சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் (Suchindram Shree Thanumalayan Swamy Temple) கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கன்னியாகுமரியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கோவில் ஆனது கேரளா கட்டடக்கலை பாணியிலும் திராவிட கட்டடக்கலை பாணியிலும் கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பான அம்சமாகும்.
கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு முன்பாக கேரளா திருவிதாங்கூர் ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 108 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. கோவில் வளாகம் இரண்டு ஏக்கர் நிலத்திலும், அதன் அருகில் உள்ள தெப்பக்குளம் 2 ஏக்கர் நிலத்திலும் அமைய பெற்றுள்ளது.
இந்தக் கோவிலில் இரண்டு கோபுரங்கள் பிரம்மாண்டமாக உள்ளன. கிழக்கு கோபுரம் 44 மீட்டர் உயரம் 11 மாடிகள் கொண்டது. இக்கோவிலில் 30 சன்னதிகள் உள்ளன. மும்மூர்த்திகளும் இடம்பெற்ற பிரம்மாண்டமான கோவிலாக உள்ளது.
அதற்கும் ஒரு கதை உண்டு முற்காலத்தில் அத்திரி முனிவரும் அவரது மனைவி அனுசுயா என்பவரும் இங்கிருந்து தவம் செய்தனர்.
அனுசுயா தேவி தர்மபத்தினி ஆவார். இவரை சோதிக்க அத்திரி முனிவர் இல்லாத நேரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரும் ரிஷிகள் வேடத்தில் இங்கு வந்து அனுசுயாவிடம் "எங்களுக்கு பசிக்கிறது உணவு வழங்குங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு அனுசியா, "என் கணவர் இல்லாமல் நான் உணவு வழங்க மாட்டேன். நீங்கள் பிறகு வாருங்கள்" என்று கூறினார்.
ரிஷிகள் வேடத்தில் வந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரும் "எங்களுக்கு இப்போதே உணவு வழங்க வேண்டும். அதுவும் நீங்கள் பிறந்த மேனியுடன் எங்களுக்கு பரிமாற வேண்டும்," என்றார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் அனுசுயா தேவி அந்த மூவரையும் குழந்தைகளாக மாற்றி உணவு பரிமாறினாள். இந்த மூவரையும் தேடி அவர்களது துணைவிகள் அங்கு வந்து அனுசியா தேவியிடம் மன்றாடி அவர்களுக்கு மீண்டும் பழையபடி உருவம் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டனர். அதன்படியே அனுசியா, அத்திரி மகரிஷி அவர்கள் குழந்தைகளின் மீது புனித நீர் தெளித்து மீண்டும் அவர்களை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆக மாற்றினார்கள். அதன் காரணமாக இத்திருத்தலம் சிவன் தாணுவாகவும் மால் விஷ்ணுவாகவும் அயன் பிரம்மனாகவும் மாறிய காரணத்தால் தாணுமாலயன் என பெயர் பெற்றது.
இக்கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நான்கு இசை தூண்கள் உள்ளன. இங்குள்ள நடன மண்டபம் மிகுந்த வேலைப்பாட்டுடன் உள்ளது.
தாணுமாலயன் கோவில் என்பதற்கு மற்றொரு கதையும் உண்டு.
முற்காலத்தில் இந்திரன் அகலிகை மூலம் சாபம் அடைந்து அவதிப்பட்டான். அவன் மிகுந்த தவமிருந்து தனது சாபம் தீருவதற்காக விரதம் இருந்தான். இதனைக் கண்ட மும்மூர்த்திகள் இந்திரனின் தவ வலிமையை மெச்சி அவனது சாபத்தை போக்கினார்கள். சுசி என்றால் தூய்மை குறிக்கும், இந்திரன் என்றால் தேவேந்திரனை குறிக்கும், எனவே சுசீந்திரம் என பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.
இந்த தாணுமாலயன் கோவிலில் தேவேந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம். தேவேந்திரன் கட்டளைப்படி இந்த கோவில் உருவாக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
இந்த கோவிலில் உள்ள தேவியின் பெயர் அறம் வளர்த்த அம்மன். இக்கோவில் சேர, சோழ, பாண்டியர்கள், திருவிதாங்கூர் மன்னர்கள் ஆகியோர் சேர்ந்து கட்டியதாக வரலாறு உள்ளது.
இந்தக் கோவிலில் வசந்த மண்டபம், ஊஞ்சல் மண்டபம், சித்திர சபை செண்பகராமன் மண்டபம், வீரபாண்டியன் மண்டபம், ரிஷப மண்டபம் என பல மண்டபங்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1544 ஆம் ஆண்டு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார் சிலை தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அம்மையாரின் கால் கை நரம்புகள் தெளிவாக தெரியும்படி சிலை செய்யப்பட்டுள்ளது.
சுரதேவர் சிற்பம் நன்றாக செதுக்கப்பட்டுள்ளது. சுரதேவருக்கு இரண்டு தலை, ஆறு கண்கள், மூன்று கைகள், மூன்று கால்கள் என வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி திருவிழா ஆஞ்சநேயர் ஜெயந்தி போன்றவை முக்கிய திருவிழாவாகும். சித்திரை பத்தாம் நாள் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
லிங்கம் மூன்று பகுதியாக உள்ளது. மேல்பகுதி சிவன் நடுப்பகுதியில் மால் என்ற விஷ்ணு, அடி பகுதியில் அயன் என்ற பிரம்மா வடிவத்தில் உள்ளது எனவே இந்த கோவிலுக்கு தாணுமாலயன் என்ற பெயர் வந்தது. தினசரி காலை நாலு முப்பது மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
இக்கோவிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை பிரமாண்டமாக உள்ளது. தினசரி ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுகிறது. அனுமன் ஜெயந்தி அன்று ஊரே திரண்டு வரும் அளவுக்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.