காசியில் அன்னபூரணி எழுந்தருளிய வரலாறு

காசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரில் அன்னபூரணி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
Kashi Annapurna Temple
Kashi Annapurna Templeimg credit - varanasiguru.com
Published on

காசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரில் அன்னபூரணி கோயில் அமைந்துள்ளது. அன்னபூரணி ஒரு கரத்தில் தங்கத்தாலான அன்னபாத்திரத்தையும் மற்றொரு கரத்தில் தங்கத்தாலான அகப்பையையும் ஏந்தி காட்சி தருகிறாள். அருகில் பிட்சையோடு ஏந்தியவாறு பிட்சாடனர் தரிசனம் தருகிறார். மா அன்னபூர்ணா கோயில் என்றழைக்கப்படும் இத்தலம் கி.பி.1729-ல் மராட்டிய பேஷ்வா பாஜிராவ் என்பவரால் கட்டப்பட்டது.

ஒரு சமயம் சிவபெருமான் பிரம்மனின் தலையைக் கொய்த போது அவருடைய கரத்தில் கபாலம் ஒட்டிக் கொண்டது. அது கரத்தை விட்டு அகலவே இல்லை. அன்னபூரணி தனது அட்சய பாத்திரத்தில் இருந்து பிட்சை இட்டதும் அவருடைய கரத்தில் ஒட்டியிருந்த கபாலம் நீங்கியது.

முற்காலத்தில் காசி நகரில் தேவதத்தன் என்றொரு பணக்காரனும், தனஞ்செயன் என்றொரு ஏழையும் சகோதரர்கள். ஒரு நாள் மணிகர்ணிகா படித்துறையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்து பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த போது தனஞ்செயன் தன்னை அன்னதோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தபடியே உறங்கினான்.

அவனது கனவில் சந்நியாசி ஒருவர் தோன்றி “முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜகுமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்ற போது காட்டில் வழி தவறிய நிலையில் பசியால் தவித்தனர். அப்பகுதியில் முனிவர் ஒருவர் அவர்களைத் தனது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று உணவு கொடுத்து உபசரித்தார். அந்த உணவினை சத்ருதர்மன் அமுதமாக நினைத்து சாப்பிட்டான். ஆனால் ஹேரம்பனுக்கு அது பிடிக்காததால் சிறிதளவு உண்டு மீதியை எறிந்தான். முனிவர் அன்போடு தந்த உணவினை ஹேரம்பனாக இருந்த போது நீ அவமதித்ததால் இப்பிறவியில் தனஞ்செயனானப் பிறந்த நீ உணவு கிடைக்காமல் அவதியுறுகிறாய். அன்னத்தை மதித்த சத்ருதர்மன் இப்பிறவியில் தேவதத்தனாகப் பிறந்து செல்வந்தனாக வாழ்கிறான். உரியவிரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து வழிபட்டால் உனது அன்னதோஷம் விலகி அவளுடைய அருளைப் பெறலாம்” என்றுரைத்தார்.

அவருடைய அறிவுரைப்படி தனஞ்செயன் காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த தேவ கன்னியர்களை அணுகி யாரை பூஜிக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு அவர்கள் பிரம்மனின் தலையைக் கொய்த காரணத்தினால் பிரம்மஹத்தி தோஷம் பீடித்த சிவனின் பசிப்பிணி அகல சிவனின் கையிலிருந்த கபாலத்தில் ஆதிசக்தியானவள் அன்னபூரணி அவதாரம் எடுத்து கபாலத்தை நிரப்பினாள். ஈசனின் பிரம்மஹத்தி தோஷம் உடனே நீங்கியது. அந்த அன்னபூரணியைத்தான் ஆராதிக்கிறோம் என்றுரைத்தார்கள். தனஞ்செயனுக்கு விரத முறைகளையும் கற்பித்தார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: அம்பிகை அன்னம் பாலிக்கும் காசி க்ஷேத்திரத்தில் பசியோடு அலைந்த வியாசர்!
Kashi Annapurna Temple

காசிக்குத் திரும்பிய தனஞ்செயன் முறைப்படி அன்னபூரணி விரதம் இருந்து அன்னபூரணியின் அருளைப் பெற்று வளம் பெற்றான். அன்னபூரணி தனஞ்செயனிடம், "எனக்கு ஈசனின் ஆலயத்திற்கு தென்புறத்தில் ஒரு கோயில் எழுப்புவாயாக. நான் அங்கு வந்து அமர்ந்து அருள்புரிகிறேன்" என்றுரைக்க, தனஞ்செயன் அன்னபூரணிக்குக் கோயில் எழுப்பியதாக கூறப்படுகிறது.

அள்ள அள்ளக் குறையாமல் உணவினை வழங்கும் அட்சயப் பாத்திரத்தைக் கரங்களில் ஏந்தி இருப்பதால் இவள் அன்னபூரணி என்று அழைக்கப்படுகிறாள். காசியில் உருவான கடும்பஞ்சத்தினைப் போக்க சக்திதேவி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப்பாத்திரத்தைப் பெற்று அனைவருக்கும் உணவளித்து வந்ததாக ஐதீகம். திருமால் அட்சய என்று சொல்லி முதலில் உணவிட்டதன் காரணமாக இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கூடை உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். அன்றைய சமயத்தில் அன்னபூரணி அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள். அன்னபூரணி கோவிலில் தினமும் காலை பதினோரு மணியளவில் அன்னதானம் நடைபெறுகிறது.

காசி மாநகருக்குச் சென்றால் காசி விஸ்வநாதரை தரிசித்து அருளில் எழுந்தருளியுள்ள அன்னபூரணி அம்பாளை தரிசித்தால் அனைத்து செல்வங்களும் உங்களுக்கு அன்னபூரணி அருளுவாள்.

இதையும் படியுங்கள்:
இல்லாமை நீங்க அன்னபூரணி வழிபாடு!
Kashi Annapurna Temple

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com