சேலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை 22 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாகக் கொண்டு, அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களிலுள்ள அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வருவார். இந்தத் திருவிழாவில் உருளு தண்டம், தீமிதி விழா மற்றும் வண்டி வேடிக்கை போன்றவை சிறப்பு பெற்றவைகளாக இருக்கின்றன.
சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழாவையொட்டி வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 வருடங்களுக்கும் மேலாக, மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான வண்டி வேடிக்கை நிகழ்வு வருகிற ஆகஸ்ட் 8 ஆம் நாள் நடைபெற இருக்கிறது.
கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விண்ணுலகக் கடவுளர்களின் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவதுதான், இந்த வண்டி வேடிக்கை விழாவின் சிறப்பாக இருக்கிறது.
இத்திருவிழாவின் போது பக்தர்கள் நோன்பு இருந்து, கடவுள் வேடமணிந்து, வண்ணமயமான வண்டிகளில் வலம் வருவர். பெரும்பாலும் புராணக்கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படுகின்றன. பெண்கள் இந்நிகழ்வில் பங்கு பெறுவதில்லை. ஆண்களேப் பெண் வேடமிட்டு வலம் வருகின்றனர்.
கடவுள் வேடமிடும் பக்தர்கள், சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் ஆகியோர் கைலசாத்தில் அமர்ந்திருப்பதைப் போன்றும், ரதி, மன்மதன் வேடம் போன்றும், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் வேடம் அணிந்தும், வண்டியில் ஊர்வலமாகச் செல்கின்றனர். அர்ச்சுனன் வில் வித்தை அரங்கேற்றம், கிருஷ்ணன், நரசிம்மன் இரணியனை வதம் செய்தது, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலட்சி , வள்ளி, தெய்வானை வேடம் ஆகியவையும் மிகவும் நேர்த்தியாக அணியப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சில வேடங்கள் மட்டும் மாற்றம் செய்யப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முதல் 20 எனும் எண்ணிக்கையில் வண்டிகள் தயார் செய்யப்பட்டு, அவ்வண்டிகளில் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, ஒளி, ஒலி அமைப்புகளும் செய்யப்படுகின்றன. அலங்கார வண்டிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, குகைக் கோயிலை மூன்று முறைச் சுற்றிச் செல்லும். குகை மாரியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்வானது, குறிப்பிட்ட நாளில், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியைக் காணத் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தாங்கள் வேண்டியது நிறைவேறியதும், பக்தர்கள் வண்டி வேடிக்கையில் கடவுள் வேடத்தில் வரும் அம்மனை வணங்கிச் செல்கின்றனர். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வண்டிகளில் பக்தர்கள் வேடமிட்டு வந்து அம்மனை வணங்கிச் செல்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான வண்டி வேடிக்கை நிகழ்வு வருகிற ஆகஸ்ட் 8 ஆம் நாள் நடைபெற இருக்கிறது.