
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில் புகழ் பெற்ற சரஸ்வதி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகில் ஒரு கிலோ மீட்டர் வடக்கே செதலபதி என்ற கிராமம் உள்ளது. இங்கு அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் எங்கும் தரிசிக்க முடியாத வகையில் தும்பிக்கை இல்லாமல், இரண்டு கைகளுடன் விநாயகர் மனித முகத்தில் காட்சி தருகிறார். விநாயகர் என்றாலே யானை முகத்தில் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது.
கடலூர் அருகே உள்ள திருநாரையூர் அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் ‘பொள்ளாப்பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார். ‘பொள்ளா’ என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர். கோயிலில் சிலை வடிவில் இருக்கும் சந்திரனுக்கு பூஜை செய்வது வழக்கம். ஆனால், வானில் இருக்கும் சந்திரனுக்கு தீபாராதனை காட்டி, பூஜை செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தியன்று இரவில் இப்பூஜை நடக்கிறது. அன்று பொள்ளாப்பிள்ளையாருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். பின்பு, பிராகாரத்தில் ஓரிடத்தில் வானத்திலுள்ள சந்திரனுக்காக ஒரு குத்துவிளக்கு ஏற்றி,நிலாவை நோக்கி தீபாராதனை காட்டுவர். இதைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.
சென்னை - திருவள்ளூர் அருகே உள்ள திருமழிசை வேங்கடேசப் பெருமாள் கோயிலில் விஷ்வக்ஸேனர் என்ற பெயரில் யானை முகத்துடன் விநாயகர் காட்சி தருகிறார். இந்த அரிய வடிவத்தில் விநாயகரை இங்கு மட்டுமே தரிசிக்கலாம்.
சீர்காழி - தரங்கம்பாடி வழித்தடத்தில் திருவெண்காட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோயில். இக்கோயிலின்.மேற்கு திருச்சுற்றில் மகாகணபதி உள்ளார். நண்டு பூஜித்த கணபதி இவர். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். இங்கு மட்டுமே விநாயகருக்கு நண்டுதான் வாகனம். மூஷிகம் இல்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது ஒப்பிலா மண்ணீஸ்வரர் கோயில். இங்கு பல்லவர் கால விநாயகர், பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறார். இவரின் கண்கள் இரண்டும் வலது, இடது என நாம் எந்த இடத்தில் நின்று நோக்கினாலும், அவர் நம்மை மட்டுமே பார்ப்பதாகக் காட்சி தருவது அதிசயமான நிகழ்வாகும். இந்த விநாயகர் பத்மாசனத்தில், மேல் இரு கரங்களில் ஒன்றில் யோக தண்டம் ஏந்தியும், மற்றொன்றில் ஜப மாலை, கீழ் இரு கரங்களில் ஒன்றில் ஓலைச்சுவடியும், மற்றொன்றில் கரும்பும் ஏந்தி காட்சி தருகிறார். இவரின் பார்வை அதிசயத்தை இங்கு மட்டுமே காணலாம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் உள்ளது ஸ்ரீ சர்ப்ப விநாயகர் கோயில். இவருக்கு சர்ப்பம், தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது. விநாயகரின் உடலில் ஐந்து பாம்புகள் அணிகலன்களாக உள்ளன. ராகு-கேது தோஷங்கள் இவரை வழிபட நீங்கும்.
திண்டிவனம் அருகே உள்ள தீவனூரில் அமைந்துள்ளது 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுயம்பு ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் கோயில். விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்பாலிக்கும் அற்புத விநாயகர் பொய்யாமொழி பிள்ளையார். இவரை தொலைவில் இருந்து தரிசித்தால் சிவலிங்கம் போல காட்சியளிப்பார். அபிஷேக ஆராதனைகள் செய்யும்போதும் சிவலிங்க காட்சியே தொடரும். அபிஷேகம் முடிந்து அலங்காரங்கள் செய்த பிறகே சிவலிங்க வடிவத்திற்குள் இருக்கும் சுயம்பு விநாயகரின் திருமேனி புலப்படும். இவரின் கோயிலுக்குப் பின்புறக் குளக்கரையை ஒட்டி மூன்று ஆலமரங்கள் உள்ளன. இந்த மூன்றும் மும்மூர்த்திகளின் வடிவமாகக் கருதப்படுகின்றன.
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள திருச்செந்துறை கிராமத்தில் சந்திரசேகர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள விநாயகர் 'உச்சிஸ்ட கணபதி' என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள விநாயகர் தனது மடியில் அம்பாளை அமர்த்தியபடி காட்சி தருகிறார். இந்த சிறப்பு வேறு எங்கும் அமைந்திருக்கவில்லை.
கோவை மாவட்டம் சூலூர் அருகில் உள்ள அப்பநாயக்கன்பட்டியில் தலை பெண் வடிவமாக உள்ள பெண் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்கள் செல்வதில்லை. பெண்களே பூசாரிகளாக உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம், கிலரெய்பூர் எனுமிடத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு ‘அனுமனை வென்ற விநாயகர்’ என்று பெயர். எட்டு கால பூஜை நடக்கும் இங்கு கோதுமை அல்வாதான் நைவேத்தியம். இந்தப் பகுதியில் கோதுமை அதிகம் விளைவதால் இப்படி. இப்பகுதியில் கோதுமையை அறுவடை செய்தவுடன் கோதுமை வைக்கோலால் இந்த விநாயகருக்கு கூரை போடுகிறார்கள்.
குஜராத் மாநில அகமதாபாத் அருகில் உள்ள சதரஸ் எனும் சிற்றூரில் உள்ள விநாயகர் கோயிலில், கடலையும், பருத்தியும் நன்கு விளைய வேண்டும் என்பதற்காக கடலை புண்ணாக்கை தரையில் ஓர் அடி ஆழத்தில் புதைத்து அதன் மீது விநாயகர் சிலையை வைத்துள்ளனர். இங்கு உச்சிகால பூஜையில் நைவேத்தியம் பருத்தியும், கடலைப் புண்ணாக்கும்தான்.