
தீர்த்தங்கரர் (Tirthankara) என்பவர் சமண சமயத்தின்படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். தீர்த்தங்கரர் என்பதற்கு, 'பிறவிப் பெருங்கடலைக் கடந்த ஞானி' என்று பொருள். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துகளால் நம் 'அருகில் இருப்பவர்' என்று பொருள்.
இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. ரிஷபர் என்பவர் முதல் தீர்த்தங்கரராக அறியப்படுகிறார். மகாவீரர் 24 ஆவது தீர்த்தங்கரர் ஆவார். தீர்த்தங்கரர்களின் கொள்கைகள் மற்றும் கூற்றுகளே 'சமணம்' என்ற மதமாக உருவெடுத்திருக்கிறது.
தீர்த்தங்கரர்கள் இறைவனின் நிலையைப் பெற்றவர்கள் எனவும், அவர்களை வணங்கும்படியும் சமண சமயம் கூறுகிறது. சமண சமயத்தைத் தோற்று வித்தவர் ரிஷபர் என்றும், மகாவீரர் என்றும் இருவிதமான கருத்துக்கள் இருந்து வருகின்றன.
இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் உருவங்களும் சிற்பங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர்களின் இருபுறத்திலும் யட்சர், யட்சிகளின் சிலைகள் இருக்கின்றன. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களிலிருக்கும் உருவங்கள் பெரும்பான்மையாகத் திகம்பர நிலையில், அதாவது ஆடையற்ற நிலையில்தான் இருக்கின்றன.
இவர்களின் உருவங்கள் பக்கவாட்டில் இரண்டு கைகளும் தொங்கவிட்டு நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் காணப்படுகின்றன. இவ்வுருவங்களில் பெரும் வேறுபாடுகளைக் காண இயலாது. இந்நிலையில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் உருவங்களை எப்படி அடையாளம் காண்பது?
சமண சமயத்தினர் 24 தீர்த்தங்கரர்களில் 17 தீர்த்தங்கரர்களை அவர்களின் வாகனங்களைக் கொண்டும், 7 தீர்த்தங்கரர்களை அவர்களின் சின்னங்களைக் கொண்டும் அடையாளம் காண்கின்றனர்.
வாகனங்களைக் கொண்டு அறியப்படும் தீர்த்தங்கரர்கள்
ரிசபநாதர் அல்லது ஆதிநாதர் - காளை
அஜிதநாதர் - யானை
சம்பவநாதர் - குதிரை
அபிநந்தநாதர் - குரங்கு
சுமதிநாதர் - கோட்டான்
புஷ்பதந்தர் - முதலை
சிரேயன்சுவநாதர் - காண்டாமிருகம்
அரநாதர் - மீன்
வசுபூஜ்ஜியர் - எருமை
சாந்திநாதர் - மான்
விமலநாதர் - பன்றி
அனந்தநாதர் - முள்ளம் பன்றி
குந்துநாதர் - ஆடு
தருமநாதர் - வஜ்ஜிராயுதம்
முனீஸ்வரநாதர் - ஆமை
பார்சுவநாதர் - பாம்பு
மகாவீரர் - சிங்கம்
சின்னங்களைக் கொண்டு அறியப்படும் தீர்த்தங்கரர்கள்
பத்மபிரபா - தாமரை
சுபர்சுவநாதர் - சுவசுத்திக்கா
சந்திரபிரபா - வளர்பிறை சந்திரன்
சீதளநாதர் - கற்பக மரம்
மல்லிநாதர் - கலசம்
நமிநாதர் - நீலத் தாமரை
நேமிநாதர் - சங்கு
இனி நீங்களும், மேற்காணும் வாகனங்கள் மற்றும் சின்னங்களைக் கொண்டு தீர்த்தங்கரர்களை எளிதில் அடையாளம் காணலாம்.