

அனுமன் சாலிசா என்பது துளசிதாசரால் இயற்றப்பட்ட பக்தி, நம்பிக்கை மற்றும் அசாத்திய தைரியத்தை வழங்கும் ஒரு சக்தி வாய்ந்த தாரக மந்திரம் ஆகும். இதனை தினமும் பாராயணம் செய்வதன் மூலம் மனதில் உள்ள பயம் நீங்கி, நேர்மறை ஆற்றல் பெருகும்.
174 உயிர்களை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் அனுமன் சாலிசா பற்றி சொன்ன பிறகு, பலரும் இதன் மகத்துவத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகிறார்கள். இதன் 40 பாடல்களும் அனுமனின் ஞானம், பராக்கிரமத்தையும் எடுத்துரைக்கின்றது.
முழுமையாகப் பாராயணம் செய்ய முடியாதவர்கள் தங்களால் முடிந்த அளவு பாடல்களைப் பாராயணம் செய்யலாம். அனுமன் எனும் பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். தடைகள் காணாமல் போகும். நல்லன யாவும் சேரும்.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ராம பக்தரான சந்த கவி துளசிதாசரால் அவாதி மொழியில் இயற்றப்பட்டது இந்த அனுமன் சாலிசா. சாலிசா என்றால் ஹிந்தியில் 40 என்று பொருள். இதில் ஆஞ்சநேயரின் பெருமைகளைப் போற்றும் 40 பாடல்களும், தொடக்க மற்றும் முடிவில் தோஹாக்களும் (ஈரடிகள்) அமைந்துள்ளன.
இதன் பின்னணியில் உள்ள புராணக் கதை:
ஒருமுறை அவுரங்கசீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்றிருந்தார். அப்போது துளசிதாசரை பரிகாசம் செய்த பேரரசர் கடவுளை தனக்கு காண்பிக்க சொல்லி சவால் விட, துளசிதாஸோ உண்மையான பக்தி இல்லாமல் ராமபிரானை பார்ப்பது இயலாது என்று சாமர்த்தியமாக பதில் அளித்தார். இதன் விளைவாக அவுரங்கசீப்பால் துளசிதாஸ் சிறைபிடிக்கப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில்தான் ஆஞ்சநேய மந்திரங்கள் என்ற இந்த அற்புதமான மாபெரும் செய்யுளை இயற்றினார்.
"மகாவீர ஜெப நாம ஸுனாவை" என்ற வரியின்படி, அனுமனின் பெயரைச் சொன்னாலே பயமும், தீய சக்திகளும் விலகி ஓடும். தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் தினமும் இதை துதித்தால் உடல் நலம் சீராகும். சவாலான காரியங்களில் ஈடுபடும் முன் இதனைப் படித்தால் காரிய சித்தி உண்டாகும்.
தீய சக்திகளோ அல்லது எதிர்மறை எண்ணங்களோ நம்மை அண்டாது. அனுமனுடைய வீரம் மற்றும் பலத்தை நினைவுகூர்வதன் மூலம் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும்.
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசா படிப்பது ஏழரை சனி மற்றும் அஷ்டம சனியின் தாக்கத்தை வெகுவாக குறைக்கும். முக்கியமாக அனுமன் சாலிசா படிப்பதன் மூலம் மாணவர்களின் ஞாபக சக்தியையும், ஒருமுகப்படுத்தும் திறனையும் இது மேம்படுத்தும்.
முதல் 10 பாடல்கள் அனுமனின் அசாத்திய வடிவத்தையும், அறிவையும், வீரத்தையும் விவரிக்கின்றன. 11 முதல் 20 வரையிலான பாடல்கள் ராமபிரானுக்கு அவர் செய்த மாபெரும் வீரதீர செயல்களையும், லட்சுமணனின் உயிரைக் காத்ததையும் விவரிக்கின்றன.
இப்படி அனுமனின் அசாத்திய வீரதீர செயல்களையும், கடல் தாண்டிய பராக்கிரமத்தையும் விவரிக்கும் பாடல்களைத் தொடர்ந்து படிக்கும் பொழுது அது நம்முடைய ஆழ்மனதில் ஊடுருவி, சுய சந்தேகங்களை ஒழித்து அளப்பரிய மனவலிமையை உருவாக்கும். மொத்தத்தில் இதன் அதிர்வுகள் நம்மைச் சுற்றி ஒரு நேர்மறையான ஆற்றல் வளையத்தை, பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகின்றன. இந்த ஆன்மீக அதிர்வுகள் அலைபாயும் மனதை அமைதிப்படுத்தி, மனத் தெளிவை அதிகரிக்கின்றது.
வாழ்வின் கடினமான சூழ்நிலைகளில் நம்பிக்கை இழந்து தவிக்கும் பொழுது, முழுமையான பக்தியுடனும், தூய்மையான மனதுடனும் அனுமன் சாலிசாவின் பொருளைப் புரிந்து பாராயணம் செய்வது நமக்குள் ஒரு புதிய உத்வேகத்தையும் தைரியத்தையும் கொடுக்கும். சிலர் கார்களின் முன்பக்க கண்ணாடியில் அல்லது டாஷ்போர்ட் மீது சிறிய ஆஞ்சநேயர் சிலையை வைத்திருப்பதை பார்க்கலாம்.
விபத்துகளை தவிர்த்து வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு இவ்வாறு கார்களில் வைக்கிறார்கள். முழுமையாகப் படிக்க இயலாதவர்கள், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு தினம் ஒரு முறையாவது படித்து வர வாழ்வில் நல்ல மாற்றங்களையும், தடைகளற்ற ஆனந்தத்தையும் நிச்சயம் உணரமுடியும்.