நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் முதன்மையானது உடல் எடை கூடுதல். எடையைக் குறைக்க வேண்டும் என்று பலவித முயற்சிகளை செய்தாலும், இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஒன்பது விஷயங்களைச் செய்தால் நிச்சயமாக உடல் எடை குறையும். இவற்றை காலை 10 மணிக்குள் செய்ய வேண்டியது அவசியம்.
1. எடை பார்த்தல்: தினமும் காலையில் எழுந்து எடை பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தண்ணீர் கூட குடிக்காமல் வெறும் வயிற்றில் எடை பார்ப்பது நல்லது. அப்போதுதான் உண்மையான எடையை அறிந்துகொள்ள முடியும். தினமும் செய்யும் இந்த நடைமுறை பொறுப்புணர்வைப் பராமரிக்க உதவுகிறது. காலப்போக்கில் எடை இழப்பு முன்னேற்றத்தை கண்காணிக்க உதவுகிறது.
2. போதுமான நீர் அருந்துதல்: காலையில் பல் தேய்த்ததும் முதலில் இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. மேலும், இது பசியைக் குறைக்கிறது.
3. சூரிய ஒளியில் 20 நிமிடங்கள்: காலை வெயிலில் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் செலவிட வேண்டும். உடலின் மீது இயற்கையான சூரிய ஒளி வெளிப்படும்போது வைட்டமின் டி யை ஒருங்கிணைக்க உதவுகிறது. இது இன்சுலின் உணர்திறன், மேம்பட்ட மனநிலை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான பசியை குறைக்கிறது.
4. உடற்பயிற்சி: காலை உணவுக்கு முன்பு கட்டாயமாக ஒரு உடற்பயிற்சி அமர்வில் ஈடுபட வேண்டும். வெற்று வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது அது கொழுப்பை எரிப்பதை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யும்போது உடல் கொழுப்புகளை எரித்து ஆற்றலாக மாற்றுகிறது.
5. புரதம்மிக்க காலை உணவு: காலை உணவு எடுத்துக்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வறுத்துப் பொறித்த ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புரதம் மிக்க உணவுகளை எடுக்க வேண்டும். வேக வைத்த சுண்டல், பாசிப்பயறு அல்லது வேகவைத்த முட்டை, ஊற வைத்த பாதாம் பருப்புகள், நட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இட்லி, தோசை போன்ற மாவுச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கலாம்.
6. உணவு தயாரித்தலை திட்டமிடுதல்: அன்றைய முழு தினத்திற்குமான உணவு தயாரிப்பதைப் பற்றி திட்டமிட சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவுகள் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த அணுகுமுறை தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க உதவுகிறது. ஆரோக்கியமான உணவுகளை கிடைப்பதை உறுதி செய்கிறது.
7. தியானம்: தினமும் 5லிருந்து 10 நிமிடங்கள் வரையாவது தியானம் செய்ய வேண்டும். அத்துடன் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இது மன அழுத்த அளவை குறைக்கும். ஏனென்றால், அதிகரித்த மன அழுத்தம் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை உண்பதற்கு வழி வகுக்கும்.
8. குளிர்ந்த நீரில் குளியல்: குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்கு நன்மை தருவதோடு மனதிற்கும் இதம் தரும்.
9. சத்தான சிற்றுண்டி: மதிய உணவுக்கு முன்பு பசி எடுத்தால் பிஸ்கட், கேக், மிச்சர், முறுக்கு, சமோசா, பப்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை உண்பதற்கு பதிலாக ஃபிரெஷ் பழங்கள், உலர் பழங்கள், கொட்டைகள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எப்போதும் சத்தான தின்பண்டங்களை கைவசம் வைத்திருப்பது தேவையில்லாத உணவுகளை நாடுவதைத் தடுக்கும். இந்த காலை நேர பழக்க வழக்கங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் விரைவில் எடை இழப்பு நடப்பது உறுதி.