இந்த ஒரு கோயிலுக்குப் போனா போதும், எல்லா தோஷமும் பறந்துபோகும்!
தோஷங்களை ராகு - கேது தோஷம், பித்ரு தோஷம், அங்காரக தோஷம், பிரம்மஹத்தி தோஷம், மாங்கல்ய தோஷம் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இப்படி, ஒவ்வொரு தோஷத்திற்கும் சில பரிகாரங்களும், சில ஆலயங்களுக்கும் சென்று இறை வழிபாடுகள் செய்வதன் மூலமாக தோஷ நிவர்த்தி பெற சிறப்பு பிராா்த்தனைகள் செய்வதும் உண்டு.
அந்த வகையில், பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள், திருவிடைமருதூா் சிவன் கோயிலில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரரை வணங்கி தோஷ நிவர்த்தி பெறலாம். திருவிடைமருதூா், கும்பகோனத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் மாா்க்கத்தில் சுமாா் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
தென்னாட்டு சிவ தலங்களில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு நான்கு பிராகாரங்கள் உள்ளன. முதல் பிராகாரம் வெளிப்பிராகாரமாகும். இது அஸ்வமேத பிராகாரமாகும். ஏவல், பில்லி, சூன்யம், பேய், பைத்தியம் போன்ற உபாதைகள் நீங்க இந்த பிராகாரத்தை வலம் வர வேண்டும். ‘சிவாயநம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மெதுவாக உச்சரித்துக்கொண்டே, நிதானமாக இந்த பிராகாரத்தை சுற்றி வர வேண்டும்.
அடுத்து, கொடுமுடி பிராகாரம், பிரணவப் பிராகாரம், உள் பிராகாரம் என்ற மற்ற மூன்று பிராகாரங்களையும் வலம் வர வேண்டும். அப்படிச் செய்யும்போது தோஷங்கள் விலகிட மகாலிங்கேஸ்வரரை மனதில் நினைத்தபடி வலம் வந்து வழிபட்டு, பின்னர் பிருகு சுந்தரகுஜாம்பிகை அம்பாளையும் வழிபட வேண்டும்.
சிவன் அருள் பெற்ற வரகுண பாண்டியன் தோஷம் பெற்றபோது இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றதாக வரலாறு உண்டு. இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், நந்தி, சோமாஸ்கந்தர், தட்சிணாமூா்த்தி, ஆடலரசர், சண்டேஸ்வரர், பைரவர், நவகிரகம் என்ற பரிவார தேவதைகள் ஆகிய மூர்த்தங்கள் ஈஸ்வரனின் கருவறையைச் சுற்றி அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பாகும்.
ஆக, அருள்மிகு மகாலிங்கேஸ்வரரை வணங்கி வழிபட்டாலே சகல துன்பங்களும் விலகி விடும் என்பதே அனைவரது நம்பிக்கையாகும். திருவிடைமருதூா் மகாலிங்கேஸ்வரரை அவரது திருத்தலம் சென்று மனதார வேண்டுவோம், தோஷமில்லாமல் சந்தோஷ வாழ்க்கையை வாழ்வோம்!