
ஒரு நாள் குழந்தை கண்ணன் தனது தாய் யசோதையின் மடியில் பால் பருகிக் கொண்டிருந்தான். உள்ளே அடுப்பில் பால் பொங்கிய வாசனையால் அடுப்பில் இருந்து பாலை இறக்கி வைக்க யசோதை கண்ணனை மடியிலிருந்து விருட்டென்று இறக்கிவிட்டுச் சென்றாள். இதனால் கோபமடைந்த கண்ணன், பக்கத்திலிருந்த நெய் குடத்தை கல் எரிந்து உடைக்க, நெய் ஆறாய் ஓடியது.
அதனைக் கண்ட யசோதை, கோபமுற்று ஒரு கோலால் கண்ணனை அடிக்க ஓடினாள். பயந்து ஓடிய கண்ணன் தயிர் விற்றுவிட்டு தோட்டத்தில் ஓய்வெடுத்துக்கொடிருந்த ததிபாண்டனின் காலி தயிர் குடத்தில் ஒளிந்து கொண்டான். ததிபாண்ட வயோதிகனிடம் கண்ணன், ‘தனது தாய் யசோதை தன்னைப் பிடித்து அடிக்க வருவதைத் தடுக்க உபாயமாக தான் இங்கு வரவில்லை’ என்று சொல்லி தன்னைக் காப்பாற்ற வேண்டினான்.
கண்ணனின் விளையாட்டு அதிசயங்களை வெகு காலம் முன்பே வியந்து உணர்ந்த வயோதிக ததிபாண்டன், கண்ணனைக் காப்பாற்ற பானையை கண்ணன் மேல் கவிழ்த்து மூடிவிட்டு, ‘கண்ணன் இங்கு இல்லை’ என்று யசோதை தாயிடம் பச்சை பொய் சொல்லி கண்ணனைக் காப்பாற்றி மகிழ்ந்தான்.
யசோதையும் சென்று விட்டாள். இதை அறிந்த கண்ணன் ‘தனக்கு மூச்சு விட முடியவில்லை. தயிர் பானையை உடனே எடுத்து விடுங்கள்’ எனக் கூவினான். கண்ணனது லீலைகளைக் கண்டு உணர்ந்த வயோதிக ததிபாண்டன், ‘கண்ணனே அந்தத் தெய்வம். இவனே யாவருக்கும் மோட்சம் தரவல்லவன்’ என்று உணர்ந்து, ‘நீ எனக்கு மோட்சம் தருவதாக ஒப்புக்கொண்டால் நான் உடனே குழந்தையான உன்னை விடுவிக்கிறேன்’ என்றான்.
சிறிது நேரம் ஏதும் அறியாத சிறுவன் போல் பாவனையாக வாதாடி, பிறகு மாயக்கண்ணன் அந்த முதியவனுக்கு மோட்சம் அளிப்பதாக ஒப்புக் கொண்டான். ஆதங்கம் கொண்டு எப்போதும் தனது தயிர் பாண்டத்தை பிரிய விரும்பாத வயோதிக ததிபாண்டன் இதுதான் தக்க தருணம் என்று உணர்ந்து கண்ணனிடம் இன்னொரு வரத்தையும் கேட்டான்.
அதன்படி, ‘நீ எனக்கு மட்டுமின்றி, எனது தயிர் பாண்டத்திற்கும் மோட்சமளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். கண்ணன் இருவருக்கும் மோட்சமளிப்பதாக ஒப்புக்கொண்டு அவனுக்கும் அவனது தயிர் பாண்டத்திற்கும் மோட்சம் அளித்தான்.