
பொதுவாக எல்லோரும் சீரடி சென்றால் பாபாவின் தரிசனத்தையும், ஆரத்தியையும் தரிசித்து விட்டு வருவது வழக்கம். ஆனால் சீரடிக்கு அருகிலேயே அமைந்துள்ள அவரது காலடிபட்ட இடங்களை அதாவது தினசரி அவர் சென்று வந்த இடங்களைப் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள். சீரடி செல்பவர்களுக்கு இது ஒரு சிறந்த கைடாக இருக்கும். சீரடியை சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. முக்கியமாக துவாரகாமாயி மசூதி, சமாதி மந்திர், குருஸ்தான், சாய் பாரம்பரிய அருங்காட்சியகம் போன்றவை. அத்துடன் தீக்ஷித் வாடா அருங்காட்சியகம், ஸ்ரீ கண்டோபா மந்திர் போன்ற இடங்களும் உள்ளன.
1) துவாரகாமாயி மசூதி:
துவாரகாமாயி என்பது பாபா தனது இறுதிவரை தங்கியிருந்த ஒரு பழைய மசூதி ஆகும். இந்த மசூதியில் உள்ள புனித துனி 24 மணி நேரமும் ஒளிர்கிறது. இது சமாதி மந்திரின் நுழைவாயிலுக்கு மிகவும் அருகில் உள்ளது. இங்கு அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் பாபாவின் பெரிய உருவப்படமும், அவர் அமர்ந்திருந்த ஒரு பெரிய கல்லும் வைக்கப்பட்டுள்ளது.
பாபாவின் ஊர்வலத்துக்கு பயன்படுத்தப்படும் ஒரு பல்லக்கும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. சீரடி கிராமத்தில் 60 ஆண்டுகள் பாபா வசித்த இந்த மசூதியே துவாரகா மாயி எனப்படும். இங்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கிருஷ்ணரை தரிசிக்க துவாரகா செல்ல ஆசைப்பட்ட ஒரு பக்தர் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசித்து அவரிடம் துவாரகா செல்ல அனுமதி கேட்டார். அதற்கு பாபாவோ "துவாரகாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீ அமர்ந்திருக்கும் இடமே துவாரகா. இந்த மசூதி மாயி (அன்னை) மிகவும் அன்புள்ளம் கொண்டவள். இவள் குழந்தைகளின் ஆபத்துகளையும், கவலைகளையும் போக்குபவள்" என்று கூறினார். இந்த மசூதி பாபாவினால் துவாரகாமாயி என்று குறிப்பிடப்பட்டதால் அந்நாளில் இருந்து இம்மசூதி 'துவாரகா மாயி' என்று அழைக்கப்படுகிறது.
2) சாவடி:
சீரடியில் உள்ள 'சாவடி' சீரடி சாய்பாபா தனது பெரும்பாலான நேரத்தை செலவிடும் இடங்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் மழைக்காலங்களில் துவாரகா மாயின் கூரை, சுவர்கள் கசிந்து தங்குவதற்கு ஏற்ற இடமாக இல்லாததால் மக்கள் சாய்பாபாவை சாவடிக்கு குடிபெயருமாறு கேட்டுக் கொள்ள, சாவடியில் தங்கி அவருக்கு வழங்கப்பட்ட ஆரத்தியை ஏற்றுக் கொள்வதும், ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்துவதுமாக இருந்தார்.
காலப்போக்கில் சாவடிக்கு அவர் வரும் சடங்கு ஒரு பிரம்மாண்டமான நிகழ்வாக மாறியது. சாய்பாபாவின் உருவப்படத்துடன் கூடிய ஊர்வலம் இன்றும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் துவாரகா மாயிலிருந்து பக்தர்களால் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த இடம் இப்பொழுது ஒரு சந்நிதியாகவும், அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் நம்மால் பாபாவின் சக்தியை நன்கு உணர முடிகிறது. அவர் தியானம் செய்த இடத்தை இங்கு காண முடியும். அவர் கடைசியாக குளித்ததாக கூறப்படும் ஒரு மரப் படுக்கையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
சீரடியில் உள்ள சாவடி ஒரு காலத்தில் வரி வசூலிக்கவும், கிராம வணிகத்தை கண்காணிக்க கூடும் இடமாகவும், நீதிமன்றமாகவும், அலுவலகமாகவும் செயல்பட்டது. பாபாவின் மறைவிற்குப் பிறகு இது ஒரு கிடங்காகவும், விருந்தினர் மாளிகையாகவும் செயல்பட்டது.
1930 களிலிருந்து சாவடி பாபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொது ஆலயமாக உருவெடுத்துள்ளது. இங்கு அறையின் ஒரு பக்கம் ஆண்கள் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்யவும், மறுபுறம் பெண்கள் உள்ளே நுழைந்து தனித்தனியாக பிரார்த்தனை செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் அமைதி ததும்பும் இடமாக உள்ளது.
3) குருஸ்தான்:
இது சாய்பாபாவின் குரு இருந்த இடம். சாய்பாபா சீரடிக்கு வந்த பொழுது அவர் தனது பெரும்பாலான நேரத்தை ஒரு வேப்ப மரத்தின் கீழ் கழித்தார். அது இப்பொழுது 'குருஸ்தான்' என்று அழைக்கப்படுகிறது. மரத்திலிருந்து விழும் வேப்ப இலையை ருசிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை சுவைத்து பார்த்தாலே தெரியும்... கசக்காது இனிக்கும்! இந்த வேப்ப இலையை பெறுபவர்கள் எந்த நோய்களும் அண்டாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. சீரடி சாய்பாபா கோவிலில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. பிரதான கோவிலுக்கு அருகில் உள்ள வேப்ப மரத்தின் கீழ் உள்ள ஒரு புனிதமான இடம் இது.
புராணத்தின் படி சாய்பாபாவின் குருவின் எச்சங்கள் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டன என்றும், இவர் குழந்தையாக தியானத்தில் முதன் முதலில் இருந்த இடமும் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இங்கு சாய்பாபாவின் உருவப்படம், சிவலிங்கம் மற்றும் நந்தி ஆகியவை ஒரு சிறிய சன்னிதியில் காணப்படுகிறது. இங்கு மக்கள் தூபம் ஏற்றி வணங்கி வழிபடுகிறார்கள்.
4) லெண்டி பாக்:
சீரடி கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு அமைதியான தோட்டமாகும். சாய்பாபா இங்கு தியானம் செய்யவும், தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றவும் இந்த சோலைக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. பாபா லெண்டி பாக் என்னும் தோட்டத்தைப் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தோட்டத்திற்கு அருகில் ஓடும் லெண்டி நதியின் பெயரால் இந்தப் பெயர் வழங்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் பாபாவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய விலங்குகள் மற்றும் மக்களை நினைவு கூறும் கோவில்கள் உள்ளன.
5) தீக்ஷித் வாடா அருங்காட்சியகம்:
சாய்பாபாவின் வாழ்க்கை பற்றிய தகவல்களை தெரிவிக்கும் அருமையான அருங்காட்சியகம் இது. பாபாவின் அன்றாட வாழ்க்கை மற்றும் உடைமைகள் பற்றிய ஒரு வசீகரிக்கும் நுண்ணறிவை வழங்குகிறது. தனிப்பட்ட பொருட்கள் முதல் வரலாற்று கலைப் பொருட்கள் வரை அருங்காட்சியகத்தில் உள்ளன.
6) சாய் பாரம்பரிய கிராமம்:
இங்கு சாய்பாபாவின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இடமாக அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு கலைப் பொருட்கள் மற்றும் கட்டமைப்புகள் மூலம் சாய்பாபாவின் வாழ்க்கையின் சாரத்தை காட்சிப்படுத்துகிறது.
7) ஸ்ரீ கண்டோபா மந்திர்:
ஷீரடிக்கு மிக அருகில் உள்ள மிகவும் பிரபலமான கோவில். இது சிவபெருமானின் ஒரு வடிவமான கண்டோபாவுக்கு அமைந்துள்ள மிகவும் பழமையான கோவிலாகும். கண்டோபாவின் பழங்கால சிலையும் அவர் தனது மனைவியர்களான மல்சா மற்றும் பனாயுடன் காட்சி தரும் இடம் இது. கோவில் சீரடி சாய்பாபாவின் வாழ்க்கையுடன் நிறைய தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆன்மீக ஒளி நிறைந்த அமைதியான இடமாக அமைந்துள்ளது. இந்த பழமையான வழிபாட்டுத்தலத்தில் நம்மால் தெய்வீக அதிர்வுகளையும், ஆழ்ந்த ஆற்றலையும் உணர முடியும்.
8) லக்ஷ்மிபாய் ஷிண்டேவின் வீடு:
சீரடியில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் லட்சுமி பாய் ஷிண்டேவின் பழமையான வீடும் ஒன்று. சாய்பாபாவின் தீவிர பக்தரான லக்ஷ்மிபாயின் எளிமையான பக்தியை உலகுக்கு உணர்த்திய இடம் இது. பாபாவுக்கு தினமும் சமைத்து கொண்டு வந்து கொடுத்த எளிமையான பக்தை இவள். பாபா தனது இறுதித் தருணங்களில் அவளுக்கு 9 வெள்ளி நாணயங்களை அளித்தார். அவை இங்கே இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
9) சீரடிக்கு அருகில் உள்ள பிற இடங்கள்:
பஞ்சவடியில் அமைந்துள்ள காலாராம் கோவில், பாண்டவர்கள் தங்கியிருந்த பாண்டவ்லேனி குகைகள், எல்லோரா குகைகள், நாணய அருங்காட்சியகம், வித்தோபா ரகுமாயின் கோவில் என்று நிறைய இடங்கள் உள்ளன. கோவில்களுடன் வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார இடங்களான எல்லோரா மற்றும் அஜந்தா குகைகளையும் கண்டு களிக்கலாம்.