
மக்கள் எப்போதும் பிறருடைய அங்கீகாரத்திற்கும் பாராட்டிற்கும் ஏங்குகிறார்கள். பிறர் என்ன நினைப்பார்கள், சொல்லுவார்கள் என நினைத்தே ஒவ்வொரு செயலையும் செய்கிறார்கள். முரண்பாடாக பாராட்டிற்குப் பதிலாக எதிர்மறை விமர்சனங்களே கிட்டுகின்றன. ஆனால், வெளிப்புற அங்கீகாரத்தை தேடுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்கும்போது அளப்பரிய மரியாதையும் மதிப்பும் கிடைக்கும் என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார். அதன் விளக்கத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.
நடிகனா? இயக்குநரா?: பிறருடைய அங்கீகாரத்திற்காக ஏங்கும்போது நமது சக்தியும் ஆற்றலும் நம்மை விட்டு நீங்குகிறது. பார்வையாளனின் கைதட்டல்களை எதிர்பார்த்து நடிக்கும் ஒரு நாடக நடிகனைப் போல நாம் செயல்படுகிறோம். இதில் தெளிவான நோக்கம் இல்லாமல் ஆற்றலும் வீணாக்கப்படுகிறது. திரைப்படம் அல்லது நாடகத்தின் கதையை தனது விருப்பப்படி இயக்கும் ஒரு இயக்குநரைப் போல மனிதர்கள் தமது வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்ள முடியும். அதற்கு தம் கடமையை, நேர்மையாக, தூய்மையான உள்ளத்துடன் செய்ய வேண்டும். அது பற்றிய பாராட்டு அல்லது விமர்சனத்தை எதிர்பார்த்து செய்யக் கூடாது. இந்த நேர்த்தியும் தன்னம்பிக்கை காந்தம் போல பிறரை ஈர்க்கிறது. ‘ஒரு மனிதனுடைய மதிப்பு பிறர் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் அல்ல, அவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது’ என்று கீதை கூறுகிறது.
சமநிலையான மனநிலை: பகவத் கீதை வாழ்வின் சமநிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பாராட்டுகளுக்கும் எதிர்மறை விமர்சனங்களுக்கும் ஒரே மாதிரி வினையாற்ற வேண்டும். பிறருடைய சிறிய எதிர்மறைக் கருத்து மனதை பாதித்தால் கூட அமைதியும் மகிழ்ச்சியும் அகன்று விடும். அதைப் பற்றிக் கவலைப்படாமல் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கும்போது மகத்தான வலிமையை வெளிப்படுத்த முடியும். இந்த உள்ளார்ந்த அமைதிக்கு, வெளியில் பேசப்படும் வார்த்தைகளை விட சக்தி அதிகம். வெற்றி, தோல்வியால் ஒரு மனிதன் கவலைப்படாமல் தனது செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்போது பிறருடைய மரியாதை கூடும்.
சுயமதிப்பு: பலரும் தமது சமூக செயல்பாடுகள், சாதனைகள், பிறர் தம்மை எப்படி மதிக்கிறார்கள், உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுயமதிப்பை அளவிடுகிறார்கள். கீதை இதைத் தவறான அடையாளம் என்கிறது. உண்மையான ஆத்மா நித்தியமானது. தற்காலிக சமூக அடையாளங்கள் மற்றும் வெளிப்புற கருத்துக்களில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்று கற்பிக்கிறது. ஒருவரின் உள்ளார்ந்த மதிப்பு அவர் வகிக்கும் பதவி, வங்கிக் கணக்கு அல்லது சமூக அந்தஸ்து ஆகியவற்றுடன் பிணைக்கப்படவில்லை என்பதை உணரும்போது மகத்தான சுதந்திர உணர்வைப் பெறுகிறார். இந்த ஆன்மிக சுயமரியாதைதான் ஒருவரை அச்சமற்றவராக ஆக்குகிறது. பிரபலமான மனிதராக இல்லாவிட்டாலும் கூட உறுதியுடன் செயல்பட அவரை அனுமதிக்கிறது. நீங்கள் யார் என்பதில் தெளிவாக இருந்தால் மற்றவர்களைக் கவர முயற்சிப்பதை நிறுத்துவீர்கள்.
முரண்பாடு: முரண்பாடு என்பது என்னவென்றால் மரியாதைக்காக, அங்கீகாரத்திற்காக ஏங்கும்போது அது உங்களுக்கு அரிதாகவே கிடைக்கும். ஆனால், அந்த ஏக்கத்தை கைவிட்டவுடன் மக்கள் அதைக் கொடுக்கத் தொடங்குகிறார்கள். ஏனென்றால், உங்கள் ஆற்றல், பெறுதல் என்ற இடத்திலிருந்து அளித்தல் என்ற இடத்திற்கு மாறுகிறது. விளைவுகளில் பற்றுதல் இல்லாமல் கடமையை செய்வதன் மூலம் உலகிற்கு சிறந்த முயற்சியை வழங்குகிறீர்கள். சுயநல நோக்கம் இல்லாமல் செயல்படும்போது வெளிப்படும் தன்னலமற்ற செயல் மற்றவர்களை இயல்பாகவே ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக செயல்படுகிறது.
பிறருடைய அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் இருப்பது என்பது பிறரை அலட்சியம் செய்வது என்பது அல்ல. தன்னுடைய செயல்களில் முழுக் கவனம் செலுத்தி செய்ய வேண்டும் என்பதையே கீதை வலியுறுத்துகிறது. அதற்குக் கிடைக்கும் பலன்கள் நம்ப முடியாத அளவிற்கு அபரிமிதமாக இருக்கும்.