

ஒருநாள் குருவும் சீடனும் காட்டின் வழியில் பயணித்து வந்தபோது இரவு வந்துவிட்டது. இருவரும் அருகில் இருக்கும் ஒரு மரத்தடியில் தங்கி, உறங்கினர். பொழுது விடிந்ததும் இருவரும் அருகில் இருக்கும் ஆற்றில் குளிக்க சென்றனர். குரு குளித்துக்கொண்டு இருக்கும்போது, சூரியனை வணங்கினார்.
அப்போது சூரிய பகவான் குருவின் முன்னாடி தோன்றி இன்று இரவுக்குள் உன்னுடைய சீடனை ராஜநாகம் ஒன்று தீண்டி, அவன் உயிரைப் பறிக்கப் போகிறது ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடுத்து, முடிந்தால் உன் சீடனை காப்பாற்ற முயற்சி செய் என்று மேலும் சொல்லிவிட்டு மறைந்தார் சூரிய பகவான்.
குருவுக்கு மனம் கலக்கம் அடைந்தது. என்ன செய்து தன்னுடைய சீடனை காப்பாற்றுவது என்று சிந்தனை செய்து கொண்டு, தன் சீடனுடன் ஆற்றைக் கடந்து, இறைவனை வேண்டிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார்.
வெகு தூரம் பயணம் செய்த களைப்பில் சீடன் உறங்க ஆரம்பித்து விட்டான். குருவுக்கு மனம் கவலையிலும், பயணத்தின் களைப்பிலும் இருந்தாலும் உறங்காமல் கண் விழித்துக்கொண்டு இருந்தார். அப்போது அருகில் ராஜநாகம் வருவதை பார்த்துவிட்டு, நீ எதற்காக வந்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும், வேண்டுமானால் என் உயிரை எடுத்துக்கொண்டு, என் சீடனை ஒன்றும் செய்யாமல் சென்றுவிடு என்றார். வந்திருக்கும் ராஜநாகம் அதனை ஏற்க மறுத்தது.
குருவுக்கு சட்டென மனதிற்குள் ஒரு யோசனை தோன்றவே, தன்னிடம் இருக்கும் கத்தியை எடுத்து தன் சீடனின் கழுத்தில் கீறி சில துளிகள் இரத்தம் எடுத்துக்கொண்டார். பிறகு காத்திருக்கும் ராஜநாகத்திடம் அதனை கொடுத்தார். அதை வாங்கி பருகிவிட்டு, தன்னுடைய கடமை முடிந்துவிட்டது நான் வருகிறேன் என்று மகிழ்ச்சியோடு சென்றது.
சீடன் விழித்து பார்த்ததும், தன் குருநாதர் கையில் கத்தியும், தன் கழுத்தில் வெட்டுக் கீறலும் இருப்பதை அறிந்துகொண்டான். அப்போது எந்தவித பயமும் சலனமும் இன்றி காணப்படும் சீடனின் முகத்தைப் பார்த்துவிட்டு ஆச்சர்யம் அடைந்து, நீ ஏன் பயப்படவில்லை என்று வினவினார் குரு.
அதற்கு எந்த நிலையிலும் எனக்கு குருநாதர் நல்லதே செய்வார் என்ற நம்பகக்கை இருப்பதால் துளிக்கூட உங்கள் மீது அவநம்பிக்கை ஏற்படவில்லை என்று தெளிவாக சொன்னான் சீடன். சீடனை ஆரத்தழுவிக் கொணாடு, நடந்தவற்றை கூறிவிட்டு, சீடனின் கழுத்தில் கீறிய இடத்தில் பச்சிலை வைத்துவிட்டு, இருவரும் நிம்மதியாக தூங்கினர்.
இந்த கதை உணர்த்தும் பாடம்: குரு என்பவர் இறைவன், சீடன் என்பவர் நாம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். ராஜநாகம் என்பது நம்முடைய விதி. எந்த பிரச்னை வந்தாலும் நாம் வணங்கும் இறைவன் கைவிடமாட்டார். வாழ்க்கையை இறை நம்பிக்கையோடு வாழுங்கள். அதைத்தான் இந்த ஆன்மிகக் கதை நமக்கு உணர்த்தும் பாடம்.