இந்த ஆத்தங்கரை பள்ளிவாசல் நெல்லை மாவட்டம் திசையன்விளை நம்பியாற்றங்கரையை ஒட்டி உள்ளது. அனைத்து மதத்தினரும் வழிபடும் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நோய்வாய் பட்டவர்கள் செய்வினை உள்ளவர்கள் இங்கு தங்கி குணமடைந்து செல்கிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்துவழிபட்டு செல்கின்றனர்.
முற்காலத்தில் ஹசரத் ஷேக் முகமது, அஸ்ரத் சையத் அலி பாத்திமா இருவரும் அரேபியாவில் இருந்து கப்பலில் வரும்போது புயல் காற்றினால் கப்பல் சேதமடைந்து திசையன்விளையை ஒட்டி உள்ள கடற்பகுதியில் தரை தட்டி நின்றது. அவர்கள் இருவரும் இந்தப் பகுதியிலேயே தங்கி மத போதனைகளையும் அருள்வாக்கும் சொல்லி வந்தனர். அவர்கள் இறந்த பின்னர் அவர்கள் இருவருக்கும் தனித்தனியாக கல்லறை எழுப்பி அதன் மீது மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதிக்கு வருபவர்களுக்கு தீராத நோய்கள் பிணிகள் குணமாகி செல்கின்றனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கந்தூரி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்து எண்ணற்ற இஸ்லாமியர்கள் மாற்று மதத்தினரும் இங்கு ஒன்று கூடி வழிபாடு செய்வது வழக்கம். கந்தூரி விழாவின் போது சந்தனக்கூடு ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தப் பள்ளிவாசல் சேர்ந்த டிரஸ்டிகள் பாரம்பரிய உடை அணிந்து தலையில் கிரீடம் வைத்து ஊர்வலமாக சென்று ராமன் குடி, முத்துகிருஷ்ணாபுரம், அருணாசலம் நாடார் வீட்டுக்கு சென்று அந்தக் குடும்பத்தினர் அளிக்கும் மரியாதையை ஏற்றுக்கொள்வார்கள். இந்த பழக்கம் பள்ளிவாசல் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகிறது.
அன்றைய தினம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மத நல்லிணக்கம் எடுத்துக்காட்டாக வழங்குகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பெண் குழந்தைகளுக்கு சையத் அலி பாத்திமா என்ற பெயர் இருக்கும். வியாபாரிகளும் பொதுமக்களும் தங்கள் கடைகள் வீடுகளில் கண்டிப்பாக பள்ளிவாசல் படத்தை மாட்டி இருப்பார்கள்.
இங்கு இரண்டு குவி மாடங்கள் மினார்கள் உள்ள பிரம்மாண்டமான பழமை மாறாமல் கட்டிடக்கலைக்கு பேர் போன வகையில் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. ஹஸ்ரத் ஷேக் முகமது அசரத் செய்யது அலி பாத்திமா இருவரும் சூபிகள் ஞானிகள் எனப்படுகின்றனர். கந்தூரி விழா அன்று இஸ்லாம் இசை கச்சேரி இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெறும். சையத் அலி பாத்திமா கேரளாவில் உள்ள கொடுங்கலூர் என்ற இடத்திலிருந்து வந்ததாக கூறுகிறார்கள்.
இந்தப் பள்ளிவாசலில் நூறு தூண்கள் கொண்ட கட்டிடமும் புனித நீர் தொட்டியும் உள்ளது. கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த பள்ளிவாசல் மூலம் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் வசதி செய்யப்படுகிறது. குவி மாடமும் மினார்களும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இங்கு வந்தவர்களுக்கு அவர்கள் வேண்டுதல்கள் பிராத்தனைகள் நிச்சயமாக நிறைவேறும். இஸ்லாமியர்கள் தவிர மற்ற அனைத்து சமுதாய மக்களும் இங்கு வந்து வழிபட்டு தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதாக சொல்கிறார்கள்.
தினசரி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். திருநெல்வேலி வள்ளியூர் நாங்குநேரி போன்ற ஊர்களில் இருந்து திசையன்விளைக்கு ஏராளமான பஸ் வசதி உள்ளது.