இந்திரா ஏகாதசி: முன்னோர்களின் ஆசியையும் பெருமாளின் அருளையும் பெற இன்று என்ன செய்ய வேண்டும்?

பித்ரு தோஷம் நீங்கி விஷ்ணு லோக பதிவு பெற புரட்டாசி இந்திரா ஏகாதசியின் எளிய வழிபாட்டு முறைகள்.
இந்திரா ஏகாதசி - Purattasi Ekadashi
இந்திரா ஏகாதசி - Purattasi EkadashiImage credit: Gemini
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on: 

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாடும், ஏகாதசி விரதமும் நினைவுக்கு வரும். இந்த ஆண்டு அக்டோபர் 6 இன்று புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசி அனுசரிக்கப் படுகிறது. இந்த ஏகாதசிக்கு இந்திரா ஏகாதசி என்று பெயர். குறிப்பாக மகாளய பட்ச காலத்தில் வருவதால், முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கும், திருமாலின் அருளைப் பெறுவதற்கும் சிறப்பான நாளாக இது கருதப்படுகிறது.

இந்திரா ஏகாதசி என்பது விஷ்ணு பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், பித்ரு வழிபாட்டை முக்கியமாகப் கருதுபவர்களுக்கும் குறிப்பிடத்தக்க நாளாகும். இந்த விரதத்தின் மகிமை புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முன்னோர்களுக்காக செய்யப்படும் பிரார்த்தனை, தர்ப்பணம், தானம் போன்றவற்றுடன் இந்த ஏகாதசி விரதத்தையும் கடைப்பிடிப்பதால் பித்ருக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டைச் சுத்தம் செய்து, பெருமாள் படத்திற்கு விளக்கேற்றலாம். துளசி இலைகளுடன் திருமாலுக்கு பூஜை செய்து, விஷ்ணு நாமங்களைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பதும் வழக்கமாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், இயன்ற அளவு தானதர்மங்கள் செய்வதும் நல்லது.

ஏகாதசி விரதத்தை முழுமையான உபவாசமாகவும், பழங்கள் அல்லது பால் மட்டும் எடுத்துக்கொள்ளும் முறையிலும், உடல்நிலைக்கு ஏற்ற எளிய உணவு முறையிலும் கடைப்பிடிக்கலாம்.

உடல்நிலை, வயது, மருத்துவரின் ஆலோசனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விரத முறையைத் தேர்வு செய்வது அவசியம். தானியங்களைத் தவிர்ப்பது பல மரபுகளில் முக்கியமான விரத நெறியாகக் கருதப்படுகிறது.

மறுநாள் துவாதசி நாளில் உரிய நேரத்தில் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்வது வழக்கம்.

இந்திரா ஏகாதசியின் தனிச்சிறப்பு முன்னோர்களுடன் தொடர்புடையது. பித்ருக்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்து, இயன்றால் தர்ப்பணம் அல்லது பிற பித்ரு காரியங்களை குடும்ப வழக்கப்படி செய்யலாம்.

இந்திரா ஏகாதசி - Purattasi Ekadashi
இந்திரா ஏகாதசி - Purattasi Ekadashi

ஏழைகளுக்கு உணவு வழங்குதல், அன்னதானம் செய்தல், தேவையானவர்களுக்கு பொருட்களை தானமாக வழங்குதல் போன்ற நற்செயல்களையும் செய்யலாம். கோபம், பொய், தீய எண்ணங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, நாள் முழுவதும் இறைச்சிந்தனையுடன் இருப்பதே விரதத்தின் உண்மையான நோக்கமாகக் கருதப்படுகிறது.

இந்திரா ஏகாதசி - கூடுதல் தகவல்கள்

இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. விரதத்துக்கு முந்தைய நாளில் இருந்தே அளவான, சுத்தமான உணவை எடுத்துக்கொண்டு மனதை அமைதியாக வைத்து கொள்ளலாம். ஏகாதசி நாளில் அரிசி உள்ளிட்ட தானிய உணவுகளைத் தவிர்ப்பது பல வைணவ மரபுகளில் வழக்கமாக உள்ளது.

வெங்காயம் பூண்டு அசைவம் போன்றவற்றை தவிர்த்து சாத்விக உணவை எடுத்துக் கொள்வது சில குடும்பங்களில் பின்பற்றப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் அதிக நேரம் விழித்திருப்பதற்குப் பதிலாக, தங்களால் இயன்ற அளவு விஷ்ணு சஹஸ்ரநாமம் நாராயணியம்,விஷ்ணுநாம ஜபம், பகவத் கீதை பாராயணம் அல்லது பெருமாள் பாடல்களைப் பாடலாம்.

விரதம் இருக்க முடியாதவர்கள் இறை நினைவுடன் எளிய உணவை எடுத்துக்கொண்டு வழிபடலாம். குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கட்டாய உபவாசம் மேற்கொள்ளாமல் தங்களுடைய உடல் நிலைக்கு ஏற்ற வகையில் விரதத்தை அனுசரிப்பதே பாதுகாப்பானது. பித்ருக்களை நினைத்து அன்னதானம் அல்லது இயன்ற உதவியைச் செய்வதும் இந்நாளின் நல்லெண்ணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

இதையும் படியுங்கள்:
பித்ருதோஷம் போக்கும் மஹாளய பட்சம்: குடும்ப வளம் பெருக என்ன செய்ய வேண்டும்?
இந்திரா ஏகாதசி - Purattasi Ekadashi

இந்திரா ஏகாதசி நாளில் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வீட்டில் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி துளசி இலைகளால் அர்ச்சனை செய்து விஷ்ணு நாமங்களைச் சொல்லலாம். இயன்றவர்கள் ஏழைகளுக்கு உணவு, உடை அல்லது தேவையான பொருட்களை வழங்குவதன் மூலம் இந்த நாளை அர்த்தமுள்ளதாக கடைபி்பிடிக்கலாம்.

இந்திரா ஏகாதசியின் பிற சுவாரஸ்யமான ஆன்மிகத் தகவல்கள் இதோ;

மகாபாரதப் பின்னணி:

தர்மரின் சந்தேகத்தை தீர்க்க கிருஷ்ண பரமாத்மாவே இந்திரா ஏகாதசியின் பெருமைகளை மகாபாரதத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

இந்திரசேன மன்னன் கதை:

புராணங்களின்படி மாஹிஷ்மதி நாட்டின் மன்னன் இந்திரசேனன் நாரத முனிவரின் வழிகாட்டுதலால் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார். இதன் பலனால் நகரத்தில் துன்புற்ற அவனது தந்தை உடனடியாக விஷ்ணு லோகத்தை அடைந்தார் என்ற வரலாறு உண்டு.

கோதானப் பலன்:

இந்நாளில் செய்யும் சிறிய அளவிலான அன்னதானமும், எள் தானமும் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததற்கு இணையான புண்ணியத்தை தரும் என்பது நம்பிக்கை..

எள் மற்றும் தீர்த்தம்;

பித்ரு வழிபாட்டின்போது விஷ்ணுவின் பாத தீர்த்தத்தையையும் எள்ளையும் பயன்படுத்துவது முன்னோர்களின் சாபங்களை நீக்கி அவர்களுக்குப் பித்ரு தோஷ நிவர்த்தியை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
பரிவர்த்தினி ஏகாதசி: யோக நித்திரையில் பெருமாள் நிலை மாறும் அதிசயம்! என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
இந்திரா ஏகாதசி - Purattasi Ekadashi

பாகவத பாராயணம்:

ஏகாதசி அன்று வீட்டில் ஸ்ரீமத் பாகவதம் அல்லது விஷ்ணு புராணம் வாசிப்பது குடும்பத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களைப் போக்கி அமைதியையும் லஷ்மி கடாட்சத்தையும் கொண்டு சேர்க்கும்.

உடலை மட்டும் வருத்திக்கொள்வது ஏகாதசி விரதத்தின் நோக்கமல்ல; மனதைத் தூய்மைப்படுத்தி, இறைவனை நினைத்து, முன்னோர்களை நன்றியுடன் நினைவுகூர்வதே இதன் ஆன்மிகப் பொருள். இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் புரட்டாசியில் வரும் இந்திரா ஏகாதசியின் சிறப்பையும், அதன் வழிபாட்டு முறையையும் அறிந்து, நம் குடும்ப மரபுக்கு ஏற்ற வகையில் பக்தியுடன் இந்த நாளை கடைப்பிடிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com