தசரா திருவிழா என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது உலகப் புகழ்பெற்ற மைசூர் அரண்மனையில் கொண்டாடப்படும் தசரா கொண்டாட்டங்கள் தான். இதற்கு அடுத்ததாக புகழ் பெற்றது தமிழ்நாட்டில் இராமநாதபுர அரண்மனையில் நடைபெறும் தசரா திருவிழா தான்.
தமிழ் நாட்டை இறுதியாக ஆட்சி செய்த மூன்று பெரிய அரச குடும்பங்களில் முதன்மையானவர்கள் சேதுசீமை அரசர்கள். இராமநாதபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நேர்மையுடன் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்போது சேதுசீமை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்டும் நாடாக இருந்தது.
திருமலை நாயக்கரின் ஆட்சி காலத்தில் மைசூர் அரசர் நரசராஜா வாடியாரின் படையினர் வடதமிழகத்தை கைப்பற்றி இறுதியில் மதுரையில் நுழைந்து வெறியாட்டம் போட்டனர். மதுரையை பிடித்து திருமலை நாயக்கரின் படைவீரர்கள் மற்றும் நாட்டு மக்களின் மூக்கையும் காதையும் அறுத்து அட்டகாசம் செய்தார்கள் மைசூர் படையினர். போரில் தோற்ற திருமலை நாயக்கர், தன் மனைவியைத் தூது அனுப்பி மதுரையை மீட்டுத் தருமாறு ரகுநாதசேதுபதி மன்னரிடம் வேண்டினார். சில மணி நேரங்களில் புறப்பட்ட ரகுநாதசேதுபதி மன்னர் படையினர் மைசூர் படையை துவம்சம் செய்து, அவர்களை மைசூர் வரை விரட்டிச் சென்றனர். இறுதியில் பழிக்குப்பழியாக தோற்ற மைசூர் படையினரின் மூக்கும், மைசூர் தளபதிகளின் முக்கும் அறுக்கப்பட்டது.
மதுரையையும் திருமலை நாயக்கரிடம் இருந்து கைப்பற்றிய மற்ற பகுதிகளையும் திருப்பி தந்தார் மைசூர் மன்னர் நாரசராஜா. சேதுபதி மன்னரிடம் சமாதானமாக செல்ல மைசூர் அரண்மனையில் இருந்த தங்கத்தில் செய்த ராஜராஜேஸ்வரி அம்மன் சிலையையும் பரிசாக வழங்கினார்கள். மதுரை நாட்டை தனக்கு திருப்பி கொடுத்த சேதுபதி மன்னருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜேஸ்வரி அம்மன் சிலையை திருமலை நாயக்கர் சேதுபதி மன்னருக்கு பரிசாக வழங்கினார். தன்னை விட பலம் வாய்ந்த சேதுசீமையை கட்டுப்படுத்துவது தவறென்று கப்பம் கட்டுவதில் விலக்கு அளித்து தன்னரசு நாடாக அங்கீகரித்தார். மேலும் தனது திருமலை பட்டத்தையும் ரெகுநாத சேதுபதிக்கு அளித்தார்.
பரிசாக வந்த இராஜராஜேஸ்வரி அம்மன் தனக்கும் தன் நாட்டும் ஏராளமான அதிர்ஷ்டங்களை கொண்டு வந்ததாக சேதுபதி உணர்ந்தார். தனது அரண்மனையில் இராஜராஜேஸ்வரி அம்மனுக்கு ஆலயம் எழுப்பினார். அன்று முதல் ராமநாதபுரம் அரண்மனையில் சேதுபதி மன்னர்களது குல தெய்வமாகப் வழிபடப்படுகிறார் இராஜராஜேஸ்வரி அம்மன். மன்னர் பாஸ்கரசேதுபதி காலத்தில் கோவில் கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டது, ஒரு தங்க சிம்ம வாகனமும் அர்ப்பணிக்கப்பட்டது. இத்தாலியில் இருந்து பெரிய வெண்கல மணி செய்யப்பட்டு கோவிலில் நிறுவப்பட்டுள்ளது. அம்மனுக்கு தங்க கேடயத்தை மன்னர் முத்துராமலிங்க சேதுபதி அர்ப்பணித்துள்ளார்.
மைசூரில் நடக்கும் தசரா திருவிழா போல தனது அரண்மனையிலும் திருவிழா கொண்டாடினார் ரெகுநாத சேதுபதி, அதை சேதுபதி அரச குடும்பத்தினர் இன்று வரை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இராமநாதபுர அரண்மனையில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்குகிறது. நவராத்திரி நாட்களில் கொலு வைத்து பூஜை செய்து தினசரி ஒரு கலை நிகழ்ச்சி நடத்தி கொண்டாடுகின்றனர். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இந்தாண்டு சேதுசீமையின் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்களின் தலைமையில் திருவிழா நடைபெற்றது. தினமும் பூஜைகள், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விஜயதசமி நாள் வரை நடைபெற்றது. 10 வது நாள், விஜய தசமி அன்று தங்க சிம்ம வாகனத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் எழுந்தருளி மகிஷாசுரமர்த்தனி திருக்கோலத்தில் புறப்பட்டு மகர்நோன்பு திடலுக்கு செல்வார், அங்கு அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெறும். அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்ததும் நாட்டில் மழை பெய்து செழிக்கும் என்பது நம்பிக்கை.