

வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றுதான் குரு புஷ்ய யோகம். அதாவது குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமையும் மகாலட்சுமிக்குரிய பூசம் (புஷ் யம்) நட்சத்திரமும் ஒரே நாளில் இணைந்து வரும்போது இந்த அரிய யோகம் உருவாகுகிறது. அறிவு, செல்வம், ஆன்மீகம் ஆகியவற்றின் சேர்க்கையாக இது கருதப்படுகிறது. அட்சயதிரிதியை தினத்தை விட அதியற்புதமான யோகத்தை கொடுக்கக்கூடியதே குரு புஷ்ய யோக தினமாகும்.
குரு புஷ்ய யோகம் என்பது செல்வ வரவுக்கு வழி வகுக்கும் ஒரு யோகமாக பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில் வாங்கும் பொருட்கள் பல மடங்காக பெருகும் என்று நம்பப்படுகிறது. அது மட்டுமின்றி குரு புஷ்ய யோகத்தால் ஏற்படும் கிரக நிலை மாற்றங்கள் குறிப்பிட்ட சில ராசியினருக்கு தன பாக்கியம், புது வீடு, மனை மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதாக ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குரு புஷ்ய யோகம் மே 21 ஆம் தேதியில் உருவாகுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சிறப்பாக மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், மற்றும் எடுத்த காரியத்தில் வெற்றி ஆகியவை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த குரு புஷ்ய யோக காலத்தின் சிறப்புகள்:
தங்கம், வெள்ளி, நிலம், சொத்து மற்றும் புதிய வாகனங்கள் வாங்க இந்த நாள் மிகவும் உகந்தது.
புதிய தொழில் தொடங்குதல், புதிய முதலீடுகள் செய்தல் மற்றும் புதிய திட்டங்களை உருவாக்கி ஆரம்பித்தல் போன்றவை இந்த நாளில் செய்யலாம்.
புது வீட்டுக்கு குடி போகலாம்.
புதிய மந்திரங்களை கற்று கொள்ளுதல், ஜபம், ஹோமம் போன்றவை செய்தல், மற்றும் அனைத்து விதமான தான தர்மங்கள் செய்ய இந்த நாள் மிகவும் சிறப்பானது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த நாளில் தொடங்கும் செயல்கள் நீண்ட கால வெற்றியைத் தருவதாகவும், செல்வ செழிப்பை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குரு புஷ்ய யோகம் 21.05.26 (வியாழன்) காலை 05.47 மணி முதல் 22.05.26 (வெள்ளி) அதிகாலை 02.49 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் குபேர லட்சுமி பூஜை செய்வது மிகவும் அற்புதமான பலன்களை கொடுக்கும்.
ஐஸ்வர்ய ரூபாய வித்மஹே
கடாட்ச காரணாய தீமஹி
தன்னோ ஸ்ரீ லட்சுமி குபேர பிரசோதயாத்
என்னும் குபேர லட்சுமி காயத்ரியை ஜபித்து வழிபடலாம். குபேர லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யலாம். எல்லோரும் வாழ்க்கையில் தவறவிடக் கூடாத மிக அற்புதமான யோக காலம் குரு புஷ்ய யோக காலம்.