
உலகிலேயே பணக்கார கடவுளாகவும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் இறைவனாகவும் காணப்படும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மகிமைகள் பல நிறைந்த இடமாகும். மற்ற கோவில்களைப் போல நம்மால் திருப்பதிக்கு நினைத்த நேரங்களில் சென்று தரிசனம் செய்ய முடியாது என்பதே இக்கோவிலை ஒரு அதிசயமான அனுபவமாக பார்க்க வைக்கிறது. திருப்பதி பெருமாளின் வளர்ப்புத்தாய் வகுளாதேவி (Vakula Devi) என்று சொல்லப்படுகிறது. இவருக்கும் திருப்பதியில் கோவில் அமைந்துள்ளது.
சந்திர பலம்
'திருப்பதிக்கு சென்றால் வாழ்வில் பெரிய திருப்பம் உண்டாகும், மனதில் அமைதி குடிகொள்ளும்' என்று நம்பப்படுகிறது. திருப்பதி சந்திரனுக்கு உரிய நட்சத்திரமாக கருதப்படுவதால், சந்திரன் தாக்கம் மிகுந்த இத்தலத்தில் உள்ள இறைவனை தரிசிப்பது மனதுக்கு இனிமையான அனுபவத்தையும், மனநிம்மதியையும் பெற உதவுகிறது. தரிசனத்தின் முழு பலனையும் பெற முதலில் அலமேலு மங்கை தாயாரை தரிசனம் செய்துவிட்டு பின்பு வெங்கடேஸ்வரப் பெருமாளை தரிசனம் செய்வதே முறையாகும்.
திருமலையின் வரலாறு
திருமலையின் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது. திருப்பதி ஏழுமலையான் கோவில் முதலில் தமிழகத்தின் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் என்பவரால் கட்டப்பட்டது. சங்க இலக்கியங்களில் திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தைப் பற்றி சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன.11ஆம் நூற்றாண்டில், ராமானுஜர் காலத்தில் திருப்பதி ஒரு முக்கிய வைஷ்ணவ மையமாக மாறியது. பல ஆழ்வார்களால் போற்றி பாடப்பட்ட பெருமாள் இவர்.
ஆகாச கங்கை
வற்றாத புனித நீர்நிலையாக இருக்கும் ஆகாய கங்கை, அதன் தோற்றம் ஒரு மர்மமாகத்தான் உள்ளது. இந்த குளத்தின் நீர் குணப்படுத்தும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பழங்காலத்தில் அர்ச்சகர்கள் இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். ஆனால், இப்போது குழாய்கள் மூலம் தண்ணீர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது ஆஞ்சநேயர் அவதரித்ததாக கூறப்படும் அஞ்சனாதிரி மலையில் அமைந்துள்ளது.
கலியுக தெய்வம்
ஏழுமலையான் சிலையின் பின்புறம் எப்போதும் ஈரப்பதமாக இருக்கும். அப்பகுதியை எவ்வளவோ உலர்த்த முயற்சித்தாலும் ஈரப்பதமாகவே உள்ளது. இன்று வரை இது ஒரு புதிராகவே உள்ளது. திருப்பதி பெருமாள் கலியுகத்திலும் கண் கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை நம்பும் பக்தர்களுக்கு பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்துகிறார். கலியுகத்தில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வறுமையை விரட்டி, செல்வத்தை அருள்பவர் என்பதால் அவர் 'கலியுக வரதர்' என்று அழைக்கப்படுகிறார்.
வானியல் அதிசயங்களும் அண்ட அமைப்புகளும்
திருப்பதி கோயிலின் கட்டடக்கலை வானியல் பிரபஞ்சத்தையே பிரதிபலிக்கிறது என்றும், வான உடல்களுடன் சிக்கலான தொடர்பை கொண்டிருப்பதாகவும் நம்பிக்கைகள் உள்ளன. இது பூமிக்கும், தெய்வீகத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பை காட்டுகிறது. ஏழு மலைகளை உள்ளடக்கிய திருப்பதி தனித்துவமான புவியியல் அமைப்பு, ஆன்மீக சக்தியை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த மலைகள் வெறும் புவியியல் அமைப்புகளாக மட்டுமல்லாமல், கோயிலின் புனிதத்தை பெருக்கும் அண்ட அதிர்வுகளின் மூலமாகும்.
உயிர்ப்புள்ள சிலை
ஏழுமலையானின் சிலா ரூபம் கல்லால் ஆனது என்றாலும், இது உயிர்ப்புடன் உள்ளது. பெருமாளின் உடல் எப்பொழுதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையை தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமலை 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் மலை முழுவதும் குளிர்ச்சி நிலவும். இருப்பினும் ஏழுமலையானின் உடல் மட்டும் 110 டிகிரி வெப்ப நிலையில் சூடாகவே இருக்குமாம். அபிஷேகத்திற்காக, பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டுள்ள நகைகளை அகற்றும் பொழுது அது மிகவும் உஷ்ணத்துடன் இருப்பதாக கூறுகிறார்கள்.
அத்துடன் தினமும் காலையில் அபிஷேகம் முடிந்த பிறகு பெருமாளின் திருமேனியில் வியர்வைத் துளிகள் காணப்படுமாம். அவற்றை பட்டு பீதாம்பரத் துணி கொண்டு ஒற்றி எடுப்பதாக கூறுகிறார்கள்.
அற்புதம் நிகழ்த்தும் பெருமாள்
கல் சிலையில் பச்சைக் கற்பூரம் பயன்படுத்தினால், தேய்மானம் அல்லது விரிசல் போன்ற சேதத்தின் அறிகுறிகள் தெரியும். ஆனால், இங்குள்ள பெருமாளுக்கு பச்சை கற்பூரம் சார்த்துகிறார்கள். ஆனால், இதுவரை தேய்மானமோ, சேதத்தின் அறிகுறிகளோ தென்படவில்லை. இது அறிவியல் விளக்கத்தை மீறும் செயலாக உள்ளது. கோவிலின் அசாதாரண தன்மையை காட்டுகிறது.
வெறுங்கை வேடன்
எந்த சாந்தமான தெய்வத்தின் உருவச் சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாவது இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணியாக காணப்படுகிறார். அதனால் தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் 'வெறுங்கை வேடன்' என்று அழைக்கப்பட்டார். இவருக்கு வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாத அர்ச்சனைக்கும் வில்வ இலை பயன்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று 'க்ஷேத்ர பாலிகா' என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவருக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு திருவீதி உலா நடைபெறும்.
உகந்த நாள்
திருப்பதிக்கு செல்ல உகந்த நாட்கள் என்றால் வார இறுதி நாட்களைத் தவிர்த்து பிற நாட்களில் செல்வதே நல்லது. சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்றாலும் அன்று கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். அத்துடன் முக்கியமான திருவிழாக் காலங்களில் செல்வதை தவிர்த்து விடுவது நல்லது.