த அனுமன், "பார்த்தாயா என் ராமனின் சக்தியை?" எனக் கேட்டு பலமாக சிரித்தார். தனது வில் திறமை இப்படி ஆனதே என நினைத்து வருத்தப்பட்ட அர்ஜூணன், தனது ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றதை எண்ணி வருந்தினார். கிருஷ்ணனை நினைத்து, அவரிடம் மன்னிப்புக் கேட்ட அர்ஜூணன் வேள்வி தீ வளர்த்து அதில் குதிக்க போனான். அனுமன் எவ்வளவோ தடுத்தும் அவன் பின்வாங்கவில்லை.

அர்ஜூணனுக்கு உதவிய கண்ணன் :

"அப்போது பின்னால் இருந்து, என்ன நடக்கிறது இங்கு?" என ஒரு குரல் கேட்கிறது. என்ன பிரச்னை என கேட்டு ஒரு அந்தணர் வந்தார். அவரிடம் இருவரும் நடந்தவற்றை விளக்கினர். அதைக் கேட்ட அவர் "பந்தயம் என்றால் நிச்சயம் சாட்சி வேண்டும். சாட்சி இல்லாமல் பந்தயத்தை நடத்தினால் அது செல்லாது. அதனால் மீண்டும் ஒரு முறை நீ பாலத்தை கட்டு" என்றார். அர்ஜூணன், அனுமன் இருவரும் இதற்கு சரி என ஒப்புக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
குளியல் சோப் வாங்கப் போறீங்களா?சருமத்திற்கு ஏற்ற சோப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கிட்டு போங்கப்பா!
Hanuman

இருந்தாலும் இப்போது மட்டும் என மாறி விட போகிறது என எண்ணிய அர்ஜூணன், மனதில் கண்ணனை வேண்டிக் கொண்டு, கிருஷ்ணா, கிருஷ்ணா என சொல்லிய படியே பாலத்தை கட்டினான். அதே சமயம் அனுமன், ஏற்கனவே பாலம் உடைந்ததால் இந்த முறை ராம நாமம் ஜபிக்காமல் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பார்த்தார். அர்ஜூணனும் பாலத்தை கட்டி முடித்தான். அதில் ஏறுகிறார், ஆடுகிறார், ஓடுகிறார் அனுமன். ஒன்றும் ஆகவில்லை. இப்போது அனுமனை நோக்கி, "பார்த்தாயா எங்கள் கண்ணனின் சக்தியை? இப்போது தெரிகிறதா யார் பெரியவர்" என்று என்கிறான் அர்ஜூணன்.

நாம ஜபமே வென்றது :

இதனால் குழப்பமடைந்த அனுமன், சாட்சியாக நின்ற அந்தணரிடம் வந்து, "யார் நீங்கள்?" என கேட்கிறார். அங்கு சங்கு, சக்கரதாரியாக இருவருக்கும் காட்சி தருகிறார் பரந்தாமன். பிறகு, "நீங்கள் இருவரும் தோற்கவில்லை. வெற்றி பெற்றது இறைவன் மீது நீங்கள் கொண்ட பக்தியும், நாம ஜபமும் தான். அர்ஜூணன் முதல் பாலம் கட்டிய போது தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்ற ஆணவத்துடன் கட்டினார். ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தான். ராம நாமம் ஒரு போதும் தோற்காது. அதனால் அனுமன் வென்றான்.

இரண்டாவது முறை, ஆணவம் அழிந்து என்னை நினைத்தபடி பாலம் கட்டினான் அர்ஜூணன். ஆனால் அனுமன் தனது பலத்தாலேயே பாலம் உடைந்தது என ராம நாமத்தை மறந்தான். அதனால் அர்ஜூணன் வென்றான். இரண்டு முறையும் வென்றது நாம ஜபம் மட்டும் தான். உங்கள் இருவரின் பக்தியும் அளவில்லாதது. ஆனால் இறைவன் ஒருவன் தான் என்பதை இருவரும் மறந்து விட்டீர்கள்," என்றார் கண்ணன்.

தேர்கொடியில் அனுமன் வந்த கதை :

அதோடு வானரமாக வந்தது அனுமன் தான் என்பதை அர்ஜூணனுக்கு புரிய வைத்தார் கண்ணன். "நடக்க போகும் பாரதப் போரில் உன்னுடைய உதவி அர்ஜூணனுக்கு தேவை. போர் முடியும் வரை அவனது தேர் கொடியில் இருந்து காக்க வேண்டும்," என கேட்டுக் கொண்டார் கிருஷ்ணர். அனுமன் இருக்கும் இடத்தில் எந்த மந்திர, தந்திரங்களும் வேலை செய்யாது என்றார்.

கிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று அர்ஜூணனின் போர் கொடியில் இருக்க சம்மதம் தெரிவித்தார் அனுமன். அதனாலேயே போரில் கர்ணன், பீஷ்மர் உள்ளிட்டோர் எய்திய அம்புகள் எதுவும் அர்ஜூணனுக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை.

இதையும் படியுங்கள்:
சுயமாய் தொடங்கும் திறன் - குறிக்கோளை அடையவதற்கான எளிய வழி!
Hanuman

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com