இறைவனைப் போற்றுவதால் கிடைக்கும் இன்பமே பேரின்பம்!

ஆகஸ்ட் 25, கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினம்
Praising God is bliss
Thirumuruga kirubanandha variyar swamigal
Published on

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினம் இன்று. இத்தினத்தில் அவர் அருளிய அருளுரைகள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

* கண்ணுக்குத் தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு சேவை செய்வதும் நமது கடமையாகும்.

* தாலாட்டி, சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை. அதுபோல கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே, கடவுளும் நம் தாய் போன்றவர்தான்.

* நல்ல உணவை உண்டால் உடல் வளரும். நல்ல நூல்களைப் படிப்பதால் நல்லுணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் எப்போதும் இறைவனை சிந்தித்தால் உயிர் வளரும்.

* ‘குட்டு பட்டாலும் மோதகக் கையனிடம் குட்டுப் பட வேண்டும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி சிறிது மாறுபட்டு, ‘குட்டு வாங்கினாலும் மோதிரக் கையால் குட்டு வாங்க வேண்டும்’ என்று மாறிவிட்டது. இது தவறு. குட்டுப்பட்டாலும் மோதகரம் ஏந்திய கையை உடைய விநாயகரிடம்  குட்டுப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
நேபாளத்தில் ஒரு சிறுமியை ஏன் கடவுளாக வழிபடுகிறார்கள்? - அதிர்ச்சித் தகவல்!
Praising God is bliss

* விநாயகர் அறிவின் சொரூபம். அவரை வணங்கி தலையில் குட்டிக் கொண்டால் மங்கியுள்ள அறிவு தூண்டப்படும். அதனால்தான் விநாயகரை வணங்கும்போது தலையில் மூன்று முறை குட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். அவ்வாறு செய்பவர்கள் உடல் வளமும் அறிவு நலனும் பெற்று இனிது வாழ்வார்கள். மேலும், அவர்களிடம் இருந்த அஞ்ஞானம் அகன்று  மெய்ஞானம் உண்டாகும்.

* தூங்குகிறவன் வாயில் திடீரென்று தேன் விட்டால் அவன் பயந்து போய் அதை விட்டவனை அடித்து விடுவான். விழித்த பிறகு இன்னும் சிறிது தேன் விடு என்று கூறுவான். அதுபோல் ஞானம் இல்லாதவனுக்கு கடவுளைப் பற்றிய சொல் கசக்கும். அருள் அறிவு வந்தால்தான் அதன் இனிப்பு தெரியும்.

* கடலின் ஆழத்தைப் பார்க்க ஒரு நரி சென்றதாம். தனது வாலை கொண்டு ஆழம் பார்த்ததாம். பிறகு கடலின் ஆழம் எனது வாலின் நீளம்தான் என்றதாம். அது போல்தான் இருக்கிறது கடவுள் உண்டா? இல்லையா என்ற ஆராய்ச்சியாளர்களின் செயல். கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை. அதனால் கடவுள் இல்லை என்று பொருள் கொள்ள முடியாது. நமது உயிர் கூட கண்ணுக்குத் தெரிவதில்லை. அதற்காக உடலில் உயிர் இல்லை என்று சொல்ல முடியுமா? உயிர் இருப்பதால்தான் உடல் அசைகிறது என்று உணர்வது போல், கடவுள் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது என்று நம்ப வேண்டும். ‘கடவுளைக் காட்டு’ என்று உங்களிடம் ஒருவர் கேட்டால், ‘உடலுக்குள் மறைந்திருக்கும் உயிரை முதலில் காட்டு’ என்று திருப்பிக் கேளுங்கள்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகமும், அறிவியலும் இணையும் 8 ரகசியங்கள்!
Praising God is bliss

* ‘இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்’ என்பது ஒரு பழமொழி. இதற்கு தான் இருக்கும் இடத்தைத் தந்தால் மடத்தையே பிடுங்கி விடுவான் என்று பொருள் கூறுகிறார்கள். இது தவறு. ‘நமது இதயத்தில் இறைவனுக்கு இடம் கொடுத்தால் நமது மடம் என்ற அறியாமையை இறைவன் பிடுங்குவார்’ என்பதே இதன் பொருள். அதனால் ஆண்டவனுக்கு நமது உள்ளத்தில் இடம் தர வேண்டும் அல்லது நமது இல்லத்தில் இறைவனது அடியவர்களுக்கு இடம் தர வேண்டும். அவ்வாறு கொடுத்தால் இடம் கொடுத்தவர் இறைவன் அருளால் பல நன்மைகளைப் பெறுவார்.

* நிதி இருந்தால் நீதி இருக்க வேண்டும். மனம் இருந்தால் மானம் இருக்க வேண்டும். தனம் இருந்தால் தானம் இருக்க வேண்டும். செல்வம் அழியாமல் இருக்க ஏழைகள் மனம் நொந்து கண்ணீர் விடும்படியான பாவச் செயல்களைச் செய்யக் கூடாது. பிறருடைய பொருள் உங்களுக்கு வர வேண்டுமென்று கனவிலும் நினைக்கக் கூடாது. நியாயமற்ற வழியில் பொருள் தேடக் கூடாது.

இதையும் படியுங்கள்:
விநாயகர் கோயில்களும் வித்தியாசமான தகவல்களும்!
Praising God is bliss

* இன்பங்கள் பல வகையில் வரும். நல்ல பஞ்சணையில் படுக்கும்போது இன்பமாக இருக்கும். ஆனால், தூங்கிய பின் தரையில் படுப்பதும் பஞ்சணையில் படுப்பதும் ஒன்றுதான். உண்பதினாலே இன்பம் வரும். பாதாம் அல்வா அப்படி இன்பம் தரக்கூடியது. அதை நாக்கு நுனியில் வைத்தால்தான் இன்பம். அடிநாக்கு போனால் அதன் சுவை தெரியாது. நுனி நாக்கில் இருந்து அடி நாக்கிற்கு இந்த பாதாம் அல்வா போக எவ்வளவு வினாடியாகும். ஓரிரு நொடிதான் வயிற்றுக்குள் சென்று விட்டால் அதற்கு விலாசமே வேறு.

இந்த உலகில் என்ன என்ன இன்பங்கள் இருந்தாலும் அத்தனையும் கடுகு அளவுதான். இறைவனைப் போற்றுவதால் கிடைக்கும் இன்பம்  இருக்கிறதே, அதுதான் உண்மையான இன்பம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com