
விநாயகர் என்றாலே எல்லோரது மனதிலும் எழுவது 'முழு முதல் கடவுள்' என்பதுதான். புதிய தொடக்கங்களின் அருளாளராக விளங்கும் பிள்ளையார். எளிமையிலும் சிறந்தவராக திகழ்கிறார் . அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், அன்பும் காரணமாக எளிய வழிபாடுகளாலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வழிபடுவது பெரும்பாலான மக்களிடையே வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், விநாயகரை வழிபடும்போது, நாம் பலரும் செய்யும் ஒரு முக்கியமான செயல் தோப்புக்கரணம் போடுவது. இந்த செயல், வெறும் நம்பிக்கையோடு மட்டுமல்லாமல், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் புராணக் கதைகளும், அறிவியல் ரீதியான காரணங்களும் ஆதாரமாக உள்ளன.
தோப்புக்கரணத்தின் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. நாம் நெற்றிப்பொட்டில் கைகளை மெதுவாக தாக்கும்போது, நினைவாற்றலை மேம்படுத்தும் அமிர்த சுரப்பிகள் சுறுசுறுப்பாக சுரக்கின்றன. காதுகளை பிடித்து இழுக்கும் செயல் நம் அகங்காரம் குறையச் செய்கிறது. 'நான்' என்ற அகங்கார உணர்வை விட்டுவிட்டு, மனிதர் பணிவுடன் வாழ உதவும் வகையில் இந்த உடற்பயிற்சி அமைந்துள்ளது.
இத்தகைய தோப்புக்கரணம் இன்று உலகளவில் 'சூப்பர் பிரைன் யோகா' எனும் பெயரில் பரவலாக அறியப்பட்டு, பலரும் அதை தினசரி யோகா பயிற்சியாக செய்து வருகின்றனர். இதில், இரண்டு காதுகளை பிடித்து உட்கார்ந்து எழுவதன் மூலம் மூளையின் செயல்திறன் மேம்படுகிறது. அதுமட்டுமின்றி, கால்களில் உள்ள சோலியஸ் எனும் தசைகள் நாம் தோப்புக்கரணம் போடும்போது, உடல் முழுவதும் ஆற்றலை பரவுகிறது.
தோப்புக்கரணம் என்பது ஒரு எளிமையான வழிபாட்டு செயலாகத் தோன்றினாலும், அதில் உள்ள அறிவியல் மற்றும் உடல்நல பயன்களை உணர்ந்தால், அது நம் தினசரி வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற ஒரு பழக்கம் ஆகிறது. விநாயகரை எளிமையான முறையில் வழிபடும் இந்த பழக்கம், நம்மை ஆன்மீக வழியில் பலவீனமான இடங்களில் வலிமையூட்டுகிறது.
விநாயகரின் அருளுடன் போடப்படும் தோப்புக்கரணத்தினால், நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவதுடன் , தெளிவான சிந்தனைகளை கொண்டு வருவதற்கும் உதவுகிறது. மேலும், தினசரி இந்த பயிற்சியினை செய்வதன் மூலம், உடலின் பல பகுதிகளில் புதிய சக்தி ஏற்படுகிறது.
அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் விநாயகரை வழிபட்டு தோப்புக்கரணம் செய்வதன் மூலம் நினைவாற்றல், அறிவாற்றல் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய அனைத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடிகிறது.