நான்கு முறை சமாதி அடைந்த மிக அதிசயமான மகான் ஶ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள். இவரது நான்காவது சமாதி 1932ம் ஆண்டு மதுரையில் நடந்தது.
ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் நான்காவது சமாதியை இவர் அடைந்தார்.
இவரது முந்தைய மூன்று சமாதிகளின் சரித்திரம் மிகவும் அற்புதமானவை.
சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் நாயக்கர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இவர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்தார்.
அவர் வாழ்வில் நடந்த ஏராளமான அதிசய சம்பவங்களுள் இதுவும் ஒன்று.
மதுரையில் ஸ்வாமிகள் ஜீவ சமாதி அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பைராகி கோஷ்டி 40 பேர்களுடன் ராமேஸ்வர யாத்திரையை முடித்துக் கொண்டு மதுரைக்கு வந்து சேர்ந்தது. அங்கு ஹனுமார் கோவில் முன் முகாம் செய்தது.
பைராகி கோஷ்டியின் தலைவருக்கு சமாதி நிலை எய்தத் தெரியும். ஆனால் அதிலிருந்து மீண்டும் விடுபட்டு வரத் தெரியாது.
குறிப்பிட்ட நேரம் சமாதியில் இருந்த பின் சிஷ்யர்கள் விசிறி விட்டு சுவாசத்தை வரச் செய்வார்கள். இதைக் காண்பதற்கு பெரிய கூட்டம் கூடி இருக்கும்.
குழந்தையானந்த ஸ்வாமிகளின் அணுக்க தொண்டரான ராமலிங்க ஐயர் என்பவர் ஸ்வாமிகளுக்கு பணிவிடை செய்து கொண்டு வந்தவர்.
அவரை ஒரு நாள் ஸ்வாமிகள் ஒரு காரியமாக வெளியே அனுப்பி இருந்தார். அவர் பைராகியின் சமாதி நிலை அனுபவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் திரும்ப வர சிறிது நேரம் தாமதமாகி விட்டது.
நேரம் கழித்து வந்ததற்காக ராமலிங்க ஐயரை ஸ்வாமிகள் கடிந்து கொண்டார். அவர் தான் பைராகியின் சமாதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் தாமதமாகி விட்டது என்றார்.
உடனே ஸ்வாமிகள், “அட,போடா! அவன் அரைகுறையாய் செத்து விடப் போகிறான். அவனை உடனே வரச் சொல்” என்றார்.
ராமலிங்கய்யர் உடனே பைராகியைப் பார்த்து விஷயத்தைச் சொல்ல மொத்த கோஷ்டியும் ஸ்வாமிகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.
பைராகி கோஷ்டியின் தலைவரும் ஸ்வாமிகளும் ஹிந்தியில் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஸ்வாமிகள் உடனே சமாதி நிலையில் ஆழ்ந்து சற்று நேரம் இருந்த பின், பைராகி சாதுவின் கையைப் பிடித்துத் தமது விலாப்புறத்தில் வைத்து , சமாதி நிலையிலிருந்து விடுபடுவதற்கான மர்ம ஸ்தானத்தைக் காட்டினார். சாது விஷயம் தெரிந்தவராதலால் சட்டென அதைப் புரிந்து கொண்டார்.
தமது ,மனோரதம் பூர்த்தியாயிற்று என்று அவர் ஆனந்தக் கூத்தாடினார். எல்லோருமாக ஸ்வாமிகளை பிரதக்ஷிணம் செய்தனர்.
சாது கோஷ்டியின் தலைவர் தெண்டனிட்டு ஸ்வாமிகளின் திருப்பாதத்தை தனது சிரசில் வைத்துக் கொண்டார்.
அப்போது அவர் ஸ்வாமிகளின் பாதத்தில் சங்கு சக்ர ரேகைகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போய் பரவசமடைந்து, “ஆஹா! என்னை ஏமாற்றி விட்டு இங்கேயா வந்திருக்கிறீர்கள்? நான் தங்களை எங்கேயெல்லாம் தேடுவது?” என்று ஆர்ப்பரித்தார். “இனி உங்களை விட மாட்டேன்” என்றார் பைராகி சாது.
ஸ்வாமிகள் சிஷ்யனை சமாதானப்படுத்தி சீக்கிரம் சந்திக்கலாம் என்று உறுதி கூறி அங்கிருந்த பர்மா ஷெல் சேட்டிடம் அவர்கள் அனைவருக்கும் கோதாவரி மேளா செல்வதற்கு ரயில் டிக்கட் வாங்கித் தரச் சொன்னார்.
1932ல் ஸ்வாமிகள் சமாதி எய்தியவுடன் மறுநாள் காலையில் ராமலிங்க ஐயர், அவர் மனைவி, தாயார் மூவருக்கும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான தரிசனம் கிடைத்தது. அவர்கள் கண்ட இமயமலைக் காட்சியில் ஸ்வாமிகள் மோன நிலையில் வீற்றிருக்கிறார். முன்னர் பார்த்த பைராகி கோஷ்டி ஸ்வாமிகளைச் சுற்றி ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருந்தது.
கனவில் கண்ட இந்த அபூர்வ தரிசனத்தை மூவரும் சொல்லிக் கொண்டு பேரானந்தம் அடைந்தனர்.
ஸ்வாமிகளின் சமாதி மதுரையில் அரசரடி காளவாசல் சந்திப்பில் இருக்கிறது.
இங்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திரளாக பக்தர்கள் கூடுவது வழக்கம். இங்கு சமாதியில் ஶ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.