
பாகிஸ்தான் நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பஞ்சமுக அனுமன் கோயில் கராச்சி நகரில் உள்ள சிப்பாய் பஜாரில் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் என்றும், இயற்கையான அனுமனின் திருவுருவச் சிலையைக் கொண்ட உலகின் ஒரே கோயில் என்ற சிறப்பும் பெற்றது. சிந்து கலாசார சட்டம் 1994ன் கீழ் இக்கோயில் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கோயில் அமைப்பு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயில் 2,609 சதுர அடி பரப்பளவில் இருந்தது என்றும், பின்னர் நிலத்தின் பாதி நில அபகரிப்பாளர்களால் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கோயிலுக்கு வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பல ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் பகுதியை ஆக்கிரமித்து வருகின்றனர். 2019ம் ஆண்டில் புனரமைப்புப் பணிகளின் பொழுது பல கடவுள்களின் சிலைகள் கோயில் தளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
வனவாசத்தின் பொழுது ஸ்ரீராமர் இக்கோயில் இருக்கும் இடத்திற்கு வருகை தந்ததாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அனுமனின் சிலை தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும், இது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்றும், தானாகவே அனுமனின் உருவம் தெய்வீகமாக வெளிப்படுத்தப்பட்டது என்றும் நம்புகிறார்கள். இந்த பஞ்சமுகி அனுமனை 11 அல்லது 21 முறை வலம் வர பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
மற்றொரு சிறப்புமிக்க பஞ்சமுகி அனுமன் கோயில் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் துளசி பாபா மடத்தின் சாலையில் அமைந்துள்ளது. சாலை வழியாக எளிதில் இக்கோயிலை அடையலாம். அனுமன் தனது ஐந்து முகங்களை இங்கு வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, அனுமன் சிலை ஐந்து முகங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. நடுவில் அனுமனின் முகமும் பக்கவாட்டில் நரசிம்மர், ஆதிவராகர், கருடன் மற்றும் ஹயக்ரீவர் ஆகியோரின் முகங்களுடன் காணப்படுகிறார். 1964ம் ஆண்டில் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு ஸ்ரீராமர் மற்றும் சீதையின் சிலைகள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு இங்கே வைக்கப்பட்டுள்ளன.
செந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் மற்றொரு சிறப்பாக பக்தர்கள் பார்வைக்காக 'மிதக்கும் கற்கள்' வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்குச் செல்லும் சேது பந்தனம் என்ற மிதக்கும் பாலத்தைக் கட்ட இந்த மிதக்கும் கற்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் ராமர், லக்ஷ்மணர் மற்றும் பலர் சீதா தேவியை மீட்டு, ராவணனின் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
புராணத்தின்படி ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த போரின்போது ராவணன் பாதாள லோகத்தின் ராஜாவான மஹிரவணனின் உதவியை நாட, அனுமன் தனது வாலால் ராம, லக்ஷ்மணனைச் சுற்றி ஒரு பெரிய கோட்டையை கட்டினார். மஹிரவணன், விபீஷணன் போல் மாறுவேடமிட்டு ராமரையும் லட்சுமணரையும் கொல்வதற்காக பாதாள லோகத்திற்கு அழைத்துச் சென்றான். அனுமன் அவர்களைத் தேடி அங்கு வர, மஹிரவணனைக் கொல்ல ஐந்து விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைத்தால்தான் கொல்ல முடியும் என்பதை அறிந்து கொண்டார்.
அந்த ஐந்து விளக்குகளும் வெவ்வேறு திசையில் எரிந்து கொண்டிருப்பதால் அனுமன் பஞ்சமுகி அனுமன் வடிவத்தை எடுத்து, அனைத்து விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைத்தார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. வடக்கு நோக்கிய வராகர், தெற்கு நோக்கி நரசிம்மர், மேற்கு நோக்கிய கருடன், கிழக்கு நோக்கிய அனுமன், வானத்தை நோக்கிய ஹயக்ரீவர் என அனுமன் ஐந்து முகங்களைக் கொண்டு பஞ்சமுகி அனுமனாகத் திகழ்கிறார்.