பித்ருதோஷம் போக்கும் மஹாளய பட்சம்: குடும்ப வளம் பெருக என்ன செய்ய வேண்டும்?

அறியாமல் செய்த தவறுகளுக்கும் முன்னோர்களின் சாபங்களுக்கும் தீர்வு தரும் புனிதமான 15 நாட்கள் வழிபாடு!
மஹாளய பட்சம் - Mahalaya Paksham Dates
மஹாளய பட்சம் - Mahalaya Paksham DatesImage credit: Gemini
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on: 

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில், தேய்பிறையின் 15 நாட்கள் முன்னோர்களை வழிபட உகந்த காலமாகக் கருதப்படுகிறது. இதுவே 'மஹாளய பட்சம்' என அழைக்கப்படுகிறது. "மஹாளயம்" என்றால் "பெரிய கூட்டமாக உறையும் இடம்" என்றும், "பட்சம்" என்றால் "15 நாட்கள்" என்றும் பொருள். இந்த 15 நாட்களும் பித்ருக்கள் (முன்னோர்கள்) பூமிக்கு வந்து தங்களின் வம்சாவளியினரை ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.

மஹாளய பட்சத்தின் முக்கியத்துவம்

சாதாரண நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்யத் தவறியவர்கள் அல்லது தங்கள் முன்னோர்களின் திதி மறந்தவர்கள், இந்த மஹாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் அனைத்து முன்னோர்களின் ஆசியையும் பெறமுடியும். பெற்றோர், தாத்தா-பாட்டி மட்டுமின்றி, மறைந்த உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவருக்குமே இந்த நாட்களில் நினைவாஞ்சலி செலுத்தலாம்.

செய்ய வேண்டியவை - தர்ப்பணம் அளித்தல்:

நீர், எள் மற்றும் தர்ப்பை புல் கொண்டு முன்னோர் களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

தான தர்மங்கள்:

ஏழைகள் மற்றும் அந்தணர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் (ஆடை) மற்றும் எள் தானம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

பசு வழிபாடு:

அகத்திக் கீரை மற்றும் பழங்களை பசுவுக்குக் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும்.

எளிய உணவை உற்றாருக்கு அளித்தல்:

முன்னோர்களுக்குப் பிடித்த சைவ உணவுகளைச் சமைத்து படைத்து, காக்கைக்கு வைத்த பிறகே உண்ண வேண்டும்.

மஹாளய பட்சம் - Mahalaya Paksham Dates
மஹாளய பட்சம் - Mahalaya Paksham DatesImage credit: Gemini

தவிர்க்க வேண்டியவை:

இந்த 15 நாட்களும் புதிய தொழில் தொடங்குதல், வீடு கிரகப்பிரவேசம் செய்தல், திருமணம் போன்ற சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.

புதிய ஆடைகள், நகைகள் அல்லது சொத்துக்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

அசைவ உணவுகள், வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதையும், மது அருந்துவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

யாருடனும் வீண் விவாதம், கோபம் மற்றும் பிறரை இழிவாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

மஹாளய அமாவாசை!

மஹாளய பட்சத்தின் இறுதி நாளே 'மஹாளய அமாவாசை' ஆகும். இது மிகவும் சக்திவாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் புண்ணிய தீர்த்தங்களில் (நதிகள், கடல்கள்) நீராடி பித்ரு கடன்களைச் செய்வது அளப்பரிய பலன்களைத்தரும். அன்றைய தினம் செய்யப்படும் எள்ளும் நீரும் இறைக்கும் தர்ப்பணம், நமது தலைமுறைகளுக்கே அமைதியையும் செழிப்பையும் தரும்.

இதையும் படியுங்கள்:
ஆடி அமாவாசை 2026: பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெற தர்ப்பணம் செய்யும் முறை!
மஹாளய பட்சம் - Mahalaya Paksham Dates

மஹாளய பட்சத்தின் சிறப்பு!

மஹாளய பட்ச காலம் என்பது வெறும் சடங்கு முறை மட்டுமே அல்ல. அது நம் பரம்பரை வம்சவழியை நன்றியோடு நினைவுகூறும் ஒரு புனிதமான வாய்ப்பாகும். தாய் தந்தை வழியில் மறைந்த சொந்தங்கள் மட்டுமின்றி நமக்கு வாழ்வியல் நெறிகளைக் கற்பித்த குருமார்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் மறைந்த ஜீவராசிகளுக்குக் கூட இந்த நாட்களில் தர்ப்பணம் செய்ய முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

கருடபுராணத்தின் படி இந்த 15 நாட்களும் பித்ரு தேவதைகள் பூமிக்கு மிக அருகில் வருவதால் நாம் மனப்பூர்வமாக அளிக்கும் எள்ளும் நீரும் அவர்களை உடனடியாக சென்றடைகிறது. இதனால் பித்ரு சாபம், பித்ரு தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதியும் சுபிட்சமும் உண்டாகும்.

மேலும் இந்நாட்களில் செய்யும் அன்னதானம் கோடி மடங்கு புண்ணியத்தைத் தந்து தலைமுறை தலைமுறையாகத் தொடரும் வறுமை மற்றும் தடைகளைப் போக்கி சந்ததியினருக்கு மகத்தான நல்வாழ்வை அருள்வதாக ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

மஹாளய பட்சத்தின் கூடுதல் சிறப்புகள்!

மஹாளய பட்சத்தின் 15 நாட்களில் ஒவ்வொரு திதிக்கும் தனித்துவமான பலன்கள் உண்டு.. உதாரணத்திற்கு பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வது சொத்து சேர்க்கையையும், அஷ்டமி திதியில் செய்வது அறிவாற்றலையும்,நவமி‌ திதியில் செய்வது குடும்பத்தில் அமைதியையும் தரும் என்பது நம்பிக்கை.

மகாபாரதத்தில் கொடை வள்ளல் கர்ணன் மறைந்த பிறகு சொர்க்கத்திற்கு சென்ற போது அவன் செய்த தங்க தானங்களால் அவனுக்கு உன்னத இடம் கிடைத்தாலும் உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை.. தன் வாழ்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணமோ அன்னதானமோ செய்யாததே இதற்கு காரணம் என்பதை உணர்ந்த கர்ணன் இந்திரனின் அனுமதியோடு 15 நாட்கள் பூமிக்கு வந்து பித்ரு கடன்களை நிறைவேற்றி சாப விமோசனம் பெற்றான்.

அந்த புனிதமான 15 நாட்களே மஹாளய பட்சமாக அனுசரிக்கப்படுகிறது. எனவே இந்நாட்களில் முன்னோர்களுக்கு செய்யும் எள், நீர் தர்ப்பணமும், பசித்தோர்க்கு அளிக்கும் உணவும் நம் வம்சத்தையே பித்ரு தோஷங்களிலிருந்து காக்கும் ஆன்மிகக் கவசமாகும்.

நமக்கு வாழ்வளித்த முன்னோர்களை நினைத்துப் போற்றுவதும், அவர்களுக்கு நன்றி செலுத்துவதும் நமது தலையாய கடமையாகும். இந்த மஹாளய பட்ச காலத்தில் (செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை) நாம் செய்யும் தான தர்மங்களும், தர்ப்பணமும் நமது குடும்பத்திற்கு முன்னோர்களின் பரிபூரண ஆசியையும், சந்ததியினருக்கு நோயற்ற வாழ்வையும், சுபிட்சத்தையும் தரும்.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
மஹாளய பட்சம் - Mahalaya Paksham Dates

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் மஹாளய பட்சத்தின் ஆன்மிகச் சிறப்பும், நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதன் முக்கியத்துவமும் தெளிவாகப் புலப்படும்.. பித்ருக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும், சந்ததியினரின் வளமான வாழ்விற்கும் வழிவகுக்கும்..எனவே இந்நாட்களில் முன்னோர்களை மனதார நினைத்து வழிபட்டு ,தான தர்மங்கள் செய்து அவர்களின் பரிபூர்ண அருளையும், இறைவனின் ஆசிகளையும் பெறுவோமாக!

logo
Kalki Online
kalkionline.com